Skip to main content

தமிழ் தரப்பை இந்தோ-பசுபிக் மூலோபாயத்தின் அங்கமாக்குதல் ? 

-

By: லோகன் பரமசாமி



கடந்த இருபது ஆண்டு காலங்களில் சீனாவின் வளர்ச்சியானது அமெரிக்காவின் பூகோள முதன்மை நிலையை கேள்விக்குறி யாக்கிவிட்டது. அமெரிக்க ஒற்றைமைய  உலகம் இன்று பல மைய நிலையை நோக்கி நகரும் இவ்வேளையில் பல்வேறு பிராந்திய நாடுகளும் தமக்கு சாதகமான ஒரு மையத்தை நோக்கி நகரும் தன்மையை வெளியுறவுக் கொள்கையாக தேர்தெடுத்துக் கொண்டுள்ளன. சீன அமெரிக்க உறவு ஒரு நீண்ட கால போட்டியை நோக்கி சென்றுள்ளது.


சில நாடுகள் தம்மை நடுநிலைமை வெளியுறவு கொள்கை நாடாக பரப்புரை செய்து கொண்ட போதிலும் அமெரிக்க தலைமைத்துவத்தையும் அதன் செல்வாக்கையும்  தவிர்த்து கொள்ளும் வகையிலேயே இவ்வாறு கூறி வருகிண்றன. ஏகாதிபத்தியம் சார்ந்த போட்டியில் சர்வதேச உறவு குறித்த கருத்தியல்  என்றும் ணுநசழ ளரஅ பயஅந வாநழசல மட்டுமே கவனத்தில் கொள்ளப்படும்.  அதாவது எதிரிக்கு ஒன்றும் இல்லை முழு வெற்றியும் எனக்கே என்பதுதான் இந்த கோட்பாடு ஆகும். ஆக நீங்கள் நண்பர் இல்லை என்றால் எதிரியாகவே பார்க்கப்படுவீர்கள் என்பது தான் இதன் பொருள். நாங்கள் இடையிலே நடுநிலைமையாக நிற்போம் என்பதெல்லாம் நடவாத காரியம். 


அமெரிக்க இராஜாங்க செயலர்  மைக் பொம்பியோவிடம் பேசும் பொழுது  சுதந்திரம் - இறையாண்மை பேரம் பேசப்பட முடியாதவொன்று என சிறீலங்கா சனாதிபதி கூறி இருந்தார்.  ஆனால் ஏற்கனவே  சீனாவிடம் தமது இறையாண்மையை விற்று காசாக்கிக் கொண்டுள்ள நிலையை அம்பாந்தோட்டை சீன-சிறீலங்கா  உடன்படிக்கையின் மூலம் கண்டு கொள்ளலாம்.    
சிறீலங்கா போன்ற மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த துணை நாடுகளை தமது உதவித்திட்டங்கள் - கூட்டு ஒப்பந்தங்கள் ஆகியவற்றின் மூலம் பிராந்திய வல்லரசான சீனா தம்மகத்தே வசப்படுத்தி கொண்டிருக்கிண்றது. இதனால்  எந்த வல்லரசிடம் இருந்து தாராளமாக உதவிகளை ஏற்று கொள்கிண்றனவோ அதற்கமைவாகவே அவற்றின் வெளியுறவு கொள்கையின்  சார்பு தன்மைமையும் அமைகின்றது. 
சிறீலங்கா மீது செல்வாக்கு செலுத்த கூடிய காரணிகளை பரந்த அளவில் பார்ப்பதன் ஊடாக நாம் ஒரு தெளிவான புரிதலுக்கு வரலாம் . சர்வதேச அரசியல் உலக ஆளுமையில் இன்று அமெரிக்காவிற்கு மிகவும் சவால் விடும்  நாடுகளாக இருப்பதில் ஈரான் முக்கிய இடம் வகிக்கிறது. ஈரான் மிக நீண்ட பாரம்பரீயங்களை கொண்ட ஒரு நாடு.  பாரசீகர்களின் அரசுகள் பல ஆயிரம் ஆண்டுகளாக சர்வதேச அரசியலில் செல்வாக்கு செலுத்தி வருகிண்றன. ஆனால் அமெரிக்க யூதர்களின் செல்வாக்கில் உள்ள அமெரிக்க காங்கிரசும் அதன் இராஜாங்க தினைக்களமும்  ஈரானின் வளர்ச்சி இஸ்ரேலிய பாதுகாப்பிற்கு சவாலானது என்ற பார்வையை கொண்டுள்ளன. 
சீனாவின் வளர்ச்சியை மந்த நிலைக்கு கொண்டு வரும் அதே வேளை ஈரானை இஸ்லாமிய மதவாத ஆட்சியிலிருந்து மீண்டும் 1979 ஆம் ஆண்டிற்கு முன்பு இருந்தது போல மன்னர்  ஆட்சி முறையை கொண்டு வருவதன் மூலமே இஸ்ரேலிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்ற ஒரு நீண்ட கால திட்டம்   அமெரிக்க - இஸ்ரேலிய - சவுதி அரேபிய அரசுகளிடம் உள்ளது. அது மட்டுமல்லாது யுரேசிய நாடுகளில் செல்வாக்கு செலுத்தும் தேவைக்கும் ஈரானை சிதைப்பது மிக முக்கியமான தேவையாக உள்ளது. 


