Skip to main content

த குவாட் - நெருக்கடியில் பிறந்தது - அமெரிக்கத் தூதுவர் அலைனா பி.ரெப்லிட்ஸின் பிரத்தியேக நேர்காணல்

Alaina B. Teplitz

By: ஆ.யதீந்திரா

இலங்கையில் தனது பதவிக்காலம் முடிவடைந்து நாடுதிரும்பும் அமெரிக்கத் தூதுவர்  அலைனா பி.ரெப்லிட்ஸ்  மூலோபாய ஆய்வுகளுக்கான திருகோணமலை நிலையத்திற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணல்.  இலங்கையின் தேசியப்பிரச்சினை, சர்வதேச பயங்கரவாதம், கொழும்பு துறைமுக நகரம், இலங்கை-சீன உறவுகள் மற்றும் கடன்சுமை என்று பல பிரச்சினைகள் குறித்து தனது கருத்துக்களை அவர் பகிர்ந்திருக்கிறார்.

 

யதீந்திரா : இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைவரத்தை அமெரிக்காவுக்கு ஒரு சவாலாக பார்க்கமுடியுமா? இந்த கேள்வியை இங்கே கேட்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. மேற்குலகிற்கு ஆதரவான ஐக்கிய தேசிய கட்சி இலங்கையின் அரசியல் வரலாற்றில் பாரதூரமான பின்னடைவை இப்போது சந்தித்திருக்கிறது. மேற்குலகுடனான இலங்கையின் உறவுகளை வரையறை செய்யும் நீண்ட பாரம்பரியமொன்றை .தே..கொண்டிருக்கிறது. ஏனென்றால் சர்வதேச கன்சர்வேட்டிவ் (பழமைவாத) அரசியல் கட்சிகளின் ஒரு கூட்டமைப்பான சர்வதேச ஜனநாயக ஒன்றியத்தில் .தே..அங்கம் வகிக்கிறது. ஆனால் அந்த கட்சி தற்போது கடுமையான பின்னடைவில் இருக்கிறது. இந்த பின்புலத்தில் இலங்கை --- அமெரிக்க உறவு நெருக்கடியில் இருக்கின்றது என்று கூறலாமா? உங்கள் அவதானிப்பு என்ன?

 

அலைனா : இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும்  இடையிலான உறவென்பது, பொதுவான ஜனநாயக விழுமியங்கள் மற்றும், இலங்கையை சாத்தியமானளவுக்கு சுபிட்சமானதாகவும் பாதுகாப்பானதாகவும் கட்டியெழுப்புவதற்கான எமது கூட்டுப் பற்றுறுதி என்பவற்றின் மீதும் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன. கடல் பாதுகாப்பு, சுற்றாடல்  பாதுகாப்பு மற்றும் இணையவெளிப் பாதுகாப்பு போன்ற முக்கியமான விவகாரங்கள் மீதான  எமது ஒத்துழைப்பினால் அந்த உறவுகள் மேலும் வலுப்படுத்தப்பட்டிருக்கின்றன. அரசியல் கட்சிகளுக்கு அப்பால்  இலங்கையுடன்  நல்லுறவை நாம் கொண்டிருக்கிறோம். பல்வேறு பின்னணிகளைக் கொண்ட சகல இலங்கையர்களுடானான தோழமையை நாம் மதிக்கிறோம்.

எந்த உறவுமுறையில் என்றாலும் எம்மால் உறவுகளைப் பலப்படுத்தவும் புரிந்துணர்வைக் கட்டியெழுப்பவும் கூடியதாக இருக்கிறது. அதன் காரணத்தினால்தான் எமது இலங்கைப் பங்காளர்களுடன் தொர்பாடல் வழிகளை தொடர்ந்து திறந்துவைத்திருப்பது முக்கியமாகிறது. நாம் கருத்தொருமித்து செல்லாதபோதிலும், புரிந்துணர்வுடன் பணியாற்றக்கூடியதாகவும் தீர்வுகளைக் காணக்கூடியதாகவும் இருக்கிறது.

இலங்கையில் நாம் வழங்குகிற வெளிநாட்டு உதவி, அடிப்படையில் பக்கச்சார்பற்றது. சகல இலங்கையர்களினதும் தேவைகளுக்கு சேவைசெய்கின்ற நியாயமானதும் சுபிட்சம் மிக்கதுமான நாடொன்றை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கத்துக்கு உதவிசெய்வதில் நாம் ஆர்வம் காட்டுகிறோம். உதாரணமாக, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலான ஆலோசனைச் சபையொன்றின் ஊடாக இலங்கைப் பாராளுமன்றத்துக்கு நாம் ஆதரவளிக்கிறோம். பாராளுமன்ற அலுவலர்களுக்கும் சகல கட்சிகளையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பயன்தருகின்ற இந்த உதவியின் ஊடாக சகல இலங்கையர்களினதும் தேவைகளை பாராளுமன்றம் கவனிப்பதற்கு நாம் உதவுகின்றோம்.

இந்த பக்கச்சார்பற்ற உதவியின் மற்றைய உதாரணங்களாக பெண்களின் உரிமைகள், வேலைத்தலங்களில் பாலியல் தொல்லைகளைத் தடுத்தல் போன்ற விவகாரங்களில் தேசியக் கொள்கை மட்டத்தில் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கு ஒன்பதாவது பாராளுமன்றத்தின் பெண் உறுப்பினர்கள்  குழுவுக்கு வழங்கப்படும்  தொழில்நுட்ப உதவிகள், வன்முறை மற்றும் துன்புறுத்தல்கள் தொடர்பான சர்வதேச தொழில்  நிறுவனத்தின் சாசனத்தை அங்கீகரித்தல் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். அமெரிக்காவின் இந்த ஆதரவின் ஊடாக பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் பெண்கள் தொடர்பான தெரிவுக்குழுவும் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதற்கான அவர்களின் சட்டவாக்க விதப்புரைகளை வரையறுப்பதற்கு  சான்றுகளை அடிப்படையாகக் கொண்ட கொள்கை விவாதங்களை நடத்தியிருக்கின்றன.

