
By: ஆ.யதீந்திரா
ஸ்ரீராதா டத்தா, புதுடில்லியை தளமாகக் கொண்டிருக்கும் முன்னணி சிந்தனைக் கூடமான, விவேகானந்தா சர்வதேச நிதியத்தின், அயலக கற்கைகளுக்கான நிலையத்தின் தலைவராவார். விவேகானந்தா சர்வதேச நிதியம், ஆளும் பி.ஜே.பி அரசாங்கத்தின் கொள்கை சார் விடயங்களில் செல்வாக்குச் செலுத்தவல்ல முக்கிய சிந்தனைக் கூடமாகும்.
யதீந்திரா : இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதி இரு கட்டங்களும் முன்னெடுக்கப்பட்டபோது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் சுமுகமானவையாக இருந்தன. ஆனால், 2009 மேயில் போர் முடிவடைந்த பிறகு உறவுகள் சுமுகமானவையாக இருக்கவில்லை. இந்தியாவுக்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட இரு நாடுகளுக்கும் இடையில் 'அதிகரித்துவரும் நம்பிக்கைப் பற்றாக்குறையை ஏற்றுக்கொண்டு ஒருங்கிணைக்கப்பட்ட மூலோபாயம் ஒன்றின் அவசியம் பற்றி பேசியிருக்கிறார். இரு தரப்பு உறவுகளில் நெருக்கடியொன்று இருப்பதை அவர் சூசகமாக ஏற்றுக்கொள்கிறார். இந்தியாவின் அயலக கொள்கையில் ஒரு நிபுணர் என்ற வகையில் இவற்றையெல்லாம் நீங்கள் எவ்வாறு வியாக்கியானம் செய்கிறீர்கள்? ஒருங்கிணைக்கப்பட்ட மூலோபாயம் ஒன்று பயன்தருமா?
ஸ்ரீராதா: இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் வெறுமனே போர்ப் பிரச்சினை காரணமாக மாத்திரமல்ல, பல்வேறு காரணங்களின் நிமித்தமும் அண்மைக்காலமாக சிறப்பானவையாக இருக்கவில்லை. என்றாலும், ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச பதவியேற்ற பிறகு, தனது முலாவது வெளிநாட்டுப் பயணத்தை இந்தியாவுக்கே மேற்கொண்டார் என்பதை நினைத்துப்பார்க்க வேண்டியது முக்கியமானதாகும். இது பரந்தளவிலான இந்திய - இலங்கை உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. அதேவேளை, பயன்படுத்தப்படாதிருக்கும் பல வாய்ப்புக்கள் பற்றியும் கவனத்தில் எடுக்கவேண்டியிருக்கிறது. இலங்கை வெளியுறவு செயலாளர் அட்மிரல் கொலம்பகேயும் இலங்கையின் வெளியுறவுக்கொள்கையில் ' இந்தியா முதலில்' அம்சத்தை மீளவலியுறுத்தியிருந்தார். அடிப்படையில் நோக்குகையில் இந்தியாவின் மூலோபாய நலன்களுக்கு எதிராக கொழும்பு செயற்படவில்லை என்பதைக் கவனிக்கவேண்டும். கூட்டு இராணுவ பயிற்சிகள் உட்பட பல இருதரப்பு திட்டங்களில் இந்தியாவும் இலங்கையும் தொடர்ந்து செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன.தீர்க்கப்படாத சில பிரச்சினைகள் நிச்சயமாக இருக்கின்றன.