ஈரானிய மன்னராட்சி 1979 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க  பிரித்தானிய சொற்படி நடக்கும் ஒரு கைப்பாவை அரசாகவே இருந்து வந்தது. இரண்டாம் உலக போர் காலத்தில் ரஷ்யாவை மீண்டும் ஜேர்மனிக்கு எதிராக அதி உட்ச பலத்துடன் போரிட செய்வதற்கு ஈரானின் ஊடாகவே மேலை நாடுகளின் உதவிகள் ரஷ்யாவுக்கு கொண்டு செல்லப்பட்டது. அதே போல இன்று ரஷ்ய சீன நாடுகளுக்கான எரிபொருள் உதவிகளை நிறுத்தவும் மறு வளத்தில் ரஷ்ய  சீன உதவிகள் ஈராணை வந்தடைவதை தடுப்பதற்கும் யுரேசிய பிராந்தியத்தில் தொடர்ச்சியான பதட்ட நிலையை வைத்திருக்க வேண்டிய நிலை அமெரிக்க இராசாங்க திணைக்களத்தின் இன்னும் ஒரு தேவையாகவும் உள்ளது.


ஆக ரஷ்ய சீன கூட்டிக்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பதும் ஈரானை சிதைப்பதும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் மிக முக்கியமான மூலோபாயமாக இருக்கின்றது. இதன் மூலம் ரஷ்யாவை மேலைச் சார்பு நாடாக ஆக்கி கொள்வதுடன் அமெரிக்க ஒற்றை மைய நிலையை மீளவும் முன்னுக் கொண்டுவருவதற்கு இது உறுதுணையாக அமையும்.  
சரி … இப்பொழுது இந்த நிலை ஈழ தமிழர் அரசியலில் எந்த வகையில் தாக்கத்தை ஏற்படுத்த கூடியது என்பது ஒரு முக்கிய மான கேள்வியாகும். இதனை புரிந்து கொள்வதன் ஊடாக எமது ஏதிர்காலத்தை புரிந்து கொள்ள முடியும்.  அதுவே ஈழ தமிழ் மக்கள் தமது செயற்பாடுகளை நீண்டதொரு மூலோபாயத்தை நோக்கி நகர்த்த கூடியதாக இருக்கும்.


அமெரிக்கா தன்னை யுத்த செலவுகளில் இருந்த தவிர்த்து கொள்வதன் ஊடாகவே தனது பொருளாதாரத்தையும் ஆயுத பலத்தையும் சர்வதேச அளவில் முதன்மை நிலையில் வைத்திருக்க முடியும். ஆக அமெரிக்கா நேரடி யுத்தத்தை தவிர்த்தே வரும் என்பது உறுதியாகும். அமெரிக்கா நேரடியாக சீனாவுடனோ அல்லது வேறு எந்த சிறிய நாடுகளுடனும் யுத்தத்தில் இறங்குவது தற்கொலைக்கு சமமானதாகும். ஆக அப்படி எனில்  சீனாவை வேறு நாடுகளுடன் யுத்தத்திற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கவே அமெரிக்கா  முனையும் என்பது இங்கே உறுதியானதாகும். 


