Skip to main content

தொடரப்போகும் அரசியலமைப்பு மீறல்கள்

-

By: ராகுல்ஜீ

2015 ஆகஸ்ட் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு பாராளுமன்றத்தில் அறுதிப்பெரும்பான்மை ஆசனங்கள் கிடைத்தாலும் கூட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக ஒருபோதும் நியமிக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதை எவரும் மறந்திருக்கமாட்டார்கள்.அநத வருடம் ஜனவரி ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்சவைத் தோற்கடித்து ஆட்சியதிகாரத்துக்கு வந்தபின்னர் சில வாரங்களுக்குள்ளாகவே சுதந்திர கட்சியின் தலைவராக சிறிசேன பொறுப்பேற்றபோதிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரசாரங்களில் எந்தவிதமான பங்கையும் வகிக்கமுடியாதவராகவே இருந்தார்.

சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராக தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டு ராஜபக்ச பிரசாரங்களுக்கு தலைமை தாங்கியிருக்காவிட்டால் அவர்களுக்கு 95 ஆசனங்கள் பாராளுமன்றத்தில் கிடைத்திருக்காது.சுதந்திர இலங்கையின் அரசியல் வரலாற்றில் தலைவரின் பங்கேற்பு இல்லாமல் ஒரு கட்சி முதன்முதலாக பொதுத்தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்த விசித்திரத்தையும் நாம் கண்டோம். ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான எதிரணியின் பொதுவேட்பாளராகப் போட்டியிட்ட சிறிசேன தான் வெற்றிபெற்று ஜனாதிபதியாகியதும் ஐ.தே.க.வின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக நியமிக்கப்போவதாக நாட்டு மக்களுக்கு வாக்குறுதியளித்த அவர் அதன்பிரகாரம் பதவியேற்ற மறுநாளே விக்கிரமசிங்கவைப் பிரதமராக்கினார்.

முன்னைய பாராளுமன்றத்தில் 48 உறுப்பினர்களே இருந்த நிலையில் அவர்கள் அரசாங்கத்தை அமைத்தார்கள். ஜனாதிபதி தேர்தல் தோல்வியினால் துவண்டுபோயிருந்த ராஜபக்ச முகாம் அது குறித்தெல்லாம் கேள்வி கேட்கக்கூடிய நிலையில் இருக்கவில்லை. இவையெல்லாவற்றையும் நினைவுபடுத்தவேண்டிய நிலை கட்டுரையாளருக்கு ஏற்பட்டதற்குக் காரணம் கடந்த வியாழக்கிழமைதன்னைச் சந்தித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவினரிடம் ஜனாதிபதி சிறிசேன தெரிவித்த நிலைப்பாடு ஒன்றேயாகும்.அதாவது பதவி நீக்கப்பட்ட பிரதமர் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சி அதற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் இருப்பதாக நிரூபிக்கக்கூடிய நிலை தோன்றினாலும் கூட அவரை மீண்டும் பிரதமராக நியமிக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி அறிவித்திருக்கிறார்.

மூன்று வருடங்களுக்கு முன்னர் தனது முன்னாள் தலைவரான ராஜபக்ச தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றினாலும் கூட அவரைப் பிரதமராக நியமிக்கப்போவதில்லை என்று கூறிய ஜனாதிபதி இன்று கடந்த சுமார் 4 வருடங்களாக தன்னுடன் அரசியல் சகவாழ்வு நடத்திய விக்கிரமசிங்கவை மீண்டும் அந்தப் பதவிக்கு நியமிக்கப்போவதில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