அரசாங்கத்தின் சகல மட்டங்களிலும் பால்நிலை பற்றி கவனம் செலுத்தப்படுவதை ஊக்குவிப்பதற்காக தொழில்நுட்ப மற்றும் நிறுவனரீதியான உதவிகளையும் நாம் வழங்குகிறோம். தங்களது அரசியல் செயன்முறைகளிலும்  பொருளாதாரத்திலும் பெண்களின் துடிப்பான பங்கேற்பை மேம்படுத்துகிற நாடுகள் பெருமளவுக்கு நீதியான சமூகங்களாக இருப்பது மாத்திரமல்ல, சுபிட்சமான சமூகங்களாகவும் விளங்குகின்றன. பொருளாதாரத்தை முன்னோக்கி மேம்படுத்தக்கூடியதும் சுபிட்சத்துக்கு வழிவகுக்கக்கூடியதுமான இதேபோன்ற முன்முயற்சிகளை ஊக்குவிப்பதற்கு எமது இலங்கைப் பங்காளர்களுடன் தொடர்ந்தும் இணைந்து பணியாற்றுவதில் நாம் ஆர்வம் 

 

யதீந்திரா : 2018 ஆம் ஆண்டில் அமெரிக்க காங்கிரஸின் வெளியுறவுக் கமிட்டிக்கு நீங்கள் அளித்த சாட்சியத்தில்  மேற்கூறப்பட்ட முன்முயற்சிகளில் இலங்கையின் வெற்றி அந்நாட்டை அமெரிக்காவுக்கான ஒரு பலம்பொருந்திய பங்காளியாக்கும் என்றும்  'சுதந்திரமான, திறந்த ஒரு இந்தோ-பசுபிக்' என்ற நோக்கிற்கு பங்களிப்புச் செய்யும் என்றும் குறிப்பிட்டிருந்தீர்கள். இலங்கையின் தற்போதைய அரசாங்கம் வெளியுறவுகளில் நடுநிலையைப் பேணுவதாகக் கூறுகிறது. இத்தகைய பின்புலத்தில், சுதந்திரமான, திறந்த இந்தோ-பசுபிக் நோக்கில், அமெரிக்காவின் பலம்பொருந்திய பங்காளியாக இருப்பதென்பது இலங்கைக்கு ஒரு சவாலாக இல்லையா? மறுபுறத்தில், இந்தோ-பசுபிக் பற்றிய அமெரிக்க நோக்கை சீனா கடுமையாக எதிர்க்கிறது. அமெரிக்கா தலைமையிலான ' குவாட் ' அமைப்பில் சேரக்கூடாது என்று சீனா அண்மையில் பங்களாதேஷை எச்சரிக்கை செய்திருக்கிறது. நடுநிலையான வெளியுறவுக்கொள்கையைக் கொண்டிருப்பதாக கூறுகிற இலங்கை அமெரிக்காவுக்கு பலம்பொருந்திய ஒரு பங்காளியாக முடியுமா?

 

அலைனா: 'குவாட்' என்றால் என்ன என்பதை முதலில் விளக்கிக்கொண்டு, இந்த கேள்விக்கு பதிலளிக்க விரும்புகிறேன். 2004 டிசம்பரில் இந்த பிராந்தியத்தை பேரழிவுக்குள்ளாக்கிய சுனாமியை அடுத்து துரிதமாக மனிதாபிமான உதவியையும் அனர்த்த நிவாரணத்தையும் வழங்குவதற்காக -- நடைமுறைச் சாத்தியமான ஒத்துழைப்பின் ஊடாக  விளைபயன்களைக் காண்பதற்கு தங்களை அர்ப்பணித்துக்கொண்ட நான்கு ஜனநாயக  நாடுகள் (அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், அவுஸ்திரேலியா ) ஒன்றிணைந்தன. ' த குவாட் ' என்று அறியப்பட்ட இந்த ஒத்துழைப்பு நெருக்கடியில் பிறந்தது. அது சுதந்திரமான, திறந்த, பலம்பொருந்திய இந்தோ பசுபிக் பிராந்தியம் ஒன்றுக்கான பொதுவான நோக்கிற்கான இராஜதந்திர கலந்துரையாடலாகவும் பற்றுறுதியாகவும் பரிணாமம் அடைந்தது.

இத்தகையதொரு இந்தோ பசுபிக்கிற்கான நோக்கொன்றை பகிர்ந்துகொள்வதில் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் எந்த சவாலும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. சகல நாடுகளிலும் உறுதிப்பாடு, சுபிட்சம் மற்றும் ஜனநாயகத்துக்கு அடிப்படையாக அமைகிற விழுமியங்களையும் கோட்பாடுகளையும் போற்றிக் கடைப்பிடிப்பதைப் பற்றியதே இந்த பொதுவான நோக்காகும். சுதந்திரமான கடற்போக்குவரத்து ; தகராறுகளுக்கு  அமைதியான முறையில் தீர்வுகளைக் காண்தல்; நேர்மையான, ஒளிவுமறைவற்ற, சகல தரப்பையும் உள்ளடக்கிய பொருளாதாரக் கொள்கைகள் நல்லாட்சி மற்றும் சட்டத்தின் ஆட்சி மீதான பற்றுறுதி ஆகியவையும் இந்த கோட்பாடுகளில் அடங்கும்.

