Skip to main content

நெருக்கடியில் சிக்கும் சீனாவின் புதிய பட்டுப்பாதை

-

By: எலிசா கிங்

சிறிலங்காவில் அண்மையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதாரத் திட்டங்கள் தொடர்பாக சீனா எதிர்பாராதளவு சவால்களுக்கு முகங்கொடுத்து வருகிறது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை மேலும் அபிவிருத்தி செய்வதுடன் அதற்கருகில் பாரியதொரு பொருளாதார வலயத்தை உருவாக்கும் நோக்குடன் கடந்த டிசம்பர் மாதம் இருதரப்பு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடப்பட்ட போது, பல நூற்றுக்கணக்கான மக்கள் இதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

சிறிலங்காவில் சீனா முதலீடு மேற்கொள்வதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது இதுவே முதற்தடவையாகும். சீன முதலீட்டிற்கு எதிரான ஆர்ப்பாட்டமானது வன்முறையாக மாறியதுடன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவற்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகள் மற்றும் தண்ணீர்ப்  பிரயோகத்தையும் மேற்கொண்டனர்.

சிறிலங்காவில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டமானது சீனாவின் ‘புதிய பட்டுப் பாதைத் திட்டம்’ எவ்வாறு மேற்கொள்ளப்படவுள்ளது என்பதற்கான எடுத்துக்காட்டாக உள்ளது. சீனா தனது பட்டுப்பாதைத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக சிறிலங்காவில் மட்டுமல்லாது சீனப் பெருநிலப்பரப்புத் தொடக்கம் ஆபிரிக்க முனை வரை இராணுவ மற்றும் வர்த்தக சார் வலைப்பின்னல்களை உருவாக்கி வருகிறது.

அதிகாரத்துவ நாடுகளின் விளையாட்டு மைதானம் என நன்கறியப்படும் டிஜிபோட்டி (Djibouti) என்கின்ற நாடும் சீனாவின் முத்துமாலைத் திட்டத்திற்குள் அடங்குகிறது. டிஜிபோட்டியில் ஏற்கனவே அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான் போன்ற நாடுகள் தமது தளங்களைப் பலப்படுத்தி வரும் நிலையில் தற்போது சீனாவும் தனது இராணுவத் தளத்தை இங்கு நிறுவி வருகிறது.

சீனாவானது மற்றைய நாடுகளுடன் விரிசலை ஏற்படுத்துவதைத் தவிர்ப்பதில் விழிப்புடன் செயற்பட வேண்டும். குறிப்பாக சிறிலங்காவில் அண்மையில் சீனாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது போன்று வேறு நாடுகளிலும் தனக்கான எதிர்ப்பைச் சம்பாதிக்காது சீனா விழிப்புடன் செயற்பட வேண்டும்.

தேர்தல் பரப்புரையின் போது சீனாவுடன் உடன்பாடுகளை மேற்கொள்ளமாட்டேன் என உறுதியளித்த அதிபர் மைத்திரிபால சிறிசேன தற்போது அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் 80 சதவீதத்தை 1.1பில்லியன் டொலர் பெறுமதிக்கு 99 ஆண்டுகால குத்தகைக்கு சீன அரச நிறுவனமான Merchants Port Holdings இற்கு  வழங்குவதாக ஒப்புக்கொண்டார். சிறிலங்கா மீதான அதிக கடன் சுமை காரணமாகவே இவ்வாறானதொரு முடிவுக்கு வரவேண்டியேற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், சீனாவுடனான இப்புதிய ஒப்பந்தமானது சிறிலங்காவின் இறையாண்மையைப் பாதிப்பதாகக் கூறி எதிர்ப்புப் போராட்டங்களை மேற்கொண்டனர்.

சிறிலங்காவின் உள்நாட்டு யுத்தத்தைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான முயற்சிகளை இந்தியா கைவிட்டதன் பின்னர், 2005ல் சிறிலங்காவிற்கு சீனா தனது உதவித் திட்டத்தை வழங்க ஆரம்பித்தது. சிறிலங்காவின் இராணுவத் தேவைகளுக்காக சீனாவால் 1 பில்லியன் டொலர் நிதி நன்கொடையாக வழங்கப்பட்டது.

ஆனால் தற்போது சிறிலங்கா சீனாவிற்கு எட்டு பில்லியன் டொலரைக் கடனாக வழங்க வேண்டிய நிலையில் உள்ளது.  அதாவது சீனாவால் சிறிலங்காவிற்கு வழங்கப்பட்ட மொத்த கடன் தொகையின் 12 சதவீதத்தை கடனாக வழங்க வேண்டும். சிறிலங்கர்கள் சீனாவின் முதலீட்டை நவ-கொலனித்துவம் என்கின்ற கண்ணாடியின் ஊடாக நோக்க ஆரம்பித்துள்ளனர். ஆகவே சீனாவின் அம்பாந்தோட்டைத் திட்டமே சிறிலங்கா மீதான சீனாவின் கடைசித் திட்டமாக இருக்கலாம்.

சிறிலங்காவானது தனது கடன்சுமையைக் குறைக்க வேண்டிய மற்றும் முதலீட்டை மேற்கொள்ள வேண்டிய தேவையில் உள்ள அதேவேளையில், சீனாவின் முதலீட்டை இலங்கையர்கள் மறுப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இதற்கும் மேலாக சீனாவானது கொழும்பின் நலன்களைக் கருத்திற் கொண்டு இந்த நிதியை முதலீடு செய்யவில்லை.