என்னே ஒரு முரண்நகையான திசைமாற்றம்...! இலங்கையின் இரு பிரதான அரசியல் கட்சிகளும் வரலாற்றில் முன்னென்றுமில்லாத வகையில் பங்காளிகளாக அமைத்த ஐக்கிய தேசிய அரசாங்கம் தேசிய இனப்பிரச்சினை உட்பட நாடும் மக்களும் எதிர்நோக்குகின்ற முக்கிய நெருக்கடிகளுக்கு கருத்தொருமிப்பின் அடிப்படையில் இணக்கபூர்வமான தீர்வுகளைக் காண்பதற்கான சூழ்நிலைகளை உருவாக்கக்கூடிய அரிய வாய்ப்பு என்று மக்கள் எதிர்பார்த்தார்கள்.ஐக்கிய தேசாய அரசாங்கத்துக்கு ' நல்லாட்சி ' அரசாங்கம் என்று நாமஞ்சூட்டிக்கொண்ட ஜனாதிபதி சிறிசேனவும் பிரதமர் விக்கிரமசிங்கவும் ஜனநாயகத்தை மீட்டெடுக்கப்போவதாகவும் புதியதோர் அரசியல் கலாசாரத்தைத் தோற்றுவிக்கப்போவதாகவும் நாட்டுகம்களுக்கு வாக்குறுதி அளித்தார்கள்.ஆனால்இ இன்று தோன்றியிருக்கும் அரசியல் நெருக்கடி அவர்கள் இருவரும் கொண்டுவந்திருக்கும் புதிய அரசியல் கலாசாரத்தின் இலட்சணத்தை முழு உலகிற்கும் அம்பலப்படுத்தியிருக்கிறது.

பாரம்பரியமான அரசியல் எதிரிகளான ஐக்கிய தேசிய கட்சியும் சுதந்திர கட்சியும் அரசாங்கத்தில் பிரதான பங்காளிகளாக இணைந்ததால் பழைய வக்கிரத்தனமான கட்சி அரசியல் மாச்சரியங்கள் தணிந்துபோகக்கூடிய நிலைவரம் தோன்றும் என்று எதிர்பார்த்தவர்கள் இருக்கிறார்கள்.

ஆனால்இ இரு பிரதான கட்சிகளினதும் அரசியல்வாதிகள் கடந்த மூன்று வருடங்களாக செய்த ஆட்சி நிருவாகம் அரசாங்கத்தில் பங்காளிகளாக இருந்தவண்ணமே கட்சி அரசியலை எவ்வாறு பழைய வன்மத்துடன் தொடர்ந்து முன்னெடுப்பது என்பதற்கான பரிசோதனை முயற்சியோ என்று எண்ணத்தோன்றுகிறது. அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சிகளிடையே அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள்இ பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் உட்பட அனேகமாக சகல விவகாரங்களிலுமே முரண்பாடுகள் தீவிரமடைந்துகொண்டிருந்த போதிலும்இ பிரதமர் விக்கிரமசிங்கவைப் பதவிநீக்கிவிட்டு அவரின் இடத்துக்கு தனது பிரதான அரசியல் எதிரியாக இரு வாரங்களுக்கு முன்னர் வரை விளங்கிய மகிந்த ராஜபக்சவை நியமிக்கும் அளவுக்கு அதிரடி அரசியல் நடவடிக்கையை -- உள்நாட்டில் மாத்திரமல்ல வெளியுலகிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நடவடிக்கையை ஜனாதிபதி சிறிசேன எடுப்பார் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. விக்கிரமசிங்கவைப் பதவி நீக்கியதிலும் பிறகு ராஜபக்சவை பிரதமராகக்கொண்டு புதிய அமைச்சரவையை அமைப்பதிலும் பாராளுமன்றத்தை இடைநிறுத்தியதிலும் ஜனாதிபதி சிறிசேன கடைப்பிடித்திருக்கும் அணுமுறையினதும் முனனெடுத்த செயற்பாடுகளினதும் அரசியலமைப்புத் தகுதி குறித்து கடந்த இரு வாரங்களாக தீவிரமான விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அதிகப் பெரும்பாலான வாதங்கள் அவரவரின் கட்சி அரசியல் நிலைப்பாடுகளுக்கு இசைவான முறையிலேயே முன்வைக்கப்படுவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஐக்கிய தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்த சில மணித்தியாலங்களில் திடுதிப்பென ராஜபக்சவை பிரதமராகப் பதவிப்பிரமாணம் செய்துவைத்த ஜனாதிபதியின் செயல் இயல்பாகவே பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியது. தனது கட்சியினர் அரசாங்கத்தில் இருந்து விலகத் தீர்மானித்துவிட்டார்கள் என்பதை விக்கிரமசிங்கவுக்கு முறைப்படி அறிவித்து பிறகு அவரிடம் உங்களுக்கு பெரும்பான்மை ஆதரவு பாராளுமன்றத்தில இருந்தால் நிரூபியுங்கள் அல்லது புதிய ஒருவரை பிரதமராக நியமித்து அரசாங்கத்தை அமைக்குமாறு கேட்கப்போகிறேன் என்று ஜனாதிபதி கூறியிருக்கவேண்டும்.