இந்த கோட்பாடுகள் மிகவும் பரந்தவையாகும். அதனால் இலங்கைக் கருத்துக்கோணத்தில் இருந்து  அதை நாம் பார்ப்போம். இந்து சமுத்திரத்தின் மிகவும் மும்முரமான கடல்வழிக்கு அருகைமையில், இலங்கை அமைந்திருக்கிறது. இந்த கடல்வழியின் ஊடாகவே உலகின் கொள்கலன் கப்பல்களில் அரைவாசியும் உலகின் சரக்கு போக்குவரத்தின் மூன்றில் ஒன்றும் உலகின் எண்ணெய்க் கப்பல் போக்குவரத்தின் மூன்றில் இரண்டு பகுதியும் இடம்பெறுகின்றன. அது இல்லாவிட்டால் இலங்கையினால் அதன் பூகோள மூலோபாய  அமைவிடத்தின் செல்வாக்கையும் அதன் துறைமுக முதலீடுகளையும் பயன்படுத்த இயலாமல்போகும். நீங்கள் அறிந்தவாறு, அமெரிக்கா இலங்கையின் மிகவும் முக்கியமான பொருளாதாரப் பங்காளிகளில் ஒன்றாக விளங்குகிறது. அமெரிக்கா இலங்கையின் மிகப்பெரிய தனியான ஏற்றுமதிச் சந்தையாகவும் இருக்கிறது. சுதந்திரமான கடல் போக்குவரத்து இல்லாமல் இது சாத்தியமில்லை.

கடல் சாசனத்தின் சட்டத்தின் கீழான இலங்கையின் பரந்த பிரத்தியேக பொருளாதார வலயம் கடல் வளங்களை மிகுதியாகக் கொண்டதாகும். ஆனால், அந்த பலம் சட்டவிரோத மீன்பிடி இடம்பெறுவதற்கும் வழிவகுக்கிறது. அதனால் கடல் சூழல் முறைமை, உணவுப்பாதுகாப்பு, வாழ்வாதாரங்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகின்றன. அதன் காரணத்தினால்தான் சட்டவிரோதமாக பிடிக்கப்படுகின்ற மீன் உலகளாவிய சந்தைகளுக்குள் பிரவேசிப்பதை தடுக்க ஒன்றிணைந்து பணியாற்ற இலங்கையும் அமெரிக்காவும் உறுதிபூண்டிருக்கின்றன.

எவ்வாறெனினும், விரும்பத்தக்கதாக விளங்கும்  அமைவிடம் காரணமாக இலங்கை ஆட்கடத்தல், ஆயுதக்கடத்தல், போதைப்பொருட்கள் கடத்தல் போன்ற கடல்கடந்த குற்றச்செயல்களின் விளைவான சவால்களை எதிர்நோக்கவேண்டியிருக்கிறது. இதன் காரணத்தினால்தான் கடல் பாதுகாப்பு என்பது அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் பொதுவான மூலோபாய அக்கறையாக இருக்கிறது. அதனால்தான் ரோந்து மற்றும் இடைமறித்தல் உட்பட கடல் பாதுகாப்பு ஆற்றல்களை மேம்படுத்துவதற்கு அமெரிக்கா இலங்கையின் கடற்படை, விமானப்படையுடன் இணைந்து செயற்படுகிறது. இந்த தோழமையின் ஊடாகவும் அமெரிக்காவினால் வழங்கப்பட்டகப்பல்களைப் பயன்படுதியும் இலங்கையினால் அதன் வரலாற்றிலேயே மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தலை 2020 மார்ச்சில் முறியடிக்கக்கூடியதாகவிருந்தது.

ஒரு விடயத்தை தெளிவாக விளங்கிக்கொள்ளவேண்டும். இந்தோ பசுபிக்கிற்கான பொதுவான எமது நோக்கு உறுப்புரிமையினாலோ அல்லது அரசியல் அணிசேருகைகளினாலோ வரையறுக்கப்படவோ அல்லது கட்டுப்படுத்தப்படவோ இல்லை. பதிலாக அது  உலகின், இந்த பரந்த பிராந்தியம் பாதுகாப்பானதாக இருப்பதை உறுதிசெய்வதற்கான ஒரு முயற்சியேயாகும். அத்துடன் தகராறுகளை அமைதியான முறையில் தீர்த்துவைத்தல், ஒளிவுமறைவற்றதும் நேர்மையானதுமான திறந்த வாணிபம் மற்றும் போட்டி ஆகியவற்றை மதிக்கும் பண்பும் மேற்கூறப்பட்ட கோட்பாடுகளில் முக்கியமானவையாகும்.

இதே கோட்பாடுகளை ஜனாதிபதி ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனமும் நியாயப்படுத்துகிறது. காலாவதியாகிப்போன சட்ட நடைமுறைகளை சீர்திருத்தம் செய்யவேண்டிய தேவையையும், சர்வதேச நியமங்களுக்கு இசைவாக செயற்படுவதற்கு தேவையான சட்டங்களை இயற்றவேண்டிய தேவையையும் அந்த விஞ்ஞாபனம் முக்கியத்துவப்படுத்துகிறது.