ஆசியாவின் கேந்திர முக்கியத்துவம் மிக்க அமைவிடங்களில் சிறிலங்கா இருந்திருக்காவிட்டால் அல்லது இங்கு ஆழமான துறைமுகங்கள் இருந்திருக்காவிட்டால் சிறிலங்காவில் சீனா முதலீடு செய்திருக்கும் என்பது சந்தேகமே. அத்துடன் சிறிலங்காவானது முத்துமாலை என்கின்ற மூலோபாயத்தில் உள்ளடங்கியிருப்பதும் சீனாவிற்குச் சாதகமானதாக உள்ளது.

விற்குச் சாதகமாகவே அண்மைய உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பதை கண்டுகொண்ட பின்னர் இலங்கையர்கள் நியாயமான வகையில் தமது எதிர்ப்புக்களைக் காண்பிக்க ஆரம்பித்தனர். சீனா தனது புதிய பட்டுப் பாதைத் திட்டத்தின் ஒரு கட்டமாக தனது முதலாவது வெளிநாட்டு இராணுவத் தளத்தை டிஜிபோட்டியில் நிர்மாணிக்கின்றமை மிகவும் ஆபத்து மிக்க நடவடிக்கையாகும்.

சிறிலங்காவைப் போன்றே, ஆபிரிக்க முனையில் உள்ள டிஜிபோட்டி, சீனாவிடமிருந்து 14 பில்லியன் டொலருக்கு மேல் நிதியைப் பெற்றுள்ளது. அதாவது இந்த நிதியின் கீழ் டிஜிபோட்டியில் இரண்டு விமான நிலையங்கள், மூன்று துறைமுகங்கள், எதியோப்பியாவிற்கான ஒரு தொடருந்துப் பாதை, நீரைக் கொண்டு செல்வதற்கான நீர்க் குழாய் விநயோகம் போன்ற பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

டிஜிபோட்டி தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 60 சதவீதத்தை சீனாவிடமிருந்து கடனாகப் பெற்றுள்ளது. டிஜிபோட்டியில் சீனா புதிய இராணுவத் தளம் அமைப்பதானது அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகத்தை கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. பு

திய பட்டுப் பாதைத் திட்டத்தின் ஒரு பகுதியாக அமைக்கப்படும் இப்புதிய இராணுவத் தளமானது அமெரிக்க – ஆபிரிக்க கட்டளைப் பீடத்தின் நடவடிக்கைகள் இடம்பெறும் தளம் அமைந்துள்ள லெமோனியர் முகாமிலிருந்து ஒரு சில கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த இராணுவத் தளங்கள் அமைந்துள்ள இடமானது இரு தரப்பினருக்கும் அசௌகரியத்தையே வழங்கும். அத்துடன் இது டிஜிபோட்டிக்கும் பிரச்சினையை ஏற்படுத்தும். அதாவது உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் இங்கு முகாமிட்டுள்ளதால் இங்கு மோதல் ஏற்படுவதற்கான சூழல் உருவாகலாம்.

டிஜிபோட்டி மீதான சீனாவின் செல்வாக்கை கட்டுப்படுத்துவதற்கு ட்ரம்ப் நிர்வாகம் அதிகளவிலான நிதியை டிஜிபோட்டியில் முதலீடு செய்யும் என எதிர்பார்க்க முடியாது. இந்த மாதத்தின் இறுதியில் ட்ரம்ப் நிர்வாகமானது அமெரிக்காவின் வெளிநாட்டு உதவித் தொகையைக் அதிகளவில் குறைப்பதற்கான பரிந்துரையை மேற்கொள்ளும் என வெள்ளை மாளிகையின் வரவு செலவுத் திட்ட இயக்குனர் தற்போது உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பில் ஜிபுற்றிக்கு ட்ரம்ப் நிர்வாகம் விலக்களிக்கும் எனக் கருதமுடியாது.

டிஜிபோட்டி மீதான தனது முதலீட்டை அமெரிக்கா குறைத்தாலும் சரி அல்லது குறைக்காவிட்டாலும் சரி, சீனா இங்கு தனது இராணுவத் தளத்தை விரிவுபடுத்துவதால் இது தொடர்பில் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் மோதல் ஒன்று ஏற்படுத்துவதற்கான சூழல் உருவாகும். ஆகவே இவ்வாறான காரணிகளை வைத்து நோக்கும் போது சீனாவின் புதிய பட்டுப்பாதைத் திட்டமானது பல்வேறு ஆபத்திற்கு உள்ளாவதை உறுதிப்படுத்தலாம்.

ஆகவே சீனா இவ்வாறான ஆபத்திலிருந்து தன்னைப் பாதுகாப்பதற்காக கடந்த சில மாதங்களாக சிறிலங்கா போன்ற நாடுகளில் பொருளாதாரத் திட்டங்களை மேற்கொள்வதில் முன்னுரிமை காண்பிப்பதுடன், டிஜிபோட்டி போன்ற ஸ்திரமற்ற சர்வதிகாரிகளைக் கொண்ட நாடுகளில் தனது இராணுவப் பலத்தை நிலைப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பில் சீனா விழிப்புடன் செயற்படாவிட்டால், டிஜிபோட்டியில் சீனா சந்தித்துள்ள மனக்கசப்புக்கள்  சிறிலங்காவில் கைகலப்புக்கள் ஏற்படுவதற்கு வழிவகுக்கும்.