யுரேசிய நாடுகளில் தற்பொழுது இடம் பெற்று வரும்  பதட்ட நிலை. இந்திய சீன யுத்த பதட்ட நிலை அகியன இங்கே குறிப்பிட தக்கனவாகும். அமெரிக்காவிடம் தற்போது உள்ள பெரும் ஆயுதம் என்ன வெனில்  தேசிவாதம் - சனநாயகம் - மனித உரிமை வெளிப்படைத்தன்மை ஆகிய வற்றுடன் சட்டஒழுங்கு அடிப்படையிலான கடல்சார் நகர்வுகள் என்பனவாகும். சீன - ரஷ்ய நாடுகளிடம் இல்லாதவையும் இவையே. சர்வதேச நாடுகளில் வெளிப்படை தன்மையையும் சனநாயகத்தையும் மனித உரிமையின் அவசியத்தையும் அதிகளவில் உறுதியாக ஏற்றுகொள்ள வேண்டிய நிலைமையை உருவாக்குவதே அமெரிக்காவின் மூலோபாயமாக இருக்க முடியும். 
அத்துடன் தேசியங்கள் மத்தியிலே தேசியவாத உணர்வை அதிக அளவில் உருவாக்குவதும் சனநாயகம் மற்றும் சுதந்திரம் போன்றவற்றின் தேவைகளை வலுப்பெற செய்வதன் தேவையும் இன்று அமெரிக்காவினால் உணரப்படுகின்றது.  இவற்றின்  ஊடாக சீனாவிலும் யுரேசிய நாடுகளிலும் ஈரானிலும் பாரிய சமூக எழிர்ச்சிகளை உருவாக்குவதும் இன்றைய தேவையாகும். 


வெளிப்படை தன்மையின் தேவை கொரோனா வைரசின் பரம்பலை கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டதாக கூட இருக்கலாம்.  உள்நாட்டு அரசியல் காரணங்களாகவும் இருக்கலாம் உதாரணமாக சீனாவில் உகிர் மக்களின் போராட்டம் மேலும் வலுப் பெற வேண்டமாயின் சீனாவை வெளிப்படை தன்மை குறித்த மாற்றங்களை கொண்டு வரும் நிலையை உருவாக்குவது அவசியமாகிறது.
வர்த்தக வளர்ச்சியின் அவசியம் சீனாவை மேலும் வெளிப்படை தன்மை நோக்கிய  நகர்வுகளையே ஏற்று கொள்ள வேண்டிய நிலைக்கு கொண்டு வரும் என்பது பலரதும் பார்வையாகும். ஏனெனில் சீனா தனது பில்லியன் கணக்கான மக்களுக்கு உணவு போட வேண்டிய தேவை உள்ளது.  நாட்டில் வறுமை ஏற்படுமிடத்து உட் குழப்பங்கள் ஏற்படலாம் . இதனை தவிர்க்கும் வகையில் நாட்டில் சமூக அரசியல் நிலைமையையும் பொருளாதார வளர்ச்சியையும் பாதுகாக்கும் வகையில் பொருளாதார அரசியல் செயற்பாடுகளில் வெளிப்படைத் தன்மையை கொண்டவர வேண்டிய தேவை சீனாவுக்கு உள்ளது. 


மாவோவாத சீனாவிற்குள் டெங் சியாவோ பிங் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தினார். தொடர்ந்து சீஜிங் பிங் மேலும் மாற்றங்களை கொண்ட வந்தார் மீண்டும் சீனா தன்னை சுதாகரித்துக் கொள்ளும் வகையில் மாற்றங்களை கொண்டுவரும் என்பதில் ஐயம் இல்லை 
அடுத்ததாக அமெரிக்க மேலாண்மை கொண்ட ஐக்கிய நாடுகள் சபை கடற் சட்டத்திற்கான மகாநாட்டு கடற்கல நகர்வுகளின் கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு சீனா செல்லுமா என்பது இன்னும் ஒரு கேள்வியாகும். முன்பெல்லாம்  ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகள் என்ற சொற்பதத்தையே அமெரிக்கா பயன்படுத்தி வந்தது. ஆனால் அதிபர் டொனால்ட் ரம்ப் 2017ஆம் ஆண்டு கிழக்காசிய நாடுகளுக்கு பயணம் செய்த பொழுது அறிமுகம் செய்து வைத்து இந்தோ பசுபிக் மூலோபாயம் என்னும் புதிய நகர்வை எந்த வித சலசலப்பும் இன்றி சீனா ஏற்று கொண்டது. 