 

யதீந்திரா : இலங்கையில் சீனாவின் முதலீட்டு திட்டங்கள் குறித்து பரவலான விமரிசனங்கள் இருந்துவருகின்றன. ஆனால், கொழும்பு துறைமுக நகரத்திட்டத்தையும் அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டத்தையும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியின் இரட்டை இயந்திரங்கள் என்று சீனத்தூதுவர் வர்ணிக்கிறார். அதேவேளை, துறைமுகநகரத்தை பணச்சலவை செய்வோரும் முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபடுவோரும் தங்களுக்கு அனுகூலமாகப் பயன்படுத்திக்கொள்வார்கள் என்று நீங்கள் எச்சரிக்கை செய்திருக்கிறீர்கள். மறுபுறத்தில், பொருளாதார மீட்பராக துறைமுக நகரத்தை இலங்கை அரசாங்கம் நோக்குகிறது போலத் தெரிகிறது. இத்தகைய சூழ்நிலையில் துறைமுகநகரில் முதலீடு செய்வதற்கு மேற்குலக நாடுகளுக்கு பிரதானமாக அமெரிக்காவுக்கு வாய்ப்புகள் இருக்கின்றனவா?

 

அலைனா: பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட துறைமுக நகரச்சட்டத்தின் சில அம்சங்கள் குறித்து அமெரிக்கா தொடர்ச்சியாக விசனம் கொண்டிருக்கிறது. ஊழல்தனமான செல்வாக்குகள் செலுத்தப்படுவதற்கும் பணச்சலவை மற்றும் சட்டவிரோத நிதிப்பயன்பாடுகளுக்கு வாய்ப்புகள் இருக்கும் என்று தெரிகிறது. மோசடிக்காரர்களும் முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களும் துறைமுகநகரை சட்டவிரோத நடவடிக்கைகள் அனுமதிக்கப்படுகின்ற இடமாக நினைத்து அனுகூலமடையப் பார்ப்பார்கள். இது குறித்து அமெரிக்க கம்பனிகள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கும்.

இலங்கையில் முதலீடுசெய்ய உத்தேசிக்கும் அமெரிக்க கம்பனிகள் முதலீட்டுச் சூழல் குறித்து தெளிவான விளக்கப்பாட்டையும் முன்மதிப்பீட்டையும் கொண்டிருக்க விரும்பும். அவர்கள் முதலீடு செய்வதானால் ஒழுங்குபடுத்தல் நிறுவனங்கள், பங்குதாரர்கள் மற்றும் பணிப்பாளர்கள் சபைகளிடமிருந்து  தங்களுக்கு பிரச்சினைகளைத் தரக்கூடிய இடர்பாடுகள் வராமலிருப்பதையே விரும்புவர்.

அமெரிக்காவின் வெளிநாட்டு ஊழல் நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ், ஒரு அமெரிக்க கம்பனியோ அல்லது தனிநபரோ ஒரு வர்த்தகத்தை பெறுவதற்கு அல்லது ஏற்கெனவே இருக்கின்ற வர்த்தகத்தை நிலைநிறுத்துவதற்கு எந்தவொரு வெளிநாட்டு அதிகாரிக்கும் பணத்தை அல்லது பெறுமதியான பொருளை கொடுப்பது சட்டவிரோதமானதாகும்.

துறைமுக நகரத்திட்டத்தில் ஏற்கெனவே செய்யப்பட்டிருக்கும் முதலீட்டில் இருந்து அனுகூலத்தைப் பெற இலங்கை விரும்பும் என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். அது விளங்கிக்கொள்ளக்கூடியதே. இத்தகையதொரு மிகப்பெரிய உட்கட்டமைப்பு - அபிவிருத்தி திட்டத்துக்கான சட்டமூலமோ அல்லது ஒழுங்குவிதிகளோ சரியான முறையில் இருக்கவேண்டியது முக்கியமானதாகும் என்ற எளிமையான எச்சரிக்கையையே நாம் செய்கிறோம். நேர்மையீனமான போட்டி மற்றும் சட்டவிரோதமான நடவடிக்கைக்கு கதவுகள் திறக்கப்படாதிருப்பதை உறுதிசெய்யவேண்டும். உதாரணமாக, சட்டமூலம் பணச்சலவையை அனுமதிக்கக்கூடிய சட்ட ஓட்டைகளைகொண்டிருக்குமாயின் முறைகேடான பணமே கோலோச்சும். நேர்மையான வழியில் வரும் பணத்துக்கு இடமிருக்காது.

"இலங்கையின் பொருளாதார வளர்ச்சியின் இரட்டை இயந்திரங்கள் " என்று நீங்கள் குறிப்பிட்டீர்கள்." இந்த இயந்திரங்கள் இலங்கையை எங்கே கொண்டுபோகும்?" என்பதே முக்கியமான கேள்வி என்று நான் நினைக்கிறேன். அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டத்தினால் நாட்டுக்கு பாரிய கடன்சுமை ஏற்பட்டுவிட்டது. அதன் விளைவாக இறுதியில் அந்த துறைமுகத்தை அடுத்த நூற்றாண்டுக்கு குத்தகைக்கு கொடுக்கவேண்டியதாயிற்று. கொழும்பு துறைமுக நகரம் இலங்கையை சந்தேகத்துக்கிடமான பொருளாதார நடவடிக்கைகளுக்கும்  ஊழலுக்கும் திறந்துவிடக்கூடிய சாத்தியம் இருக்கிறது. இதன் மூலம் யார் பயனடையப்போகிறார்கள்? கெடுதியான தரப்பினர் சிலர் பயனடையக்கூடும் என்றாலும் இலங்கையின் பொருளாதாரம் பாரியளவில் பாதிக்கப்படப்போகிறது. ஒரு நாட்டின் முதலீடுகளால் மக்கள் பயனடையக்கூடியதான, நேர்மறையான விளைபயன்களை கொண்டுவரவேண்டும். எதிர்மறையான விளைபயன்களை கொண்டுவரக்கூடிய முதலீடுகள் எதிர்கால பொருளாதார வளர்ச்சியின் கழுத்துக்கு சுருக்குப்போட்டுவிடும்.