ஆனால், இரு அயல் நாடுகளும் ஒன்றுக்கொன்று முக்கியமானவை. பல விவகாரங்களில் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றுகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, வெளியுறவுகள் விசை இயக்கமுடையவை. ஒவ்வொரு அரசாங்கமும் ஒரே மாதிரிச் செயற்படும் என்று எதிர்பார்ப்பது யதார்த்தபூர்வமற்றது. அதேவேளை, கடந்தகால செயற்பாடுகள் மற்றும் ஊடாட்டங்கள் ஊடாக நிறுவப்பட்டிருக்கும் ஒத்துழைப்புக் கட்டமைப்பை நிலைபேறானதாக வைத்திருக்கவேண்டிய முக்கியத்துவத்தை இரு நாடுகளின் தலைவர்களும் புரிந்துகொள்கிறார்கள். கடந்த கால நிகழ்வுப்போக்குகள் இரு தரப்பு உறவுகளில் தாக்கத்தைக் கொண்டிருக்கவே செய்யும். சில அரசாங்கங்கள் பழைய பிரச்சினைகளுக்கு வித்தியாசமான முறையில் பிரதிபலிப்பை வெளிக்காட்டும்; ஒத்திசைவில்லாத போக்கை தற்காலிகமாக வெளிக்காட்டும். ஆனால், ஒட்டுமொத்த நிலைவரத்தைப் பொறுத்தவரை, எந்த தரப்புக்கும் பாதகம் ஏற்படுவதாக இல்லை.
ஒரு சில நம்பிக்கைப் பிரச்சினைகள் இருக்கவே செய்கின்றன.ஆனால், எல்லாவற்றுக்கும் மேலாக, கடந்த மார்ச்சில் மனித உரிமைகள் பிரச்சினை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்து கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்காமல் விலகியிருந்தது. இந்தியாவின் அந்த செயல் குறிப்பிட்ட ஒரு செய்தியைச் சொல்கிறது. கொவிட் பெருந்தொற்று நோயின் விளைவான நெருக்கடியில் இந்தியா இலங்கைக்கு உதவி செய்து ஆதரவளித்தது. 2021 முற்பகுதியில் கொழும்புக்கு இந்தியா ராடார் உபகரணத்தையும் வழங்கியதுஎவ்வாறெனினும், தீர்க்கப்படாமல் இருக்கும் இருதரப்பு பிரச்சினைகளை ஒத்துக்கொள்ளவேண்டும். அவற்றை கையண்டு தீர்த்துக்கொள்ளவேண்டும்.வேறுபட்ட சில நோக்குகள் இருக்கத்தான் செய்யும். ஆனால், தற்போதைய பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதற்கு பல்வேறு இராஜதந்திர மற்றும் உப தேசிய இராஜதந்திர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
யதீந்திரா: இந்து சமுத்திர பிராந்தியத்தில் சீனா ஊடுருவல்களைச் செய்து வருகின்றது. இந்த பின்புலத்தில், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நெருக்கம் இந்தியாவுக்கு நல்லதல்ல என்ற அவதானிப்பு ஒன்று இருக்கிறது. இந்தியா பாரதூரமான பின்னடைவுகளைச் சந்திக்கிறதா? உங்களுடைய சிந்தனை என்ன?
ஸ்ரீராதா: கடந்த தசாப்தத்தில் தெற்காசிய பிராந்தியத்தில் சீனாவின் ஈடுபாடு கவனத்தை ஈர்ப்பதாக இருந்து வருகிறது. சீனாவிடமிருந்து பெருமளவு பொருளாதார ஆதரவைப் பெற்றிருக்கும் அயல்நாடுகளில் இலங்கையும் ஒன்று. அது குறித்து சஞ்சலம் உண்டு. சீன -- இந்திய பகைமை மற்றும் அதிகரித்துவரும் சீன -- இலங்கை தோழமை ஆகியவற்றின் பின்புலத்தில் இந்தியாவுக்கு விரோதமான சில செயற்பாடுகள் எப்போதுமே சாத்தியம் என்ற நம்பிக்கை ஒன்றும் புதுமையானதல்ல. அது தவிர்க்கமுடியாததும் கூட.