அதுவே ஜனநாயக அடிப்படையிலான செயலாகவும் இருந்திருக்கும். அதைவிடுத்து மறுநாள் பாராளுமன்றத்தை இடைநிறுத்தும் உத்தரவைப் பிறப்பித்ததுடன் ஏனைய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களை தனது புதிய நேசசக்திகளின் பக்கம் இழுப்பதற்கு வசதிசெய்துகொடுக்கும் அணுகுமறைகளையும் ஜனாதிபதி கடைப்பிடித்தமை கடந்த இருவாரங்களாக இடம்பெற்றுவருகின்ற நிகழ்வுப்போக்குகளை " அரசியலமைப்புச் சதி " யாக அம்பலப்படுத்தி நிற்கின்றன. தன்னை பதவிநீக்கியது அரசியலமைப்புக்கு முரணானது என்று கூறும் விக்கிரமசிங்க பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகையில் இருந்து வெளியேற மறுக்கிறார். மறுபுறத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் உறுதியான ஆதரவுடன் பிரதமர் ராஜபக்ச அமைச்ரவைக்கு உறுப்பினர்களை ஒவ்வொரு நாளும் பெரும்பாலும் மாலையில் நியமித்துக்கொண்டிருக்கிறார்.

பெரும்பான்மைப்பலத்தை நிரூபிப்பதற்கு பாராளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு ஐக்கிய தேசிய கட்சியும் அதன்நேச சக்திகளும் மாத்திரமல்லஇ உலக நாடுகளும் குறிப்பாக மேற்குலக நாடுகள் ஜனாதிபதியைக் கேட்டவண்ணம் இருக்கின்றன. நவம்பர் 16 வரை பாராளுமன்றத்தை இடைநிறுத்திய ஜனாதிபதி இரு நாட்கள் முன்னதாக 14 ஆம் திகதி கூட்டுவதற்கு அறிவிப்புச் செய்திருக்கிறார். புதிய பிரதமர் ராஜபக்சவை இதுவரையில் சீனா மாத்திரமே வாழ்த்தியிருக்கிறது.கொழும்பில் உள்ள சீனத்தூதுவர் ராஜபக்சவையும் விக்கிரமசிங்கவையும் சந்தித்துப் பேசினார்.இந்தியாவும் அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளும் கடைப்பிடிக்கும் நிலைப்பாடு இலங்கையின் இன்றைய அரசியல் மற்றும் அரசியல் நெருக்கடியின் பின்புலத்தில் இருக்கக்கூடிய புவிசார் அரசியலை தெளிவாக உணர்த்துவதாக இருக்கிறது.

பாராளுமன்றம் எதிர்வரும் புதன்கிழமை கூடும்போது ஜனாதிபதியின் கொள்கை விளக்கஉரைக்குப் பிறகு புதிய அரசாங்கத்திற்கு சபையில் பெரும்பான்மைப் பலம் இருக்கிறதா என்பதை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்று சபாநாயகர் கரு ஜெயசூரிய எடுத்திருக்கும் நிலைப்பாடடை ஜனாதிபதி சிறிசேன -- பிரதமர் ராஜக்ச தரப்பு எதிர்க்கிறது. பாராளுமன்றம் கூடும் முதல்நாளே அந்த வாக்கெடுப்பை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள் விடுத்திருப்பது இங்கு முக்கியமாகக் கவனிக்கவேண்டியதாகும்.