பொருளாதார ரீதியில் பலம்பொருந்தியதும் சுபிட்சமுடையதுமான ஒரு இலங்கை எமது இரு நாடுகளினதும் நலன்களுக்கு உகந்ததாகும். உலகப்பொருளாதாரத்தை ஊக்குவிப்பதில் தனியார்துறை முக்கியமான பங்கையாற்றுகிறது. உயர்தரத்திலான அமெரிக்க தனியார்துறை முதலீட்டை கவருமுகமாகவும், பிராந்தியத்தில் நம்பகமான ஒரு பொருளாதார பங்காளியாக இலங்கை மிளிருவதற்கும் பாடுபடவேண்டியதே இலங்கை அரசாங்கம் முன்னுரிமை கொடுக்கவேண்டிய கொள்கை இலக்குகளாகும்.

 
யதீந்திரா: வடக்கு, கிழக்கில் முதலீடு செய்வதற்கு சீனா அண்மைக்காலமாக அக்கறை காட்டிவருகிறது போலத் தோன்றுகிறது. ஆனால், தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற பெரிய அரசியல் அணியான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு  அதை கடுமையாக எதிர்க்கிறது. இந்தியாவையும் அமெரிக்காவையும்  திருப்திப்படுத்துவதற்காகவே அவர்கள் இத்தகைய நிலைப்பாட்டை எடுக்கிறார்கள் என்ற ஒரு அபிப்பிராயமும் இருக்கிறது. அதேவேளை, முதலீட்டுத்திட்டங்களை ஒரு எல்லைக்கு அப்பால் எதிர்க்கவும் முடியாது என்னும் யாதார்த்தமும் இருக்கிறது. ஏனென்றால், இலங்கைக்கு பாரிய பொருளாதாரத் தேவைகள் இருக்கின்றன. சீனாவின் முதலீடுகள் தொடர்பில் அமெரிக்காவின் பொதுவான அவதானிப்பு என்ன?

 

அலைனா: பொருளாதார விளைபயனைக் கொண்டுவரக்கூடியதும் தொழில் வாய்ப்புக்களைத் தோற்றுவிக்கக்கூடியதும் அத்துடன், கடன் எடுக்கவேண்டிய தேவை இருக்கும் போது, சமாளிக்கக்கூடிய கடன் சுமையை ஏற்படுத்தக்கூடியதுமே நல்லதொரு முதலீடாகும். வேறு ஒரு நாடு இலங்கையில் முதலீட்டைச் செய்யும்போது ஒவ்வொரு இலங்கையரும் இந்த முக்கியமான கேள்விகளை கருத்தில் எடுக்கவேண்டியது அவசியமாகும். உறுதியளிக்கப்பட்ட விளைபயனை அது தோற்றுவிக்கின்றதா?   அது கொண்டுவருகின்ற கடன்சுமை பெறுமதியானதா? முதலீட்டின் ஒட்டுமொத்த தரம் என்ன?

அமெரிக்க கம்பனிகளும் இலங்கை கம்பனிகளும் உற்பத்தி, தயாரிப்பு புத்தாக்கம் மற்றும் விநியோகச் சங்கிலி ஆகியவற்றில் பல நல்ல முதலீடுகளைச் செய்வதில் சேர்ந்து பணியாற்றுகின்றன. இரு நாடுகளும் தரமான பொருட்களை உற்பத்தி செய்யக்கூடியதாக இருக்கிறது. இந்த உறவுமுறைகள் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புக்களைக் கொடுக்கின்றன. இத்தகைய உணர்வுடனான ஒத்துழைப்பும் கூட்டுச் செயற்பாடும் தராதரங்களை உயர்த்துகின்றன. அமெரிக்காவோ இலங்கையோ இதை தனியாக செய்யமுடியாது. விளைபயன்கள் உண்மை நிலைவரத்தை பிரகாசமாக வெளிக்காட்டுகின்றன. இந்த வர்த்தக உறவுமுறைகள் எமது இரு நாடுகளுக்கும் இடையில் இடையறாது சிந்தனைகளின் பெருக்கத்தை உறுதி செய்கின்ற, முன்னெப்போது இல்லாத பலம்பொருந்திய வர்த்தக உறவுகளை கட்டியெழுப்புகின்றன.

உலக வங்கிக்கும் இலங்கைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட அண்மைய உடன்படிக்கையொன்று நல்லதொரு முதலீட்டுக்கு  ஒரு உதாரணமாகும். நாடு பூராவுமுள்ள அணைகள் மற்றும் நீர்ப்பாசனத்திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக அந்த உடன்படிக்கை சுமார் 70 மில்லியன் டொலர்களை வழங்குகிறது. இந்த உதவித்திட்டம் வெள்ளப்பெருக்கு வறட்சி மற்றும் மண்சரிவுகளின் தாக்கத்தை தணிக்கும் என்பதுடன் தண்ணீரின் தரத்தையும் விவசாயிகளின் விளைச்சலையும் மேம்படுத்தும். 356.000 கிராமிய குடும்பங்களுக்கு இது பயனளிக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

மேலும், அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம் கடந்த 6 மாதங்களாக இலங்கையின் தனியார் வங்கிகளுக்கு 26 கோடி டொலர்களை வழங்கியிருக்கிறது. உள்நாட்டு சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையை வலுப்படுத்துவதற்கும் தனியார்துறை முதலீடுகளை பலப்படுத்துவதற்கும் தொழில் முயற்சிகளில் ஈடுபடுகின்ற பெண்களுக்கு உதவுவதற்கும் இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது. தொழில்துறைகளிலும் வர்த்தகத்திலும் பெண்களுக்கு உரிமையும் அதிகாரமும் அளிப்பதன் மூலம் இந்த உடன்படிக்கைகள் பால்சமத்துவத்தை கையாளுகின்ற சகல தரப்பையும் உள்ளடக்கிய நிதிச்செயற்பாடுகளுக்கான இலக்குகளை அடைய உதவுகிறது. பெண்கள் தலைமையிலான தொழில் முயற்சிகளுக்கு ஆதரவை அதிகரிக்கிறது.