கொழும்பின் சில அண்மைக்காலத் தீர்மானங்கள் சீனாவுக்கு அனுகூலமாக இருந்துவந்திருக்கின்ற அதேவேளை, அவற்றில் சில இந்தியாவின் நலன்களை மலினப்படுத்தியிருக்கின்றன. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவுடனும் ஜப்பானுடனும் சேர்ந்து இலங்கை 50--70 கோடி டொலர்கள் செலவில் அபிவிருத்தி செய்வதற்காக கைச்சாத்திடப்பட்ட முத்தரப்பு உடன்படிக்கையை ரத்துச் செய்வதற்கு கொழும்பு எடுத்த தீர்மானத்துக்கு பிறகு இந்தியாவின் அச்சம் அதிகரித்தது. பொதுமக்களின் எதிர்ப்பை அதற்கு காரணமாக கூறிய இலங்கை மேற்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவுக்கு கொடுக்க முன்வந்தது. ஏற்கெனவே சுட்டிக்காட்டியதைப் போன்று இது தனது பாதுகாப்பு அக்கறைகளைப் பாதிப்பதாக புதுடில்லி உணருகிறது.
மேலும், இது இந்தியாவும் இலங்கையும் 1987 ஆம் ஆண்டில் கைச்சாத்திட்ட உடன்படிக்கையின் ஒரு மீறலாகவும் அமைந்தது. இலங்கையோ இந்தியாவோ ஒன்றின் ஐக்கியம், ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பை பாதிக்கக்கூடிய நடவடிக்கைகளுக்கு மற்றையதன் துறைமுகங்கள் பயன்படுத்தப்படுவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என்று அந்த உடன்படிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் 24 மே 2021 இலங்கைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. துறைமுகநகர திட்டம் இந்திய கரையோரத்தில் இருந்து 300 கிலோ மீட்டர்களுக்கும் குறைவான தூரத்திலேயே அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தூரம் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் மற்றும் பல இந்து சமுத்திர பிராந்திய அரசுகளுக்கும் தீர்க்கமான ஒரு இடைவெளியாகும். இந்த சட்டமூலம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாக, கொழும்பு யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு அப்பால் இருக்கும் சிறிய தீவுகளில் 12 மில்லியன் டொலர்கள் செலவிலான மின்சக்தி திட்டத்தை, மூன்று புதுப்பிக்கத்தக்க சக்தி ஆலைகளாக கூட்டாக அபிவிருத்திசெய்வதற்கு சீன நிறுவனம் ஒன்றுக்கு கையளித்தது. இந்த தீவுகள் தமிழ்நாடு கரையோரத்தில் இருந்து 50 கிலோ மீட்டர்களுக்கும் குறைவான தூரத்தில் அமைந்திருக்கின்றன.
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஊடாட்டம் துரிதமாக வளர்ந்துகொண்டிருக்கிறது. அம்பாந்தோட்டையில் துறைமுக நிர்மாணம் உட்பட இலங்கைக்கு சீனா 700 கோடி டொலர்கள் கடனை வழங்கியிருக்கிறது. பெய்ஜிங்கிடமிருந்து பெற்ற கடன்களை இலங்கையினால் திருப்பிச்செலுத்த இயலாத காரணத்தால் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன கம்பனியொன்றுக்கு 99 வருடகால குத்தகைக்கு கையளிக்கவேண்டிய நிர்ப்பந்தம் 2017 ஆம் ஆண்டில் கொழும்புக்கு ஏற்பட்டது. இதற்கு புறம்பாக, அம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிப்பதற்காக சீனாவின் எக்சிம் வங்கியிடமிருந்து பெற்ற ஐந்து கடன்களையும் இலங்கை திருப்பிச் செலுத்தவேண்டியிருக்கிறது. கொழும்பு எடுத்த தீர்மானங்களில் பல இலங்கையில் இந்திய நலன்களை மலினப்படுத்துவதாகத் தோன்றுகிறது.