தென் சீன கடற்பிராந்தியத்திலும் இதர கடற் பயண ஒழுங்கைகளிலும் தனக்கு எதிராக வகுக்கப்படும் ஒரு  மூலோபாயமே என்பதை நன்கு தெரிந்தும் சீனா தனது பொருளாதாரத்திற்கு தடைகள் வராத வகையில்  சிக்கல்களை தவிர்த்துக் கொண்டது. இதேபோல எதிர்காலத்தில் எழக்கூடிய எந்த வித ஒழுங்குகளையும் ஏற்று கொண்டு அதற்கேற்ப நகரவே சீனா முயலுமென்றே எதிர்பாக்கப்படுகிறது. 
இந்நிலையில் அமெரிக்காவும் தாராளவாத உலகும் சீன அரச சலுகை பெற்ற நிறுவனங்களை சர்வதேசம் எங்கும் தடை செய்து வருகிண்றன. அண்மையில் 24  சீன நிறுவனங்கள் அமெரிக்க சந்தையிலிருந்து  தடை செய்யப்பட்டிருந்தன. இதனை நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை வெளியிடும் பொழுது சிங் ஜியாங் பிராந்தியத்தில் இஸ்லாமிய சிறுபாண்மை மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் குறித்த குற்றசாட்டின் பெயரில் இந்நிறுவனங்கள் தடை செய்வதாக அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்திருந்தது. இது சீனா மீதான நெருக்குதல்கள் தற்பொழுது ஆரம்பமாகிவிட்டது.  அத்துடன் அமெரிக்காவுடன் கூட்டாக ஒரே எண்ணம் கொண்ட நாடுகளுடனான சீனா மீதான மேலும் அதீத தடைகளை கொண்டு வருவதற்கு நகர்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளது என்பது உறுதி.
ஏனெனில் ரஷ்ய ஆய்வாளர்கள் அண்மையில் விடுத்த ஒரு அறிக்கையில்   அமெரிக்கா தேடும் கூட்டு ஒரு யுத்த கூட்டாக அல்லாது அது ஒரு பொருளாதார தடைகள் குறித்த கூட்டே என்பதாகும். 


ஆக இந்த நிலையுடன் தமிழ் மக்கள் தமது அபிலாசைகளை அடைந்து கொள்ளும் சந்தர்ப்பங்களை உருவாக்கும்  தந்திரங்கள் நோக்கிய நகர்வுகள்  என்ன ? . வெளிநாடுகளின் பார்வையில் தமிழ் மக்கள் தமது வெளிப்படை தன்மையை பேணுவதும். தம் மத்தியில் வாத-பிரதிவாதங்களை பேணுவதுவும் முக்கியமானதாகும்.. தமிழ் மக்கள் மத்தியிலே பல சிந்தனை குழுகளின் தேவையும் அந்த சிந்தனை குழுக்கள் பயங்கரவாத எதிர்ப்பு குறித்து திடமாக கொள்கைகளை கொண்டிருப்பதுவும். மனித உரிமை மீறல்கள் சனநாயகம் ஆகியவை குறித்த தேடல்களில் ஈடுபடுவதுவும் மிக முக்கிய மானவையாகப்படுகிறது. 


இவை எல்லாவற்றிலும் மேலாக தமிழர்களின் சிந்தனை குழுக்கள் ஒரு வருடத்தில் நான்கு தடவைகள் எனினும் ஆய்வு மகாநாடுகளை நடாத்துவதுவும்.  மிக நெருக்கமான ஆய்வு அறிக்கைகள் சமர்ப்பிப்பதும் தேவையானதாகும். அத்துடன் சர்வதேச நாடுகளின் தூதுவர்களை அழைத்து தமது கூட்டங்களில் பேச வைப்பதுவும் சர்வதேச நாடுகளின் இராசாங்க அதிகாரிகளின் பேச்சுகளின் கொள்கைகள் குறித்த ஆய்வுகளை வெளிப்படையாக விவாதிப்பதுவும் மிக முக்கியமாகதாகும். 


சர்வதேச பிரச்சனைகளை தம்மால் கையாள முடியும் என்ன நம்பிக்கையை சர்வதேசத்திற்கு காண்பிப்பதும்  இங்கே முக்கியமானதாகும் . இதன் மூலம் உள்ளூர் அரசியல்வாதிகளை சிந்தனை குழுக்கள் கையாளும் ஆளுமையை கொண்டிருப்தன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் ஒன்றுபடுத்தப்பட்ட  அரசியல் தளத்தை உருவாக்கதல் என்ற வகையில் செயற்படுவது அவசியமாகிறது. 
இவ்வாறான நடவடிக்கைகள் அமெரிக்க கவனத்தை ஈர்க்கும் அதேவேளை  தமிழர் தரப்பு  சிறீலங்காவில் சீன நகர்வுகளை கையாள்வதற்கு ஏற்றவகையில் அந்த தீவில் தம்மை ஒரு அதிகார மையமாக காண்பிக்கக் கூடிய நிலைக்கு தமிழ் சிந்தனை குழுக்கள் முன்னேற வேண்டிய தேவை உள்ளது.   சர்வதேச நாடுகளினுடனான தொடர்புகள் தமது பாதுகாப்பை பலப்படுத்துவதாகவும் இருக்கும் அது வேளை கூட்டு திட்டமிடல்கள் மேலும் வலுவாக அமையும்.