எமது நீண்கால தோழமையூடாக, அமெரிக்கா இலங்கையில் விவசாயத்தில் இருந்து கல்வி வரை, சுகாதாரத்தில் இருந்து வீடமைப்பு, நீர் மற்றும் கழிவு நீக்கம், உட்கட்டமைப்பு மீளமைப்பு தொழிற்துறைக்கு ஆதரவு மற்றும் தொழிற்பயிற்சிகள் வரை, பெரும்பாலும் சகல துறைகளிலும் ஆதரவளிக்கிறது. இதுவரையில் இலங்கைக்கு நாம் 350 பில்லியன் இலங்கை ரூபாவை  (2 பில்லியன் டொலர்கள் ) வழங்கியிருக்கிறோம். எமது திட்டங்களில் பெரும்பாலானவை எமது அலுவலர்களான இலங்கை நிபுணர்களினால் வடிவமைக்கப்படுகின்றன. நாம் மக்களுடன், தனியார்துறையினருடன், இலங்கை அரசாங்கத்துடன்  நெருக்கமாக பணியாற்றுகிறோம். எமது உதவிகளில் அதிகப் பெரும்பான்மையானவை கடன்களாக அன்றி நன்கொடையாகவே வருகின்றன. இது இலங்கை மக்களின் நல்வாழ்வில் அமெரிக்காவுக்கு இருக்கும் பற்றுறுதியை உணர்த்துகிறது.

 

யதீந்திரா: காணாமல் போனோரின் உறவினர்கள் தங்களின் ஆர்ப்பாட்டங்களில் அமெரிக்க கொடியுடன் காணப்பட்டார்கள். இது அமெரிக்கா மீதான அவர்களின் நம்பிக்கையின் சான்றாகும். ஆனால், மனித உரிமைகள் விவகாரங்களில் எதிர்பார்க்கப்பட்ட முன்னேற்றம் இதுவரையில்  ஏற்படவில்லை என்று தமிழர்கள் மத்தியில் அபிப்பிராயம் ஒன்று இருக்கிறது. இதை அடிப்படையாகக்கொண்டு நோக்குமபோது இலங்கையின் மனித உரிமைகள் பிரச்சினைகளில் அமெரிக்காவின் ஈடுபாடு எதிர்பார்க்கப்பட்ட விளைவுகளைத் தரவில்லை என்று கருதமுடியுமா?

 

அலைனா: அமெரிக்கா சுதந்திர சமூகங்களையும் மனித உரிமைகளையும் மதிக்கிறது. உள்நாட்டுப் போரின்போதும் இலங்கையின் வரலாற்றில் வேறு காலகட்டங்களிலும் காணாமல்போன சகல சமூகங்களையும் சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு பதில் கிடைக்கவேண்டியது அவசியமாகும். தங்களது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துகொள்ள இன்னமும் நாட்டம் கொண்டிருக்கும் குடும்பங்களுடனான எனது சந்திப்பு இலங்கையில் பணியாற்றிய காலத்திலான எனது நினைவுகளில் என்றென்றும் நிலைத்திருக்கும். அடிப்படையில் இந்தப் பிரச்சினைகளுக்கு இலங்கையர்களே தீர்வைக்காணவேண்டும். நல்லிணக்கத்தை மேம்படுத்துவது தங்களது சொந்த நலன்களுக்கு உகந்தது என்பதைபெரும்பாலான இலங்கையர்கள் விளங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். இது ஒவ்வொரு மனிதர்களும்  செய்யவேண்டியதாகும். காணாமல்போனவர்கள் எமது அன்புக்குரியவர்களாக இருந்து அவர்களுக்கு நேர்ந்த கதி பற்றியும் பதில் கிடைக்காமல் இருந்தால் எமக்கு எப்படியிருக்கும்?

வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் நீதியையும் பொறுப்புக்கூறலுக்கான பொறிமுறையையும்  பெற உரித்துடையவர்கள். இந்த இலக்கை அடைவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை போன்ற பொறிமுறைகள் உதவுகின்றன. சகல மக்களுக்கும் பொறுப்புக்கூறும் கடப்பாடுடைய அரசாங்கம் ஒன்று, குற்றவியல் முறைப்பாடுகளை மெய்யாகவும் நம்பகத்தன்மையுடனும் விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குத்தொடுக்க முன்வரவேண்டும் என்கிற அதேவேளை, மோதலைத் தோற்றுவித்த அரசியல், பொருளாதார, சமூக பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முயற்சிக்கவேண்டும்.

ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை அமெரிக்கா வலியுறுத்தும்போது இந்த இலட்சியங்கள் எல்லாவற்றையும் நாம் எமது நாட்டில் கச்சிதமாக கடைப்பிடிக்கிறோம் என்றாகிவிடாது. பெருமளவுக்கு கச்சிதமான ஒன்றியம் ஒன்றை அமைப்பதற்கு நாம் எப்போதும் பாடுபடுகிறோம். உயர்ந்த தராதரங்களை பின்பற்ற முயற்சிக்கிறோம். ஆத்ம பரிசோதனை என்பதும் ஒரு சமுதாயமாக வளர்வது என்பதும்  எப்போதுமே சிக்கலானதும் வேதனை மிக்கதுமாகும். ஆனால் இவ்வாறுதான் ஜனநாயகங்கள் செயற்படுகின்றன. ஏனென்றால், இறுதியில்  ஆட்சி செய்யப்படுகிறவர்களுக்கு உதவுவதற்கே அரசாங்கங்கள் இருக்கின்றன. சமூகங்கள் அமைதியான முறையில் வளர்வதற்கு உதவுவதே அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சாசனத்தில் கூறப்பட்டுள்ள சுதந்திரங்களை மேம்படுத்துவதற்கு எமது நண்பர்களையும் பங்காளிகளையும் நாம் ஊக்கப்படுத்துகின்றாம். நல்லிணக்க முயற்சிகளை தொடர்ந்து நாம் ஆதரிக்கிறோம். ஜனநாயக ரீதியானதும் சுபிட்சமுடையதும் சகல தரப்பினரையும் அரவணைக்கின்றதுமான இலங்கையொன்றின் மீது நாம் பற்றுறுதி கொண்டிருக்கிறாம்.