யதீந்திரா: இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளைத் தீர்மானிப்பதில் செல்வாக்குமிக்க ஒரு காரணியாக தமிழ்நாடு விழங்குவதாக கூறப்படுகிறது. ஆனால், மத்தியில் தற்போது ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனாதா அரசாங்கம் பலமுடையதாக இருக்கிறது. மாநிலங்களின் அபிப்பிராயங்களினால் அது செல்வாக்கிற்கு உட்படுவது சாத்தியமில்லை. அதேவேளை, பாரதிய ஜனதாவுக்கு தமிழ்நாட்டில் கெட்டியான ஒரு ஆதரவுத்தளமும் கிடையாது. ஆனால், மீனவர்கள் பிரச்சினையிலும் இலங்கைத் தமிழர் பிரச்சினையிலும் தமிழ்நாடு மத்தி மீது நெருக்குதலைப் பிரயோகிக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்ராலின் இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்காக நலன்புரித் திட்டங்களை அண்மையில் அறிவித்தார். தமிழ்நாடு கொழும்புக்கு எதிரான நிலைப்பாட்டையும் கொண்டிருக்கிறது.இவையெல்லாவற்றையும் நீங்கள் எவ்வாறு நோக்குகிறீர்கள்? இந்திய -- இலங்கை உறவுகளை தீர்மானிப்பதில் தமிழ்நாட்டுக்கு செல்வாக்கு இருக்கிறதா?
ஸ்ரீராதா: இந்திய சம்மேளனத்தில் டில்லியின் வெளியுறவுக்கொள்கை மீது சில செல்வாக்கை மாநிலங்கள் கொண்டிருக்கின்றன. ஆனால், நாட்டின் வெளியுறவுக்கொள்கை வகுக்கப்படும்போது வேறு காரணிகள் கூடுதல் செல்வாக்கு செலுத்துகின்றன. தமிழர் பிரச்சினை ஒரு முக்கியமான காரணியாக இருந்துவருகிறது. சகல இந்திய தலைவர்களுக்கும் அது தெரியும். தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா அல்லாத ஒரு கட்சியின் ஆட்சியே இருக்கின்ற போதிலும் கூட தமிழர் பிரச்சினையை மத்திய அரசாங்கம் எப்போதும் அக்கறையுடன் அணுகுகிறது. மத்திய அரசாங்கத்தினால் சாத்தியமில்லாத குறிப்பிட்ட சில யோசனைகள் மற்றும் நடவடிக்கைகளை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை மாநில அரசாங்கம் கொண்டிருக்கும் வாய்ப்புகளும் இருக்கின்றன. இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தவேண்டிய அவசியத்தையும் அதிகாரப்பரவலாக்கல் உறுதிமொழியையும் இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் பலவற்றில் பிரதமர் மோடி எவ்வாறு முக்கியத்துவப்படுத்தி வந்திருக்கிறார் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். மத்தியும் மாநில அரசாங்கங்களும் வேறுபாடுகளைக் கொண்டிருக்கலாம், ஆனால் தமிழர்களின் உரிமைகளும் பிரச்சினைகளும் இந்தியாவுக்கு முக்கியமானவை. மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும் இது முக்கியமான ஒரு விவகாரமாக நிலைத்திருக்கும்.
யதீந்திரா: இலங்கையின் வடக்கு -- கிழக்கில் பாரம்பரியமாக வாழ்ந்துவரும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் பற்றி இந்தியா தொடர்ந்து பேசிவருகிறது. இந்திய -- இலங்கை சமாதான உடன்படிக்கையின் விளைவாக வந்த 13வது அரசியலமைப்புத் திருத்தத்தின் அடிப்படையிலான அரசியல் இணக்கத் தீர்வொன்றில் இந்தியா அக்கறை கொண்டிருக்கிறது. ஆனால், நடைமுறைப்படுத்தலில் முன்னேற்றம் இல்லை. தமிழ்த் தலைவர்கள் இது விடயத்தில் இந்தியாவின் தலையீட்டை நாடிநிற்கிறார்கள். தமிழர் பிரச்சினையில் பாரதிய ஜனதா அரசாங்கம் விசேட கவனம் செலுத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றனவா?
ஸ்ரீராதா: இலங்கைத் தமிழர் பற்றியும் 13வது திருத்தம் பற்றியும் இந்தியா அதன் நிலைப்பாடுகளை அடிக்கடி மீளவலியுறுத்தி தெரிவித்து வந்திருக்கிறது. இலங்கையின் தற்போதைய தலைவர்களின் அறிக்கைகள் இது விடயத்தில் அவர்களிடம் காணப்படும் பிடிவாதத்தை வெளிக்காட்டுகின்றன. இன்னொரு நாடு வற்புறுத்துவதற்கோ செல்வாக்கு செலுத்துவதற்கோ மட்டுப்பாடுகள் உண்டு. ஆனால், இந்த விவகாரம் இந்திய நிகழ்ச்சி நிரலில் உச்சத்தில் தொடர்ந்து இருக்கிறது.