பாராளுமன்றம் கூடும்போது ஜனாதிபதியின் உரைக்குப் பிறகு சபை உடனடியாக ஒத்திவைக்கப்படவேண்டும் என்பதே புதிய அரசாங்கத்தின் வலியுறுத்தலாக இருக்கிறது.ஆனால் இன்றைய நிலைவரப்படி நோக்குகையில் சபாநாயகர் அதற்கு இணங்கக்கூடிய சாத்தியம் இருப்பதாகத் தோன்றவில்லை. அவ்வாறானால் அன்றைய தினம் பாராளுமன்றத்தில் படுமோசமான குழப்பநிலை ஏற்படக்கூடிய ஆபத்துஇருக்கிறது. ஒவ்வொரு நாளும் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு அமைச்சரவையை அமைக்கும் பணியைப் பூர்த்திசெய்வதை நோக்கி ஜனாதிபதியும் ராஜபக்சவும் விரைவாக நகருகிறார்களே தவிர அவர்கள் எதிர்பார்த்தவாறு இன்னமும் 113 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை திரட்ட முடியாமல் இருக்கிறது. பாராளுமன்ற உறுப்பினர்கள் விலைபேசப்படுவதென்பது இன்று காணப்படுவதைப்போன்று முன்னர் என்றுமே பகிரங்கமானதாக இருக்கவில்லை என்ற யதார்த்தம் இலங்கையின அரசியல் கலாசாரம் எந்தளவுக்கு முடைநாற்றமெடுக்கிறது என்பதை வெளிக்காட்டுகிறது.

இதனிடையே அரசியல் நெருக்கடியை தங்களுக்கு அனுகூலமான முறையில் முடிவுக்கு கொண்டுவர முடியாத பட்சத்தில் புதிய பொதுத் தேர்தலைச் சந்திப்பதற்கு வசதியாக பாராளுமன்றத்தை கலைப்பது குறித்தும் சிறிசேன யோசிப்பதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன. அரசியலமைப்புக்கான 19 திருத்தத்தின் பிரகாரம் பாராளுமன்றத்தின் முதல் கூட்டம் நடைபெற்ற தினத்துக்குப் பிறகு நான்கரை வருடங்கள் கடந்த பின்னரே ஜனாதிபதியினால் அதைக் கலைக்கமுடியும்.ஆனால் அவருக்கு பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதிகாரம் இருப்பதாக அரசியலமைப்பின் வேறு உறுப்புரைகளை மேற்கோள்காட்டி முன்னாள் பிரதம நீதியரசர் சரத் நந்த சில்வா போன்ற ராஜபக்ச விசுவாசிகள் வியாக்கியானம் செய்கிறார்கள்.அதற்கு எதிரான வாதங்களும் தீவிரமாக முன்வைக்கப்படுவதை அன்றாடம் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.

இந்த கட்டத்தில் வியாழக்கிழமை கொழும்பு புதிய நகர மண்டபத்தில் மாதுளுவாவே சோபிததேரோ நினைவு நிகழ்வில் இலங்கையின் பிரபலமான அரசியல் விஞ்ஞானப் பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட முக்கிிய உரைநிகழ்தியபோது கூறிய பொருள் பொருந்திய கருத்தொன்றை நினைவுபடுத்துவது மிகவும் பொருத்தமானதாகும். " அரசியலமைப்பை ஒரு தடவை மீறியதால் இன்றைய நெருக்கடியை உருவாக்கியவர்கள் அதற்ு முடிவுகாண முடியாமல் தடுமாறுகிறார்கள்.இப்போது அவர்கள் மேலும எவ்வாறு அரசியலமைப்பு மீறல்களைச் செய்வது என்றே ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள்".