 

யதீந்திரா: தமிழர் பிரச்சினையானது அடிப்படையில் ஒரு அரசியல் பிரச்சினையாகும். அரசியல் பிரச்சினை அரசியல் தீர்வொன்றின் ஊடாக மாத்திரமே தீர்க்கப்படமுடியும். போர் முடிவுக்கு வந்து 12 வருடங்கள் கடந்துவிட்ட போதிலும், தமிழர் பிரச்சினையில் ஆரம்ப கருத்தொருமிப்பு இன்னமும் எட்டப்படவில்லை. இந்திய-இலங்கை உடன்படிக்கையினால் கொண்டுவரப்பட்ட 13வது திருத்தம் கூட இன்னமும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. அரசியல் தீர்வொன்றில் அமெரிக்காவுக்கு அக்கறை இருப்பதாக தமிழ் அரசியல் வட்டாரங்களில் கருத்தொன்று இருக்கிறது. இது விடயத்தில் இந்தியா அக்கறை வெளியிட்டு வருகின்றது. இந்த பின்னணியில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வொன்றில் அமெரிக்க நிலைப்பாடு என்ன?

 

அலைனா: இலங்கையின் பல்வேறுபட்ட சமூகங்களையும் சேர்ந்த சகலருக்குமான நல்லாட்சி, மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை அமெரிக்கா ஆதரிக்கிறது. அரசியல் ரீதியில் அதற்கு இருக்கக்கூடிய தடைகளைத் கடந்து பணியாற்றவேண்டியதும் இதில் அடங்கும். ஐக்கிய நாடுகளின் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் மீது இலங்கை பற்றுறுதி கொண்டுள்ளது. அந்த இலக்குகளை அடைவதில் இலங்கைக்கு நாம் ஆதரவளிக்கிறோம்.

இலங்கையில் ஆட்சிமுறை மற்றும் மனித உரிமைகளுக்கு அரசியல் பரிமாணம் இருப்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். அரசியல் முனையில் முன்னேற்றம் ஏற்படவேண்டும் என்று நாம் வலியுறுத்துகின்றோம். அரசியலமைப்பு ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுவதை நாம் ஆதரிக்கிறோம். மாகாணசபைத் தேர்தல்களை நடத்துமாறு அரசாங்கத்தை நாம் ஊக்கப்படுத்துகிறோம். இலங்கையின் அரசியல் முறைமையில் மாற்றங்களை பேச்சுவார்த்தை மூலம் ஏற்படுத்துவதற்கு பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்திருக்கின்றன என்பதை நான் அறிவேன். இலங்கை அரசுக்குள் பிராந்திய மற்றும் உள்ளூராட்சிகள் மட்டத்தில் அதிகார வலுவூட்டல் செயன்முறைகள் முன்னெடுக்கப்படுவதையும் நான் அறிவேன். அத்தகைய மாற்றங்களை தீர்மானிப்பது இலங்கை மக்களைப் பொறுத்தவிடயம் என்கிற அதேவேளை, இனமுரண்பாட்டின் ஆணிவேர்க்காரணங்களை கையாளுவதற்கு அரசியல் தீர்வும் வேறு இணக்கப்பாடுகளும் அவசியம் என்று அமெரிக்கா கருதுகிறது.

வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் நீதியையும் பொறுப்புக்கூறலுக்கான பொறிமுறையையும்  பெற உரித்துடையவர்கள். இந்த இலக்கை அடைவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை போன்ற பொறிமுறைகள் உதவுகின்றன. சகல மக்களுக்கும் பொறுப்புக்கூறும் கடப்பாடுடைய அரசாங்கம் ஒன்று குற்றவியல் முறைப்பாடுகளை மெய்யாகவும் நம்பகத்தன்மையுடனும் விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குத்தொடுக்க முன்வரவேண்டும் என்கிற அதேவேளை, மோதலைத் தோற்றுவித்த அரசியல், பொருளாதார, சமூக பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முயற்சிக்கவேண்டும்.

ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை அமெரிக்கா வலியுறுத்தும்போது இந்த இலட்சியங்கள் எல்லாவற்றையும் நாம் எமது நாட்டில் கச்சிதமாக கடைப்பிடிக்கிறோம் என்றாகிவிடாது.பெருமளவுக்கு கச்சிதமான ஒன்றியம் ஒன்றை அமைப்பதற்கு நாம் எப்போதும் பாடுபடுகிறோம்.உயர்ந்த தராதரங்களை பின்பற்ற முயற்சிக்கிறோம்.ஆத்ம பரிசோதனை என்பதும் ஒரு சமுதாயமாக வளர்வது என்பதும்  எப்போதுமே சிக்கலானதும் வேதனை மிக்கதுமாகும்.ஆனால் இவ்வாறுதான் ஜனநாயகங்கள் செயற்படுகின்றன.ஏனென்றால்இஇறுதியில்  ஆட்சி செய்யப்படுகிறவர்களுக்கு உதவுவதற்கே அரசாங்கங்கள் இருக்கின்றன.சமூகங்கள் அமைதியான முறையில் வளர்வதற்கு உதவுவதே அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