யதீந்திரா: ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கைகளில் மீண்டும் வீழ்ந்ததைத் தொடர்ந்து இந்து சமுத்திர பிராந்தியத்தில் நாடுகடந்த இஸ்லாமிய பயங்கரவாதத்தின் மீளெழுச்சிக்கான சாத்தியம் ஏற்பட்டிருக்கிறது. அத்தகைய நிகழ்வுப் போக்குகளினால் பாகிஸ்தான் மகிழ்ச்சியடைகிறது என்ற கருத்தும் நிலவுகிறது. தலிபான்கள் ஆப்கான் -- இந்திய நட்புறவு அணையையும் கைப்பற்றியிருக்கிறார்கள். தலிபான்களின் மீள்வருகை இந்தியா மீது எத்தகைய தாக்கத்தை கொண்டிருக்கும்? இது அயல்நாடுகளுடனான இந்தியாவின் உறவுகளில் எத்தகைய தாக்கத்தைக் கொண்டிருக்கும்?
ஸ்ரீராதா: தற்போது காணப்படக்கூடியதாக இருக்கின்ற மூலோபாய மீள் அணிசேருகைகள் குறிப்பிடத்தக்க விளைவுகளைக் கொண்டிருக்கும். இது இந்தியா மீதும் பிராந்தியம் மீதும் பொதுவில் உலகம் மீதும் கடுமையான தாக்கத்தைக் கொண்டிருக்கப்போகிறது. அதைப் பற்றி எந்த சந்தேகமும் இல்லை. தலிபான் அரசாங்கத்தை ஆதரித்து பாகிஸ்தான் வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கை எந்தவித சந்தேகத்துக்கும் இடமின்றி அவர்களது மகிழ்ச்சியை வெளிக்காட்டுகிறது.
இந்தியா கவலைப்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இஸ்லாமிய பயங்கரவாதத்தின் மீளெழுச்சி பற்றிய அச்சங்கள் யதார்த்தமானவை. மத அடிப்படைவாதிகளுக்கும் தலிபானுக்கும் இடையிலான தொடர்புகள் எமது பிராந்தியம் முழுவதையும் மோசமாகப்பாதிக்கும். இந்தியாவிலும் வேறு நாடுகளிலும் பாரதூரமான முரண்பாடுகளை தோற்றுவிக்கும். அது தவிர, ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பியோடிவரும் மக்களுக்கு இந்தியா தஞ்சம் கொடுக்கிறது. சுமார் 300 கோடி டொலர்கள் முதலீட்டுடன் 34 மாகாணங்களிலும் பூர்த்திசெய்யப்பட்டிருக்கும் 400 சமூக உட்கட்டமைப்பு திட்டங்கள் ஊடாக ஆப்கானிஸ்தான் மக்களுக்கு வழங்கிய ஆதரவில் இந்தியா பல நன்மைகளை எதிர்பார்த்தது. கடந்த வருடம் இந்தியா 8 கோடி டொலர்கள் செலவில் சமூக அபிவிருத்தி திட்டங்களை அறிவித்தது. இத்திட்டங்களில் பல இப்போது அந்தரத்தில் தொங்குகின்றன. ஆப்கானிஸ்தானில் எதிர்காலம் மிகவும் நிச்சயமற்றதாக தோன்றுகிறது. இருந்தாலும் வரும் நாட்களில் வேறுபல நடவடிக்கைகள் ஊடாக ஆப்கான் மக்களுக்கு இந்தியா ஆதரவைத் தொடரும். முன்னுணர்ந்து இப்போதைக்கு எதையும் கூறமுடியாது. ஆனால், ஆப்கானிஸ்தானுக்கு தலிபான்களின் வருகை பல மீள் அணிசேருகைகளை ஏற்படுத்தப்போகிறது என்பது மாத்திரம் நிச்சயம்.