அதேவேளை, ஒரளவு கவனமெடுத்து போதுமான மூலவளங்களையும் வழங்கினால், களத்தில் உள்ள மக்கள் தங்களது வேறுபாடுகளுக்கு அப்பால் செயற்படக்கூடியவர்கள் என்பது எமக்கு தெரியும். பக்கச்சார்பற்ற முறையில், அடிமட்டத்தில் நாம் அரசியல் நடவடிக்கைக்கு நாம் ஆதரவாக இருந்துவருகின்றோம்.  உதாரணமாக திருகோணமலையில் ஒரு சம்பவத்தை எடுத்துக்கொள்ளலாம்.திருகோணமலைக்கு வெளியே ஒரு சமூகத்திற்குள் நீர்க்கால்வாய் ஒன்று கவனிப்பாரற்றுக் கிடந்தது. அதனால் சிங்கள சமூகத்துக்கும் தமிழ்ச் சமூகத்துக்கும் இடையே முரண்பாடுகள் தோன்றின. கால்வாயைப் புனரமைக்க அமெரிக்கா சிறிய நன்கொடையொன்றை வங்கியது. இப்போது அந்த கால்வாய் பல இனங்களையும் சேர்ந்த விவசாயிகள் கூட்டமைப்பினால் நிருவகிக்கப்பட்டுவருகிறது. அந்த கூட்டமைப்பு சகலரும் நீரைப்பெறுவதற்கு அனுமதிக்கிறது. அடிப்படையில் ஒரு உட்கட்கமைப்பு பிரச்சினையாக விளங்கியதை சரியாகக் கையாண்டதால் இரு குழுக்களுக்கும் இடையில் உள்ள முரண்பாடுகளை உகந்த முறையில் முடிவுக்கு கொண்டுவரக்கூடியதாக இருந்தது.

 

யதீந்திரா: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் அதிகாரத்துக்கு வந்திருப்பதால் சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாத குழுக்கள் ஊக்கம் பெற்றிருக்கின்றன என்று பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள்.ஆப்கானிஸ்தான் நாடுகடந்த ஜிஹாதிகளுக்கு புகலிடமாக மீண்டும் இருக்கப்போகிறது என்று சிலர் எச்சசரிக்கை செய்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், இலங்கை, மாலைதீவு போன்ற நாடுகள் பாதிக்கப்படக்கூடியது சாத்தியமா?

 

அலைனா: பயங்கரவாதம் என்பது ஒரு உலகளாவிய பிரச்சினை என்பதை இலங்கையர்கள் நன்கு அறிவார்கள். ”இது புதியதொரு உலகம்.பயங்கரவாதம் ஆப்கானிஸ்தானுக்கு அப்பால் விரவிக்கிடக்கிறது.சோமாலியாவில் அல் ஷாபாவிடமிருந்து அச்சுறுத்தலை நாம் எதிர்நோக்குகிறோம். சிரியாவிலும் அரேபியன் குடாவிலும் அல் ஹய்டாவின் துணை அமைப்புகளிடம் இருந்து அச்சுறுத்தல் வருகிறது. ஐ.எஸ்.ஐ.எஸ். சிரியாவிலும் ஈராக்கிலும் இஸ்லாமிய இராச்சியத்தை உருவாக்கவும் அதன் துணை இராச்சியங்களை ஆபிரிக்காவிலும் ஆசியாவிலும் நிறுவவும் முயற்சித்துக்கொண்டிருக்கிறது.

தீர்வுகள் மீது நாம் கவனம் செலுத்தவேண்டியது முக்கியம் என்று நான் நினைக்கின்றேன். வரக்கூடிய அச்சுறுத்தலை தணிப்பதற்கு வ்வாறு சேர்ந்து பணியாற்ற முடியும் என்று நாம் சிந்திக்கவேண்டும்.இலங்கை உட்பட எமது பங்காளிகள் மத்தியில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அமைப்புகளிடையேயும் கடல்பாதுகாப்பிலும்  ஒத்துழைப்பு வேண்டும்.புலனாய்வு தகவல்கள் பரிமாறப்படவேண்டும். மேலதிகமாக பயங்கரவாதக் குழுக்களுக்கு சட்டவிரோத அமைப்புக்களிடமிருந்தும் போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் கிறிமினல் நடவடிக்கைகளில் இருந்தும் பணம் கிடைக்கிறது. அதனால் நாடுகடந்த குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதில் சர்வதேச ஒத்துழைப்பு மிகவும் அவசியமானதாகும்.

எவ்வாறெனினும், குடியியல் சுதந்திரங்களுக்கும் மனித உரிமைகளுக்கும் பாதிப்பு ஏற்படாதவகையில் பயங்கரவாதத்துக்கு எதிராக போராடவேண்டியது முக்கியமானதாகும். தீவிரவாதம் அதிகரிக்காத வகையிலும் அப்பாவி மக்கள் பாதிக்கப்படாத வகையிலும் அச்சுறுத்தல்கள் முறியடிக்கப்படுவதை உறுதிப்படுத்த வல்ல பொறிமுறைகள் இப்போது இருப்பது உலகளாவிய செயற்பாடுகளின் விளைவாக இடம்பெற்ற ஒன்றாகும். இந்த உரிமைகளையும் சுதந்திரங்களையும் மதிப்பதன் மூலம் இறுதியில் பயங்கரவாதத்துக்கான வாய்ப்புக்களை நாம் குறைப்போம்.