Skip to main content

முன்னாள் சமாதானத்தூதுவர் எரிக் சொல்ஹெய்மின் பிரத்தியேக நேர்காணல்

-


இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கை அரசாங்கத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளில் அனுசரணை முயற்சிகளில் ஈடுபட்ட சர்வதேச சமூகத்தினால் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு முகமாக இன்னமும் விளங்கும் சொல்ஹெய்ம், எமது தளத்திற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணல்.

 


 

இலங்கையில் உள்நாட்டுப்போர் முடிவிற்கு வந்து 10 வருடங்களுக்கும் கூடுதலான காலம் கடந்துவிட்டது. என்றாலும் தமிழர்களுக்கான அரசியல் தீர்வொன்றைப் பொறுத்தவரை குறிப்பிடத்தக்க எந்தவொரு முன்னேற்றமும் இல்லை. 2015இல் இலங்கையில் மைத்திரி – ரணில் அரசாங்கம் பதவிக்கு வந்தபோது இணக்கத் தீர்வொன்றுக்கு சாதகமானதாக அந்த அரசாங்கம் அமையும் என்று பலரும் நோக்கினார்கள். இலங்கை சமாதான முயற்சிகளின் ஒரு முக்கிய பிரமுகர் என்ற வகையில் உங்கள் அபிப்பிராயம் என்ன?

இலங்கையில் தமிழi; பிரச்சினைக்கு நிலையான இணக்கத்தீர்வொன்றை நோக்கிய பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இலங்கைக்குள் தமிழ் பேசும் மக்களுக்கான சுயாட்சியை அடிப்படையாகக் கொண்டதாக அத்தகைய தீர்வு அமைய வேண்டும். அது சமஷ்டி முறையொன்றை அடிப்படையாகக் கொண்டதாக அமையலாம்.

 

2017 ஆம் ஆண்டில் 'வேல்ட் இஸ் வன் நியூஸ்' என்ற இணையத்தளத்திற்கு நீங்கள் வழங்கிய நேர்காணல் ஒன்றில் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளாகப் பிளவுபட்டு நிற்கும் சிங்கள சமூகமும், சமஷ்டி முறையை ஏற்றுக்கொள்வதற்கு உறுதியான நிலைப்பாட்டைத் தெரிவிக்காத பிரபாகரனுமே இரு பிரதான முட்டுக்கட்டையாகும் என்று நீங்கள் கூறியிருந்தீர்கள். இரு பிரதான கட்சிகளும் சேர்ந்து தேசிய பிரச்சினைத் தீர்வுக்கான முன்முயற்சிகளை எடுப்பது சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கும் என்று நீங்கள் வேறொரு சந்தர்ப்பத்தில் கூறியிருந்தீர்கள். ஆனால் கடந்த நான்கு வருடங்கள் இரு பிரதான கட்சிகளும் சேர்ந்து ஆட்சியமைத்த போதிலும் கூட எதுவும் சாத்தியப்படவில்லையே. இதுபற்றி என்ன கூறுகின்றீர்கள்?

சிங்கள அரசியல் தலைமைத்துவத்திடம் அரசியல் தொலைநோக்கும், ஒத்துழைப்பும் இல்லாமை எமது அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட சமாதான முயற்சிகள் தோல்வியடைந்தமைக்கு ஒரு காரணம். மற்றொரு காரணம் சமஷ்டி முறையொன்று தொடர்பில் இணக்கப்பட்டுக்கு வருவதற்கு விடாப்பிடியாக பிரபாகரன் தயக்கம் காட்டியமையாகும். அரசியல்வாதிகள் நாட்டின் எதிர்காலத்தை நினைவில்கொண்டு தொலைநோக்குடனும், இராஜதந்திர விவேகத்துடனும் உண்மையான தலைவர்களாக மாறவேண்டிய நேரம் தற்போது வந்துவிட்டது.

 

ஜெனீவா ஊடாக இலங்கை அரசாங்கத்தின் மீது சர்வதேச சமூகத்தினால் நெருக்குதலைப் பிரயோகிக்க முடியுமென்று பெரும்பாலான தமிழர்கள் நம்பினார்கள். ஆனால் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் தொடர்ந்தும் மறுத்து வருகிறது. தமிழ் குழுக்களும், புலம்பெயர் தமிழ் சமூகத்தின் பெரும்பகுதியினரும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபையின் முன்பாகவும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பாகவும் இலங்கை கொண்டுவரப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இத்தகைய நிலையில் சர்வதேச சமூகத்தின் பங்கு பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?

சர்வதேச சமூகம் அரசியல் இணக்கத்தீர்வொன்றுக்கான சில நெருக்குதல்களைக் கொடுப்பதில் உதவமுடியும். ஆனால் அரசியல் முழுவதுமே உள்நாட்டு விவகாரம். இலங்கையின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் பிரதான சக்திகள் உள்நாட்டில் உள்ளவையாக இருக்கமுடியும்.

 

அண்மையில் நடைபெற்ற இந்தியப் பொதுத்தேர்தலில் பிரதமர் மோடிக்குக் கிடைத்த வெற்றி இலங்கையில் தமிழர் பிரச்சினைக்கான தீர்விற்குப் பங்களிப்புச் செய்யமுடியும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா?

மோடியின் மகத்தான வெற்றி இந்தியாவின் உறுதிப்பாட்டிற்கு நல்லது. அவரொரு பலம்பொருந்திய தலைவர். உலக அரங்கில் முன்னரைக் காட்டிலும் கூடுதலான அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரமொன்றைத் தன்னம்பிக்கையுடன் இந்தியா வகிக்குமென்று எதிர்பார்க்கின்றோம். அது இந்தியாவிற்கு மாத்திரமல்ல, இலங்கைக்கும் கூட சாதகமானதாக அமையும். இலங்கைத் தமிழர்களுக்கு நீதியான தீர்வொன்று கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்தியா எப்போதும் குரல் கொடுத்து வந்திருக்கிறது.

 

தமிழ்ர்களின் இடர்நிலை தொடர்பில் உங்களுக்கிருக்கும் அனுதாபம் பற்றி நேர்காணல்கள் பலவற்றில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால் சமாதான முயற்சிகள் தோல்வியடைந்த பிறகு இலங்கைப் பிரச்சினைகள் குறித்துப் பெரிதாகப் பேசுவதில்லை. இந்தப் பிரச்சினையில் உங்களுக்கு ஒரு தார்மீகப் பொறுப்பு இருக்கிறது என்று நீங்கள் கருதவில்லையா?

நான் இப்பொழுது இலங்கை விவகாரத்தில் ஒரு மத்தியஸ்தானத்தில் இல்லை. தொலைதூரத்திலிருந்து கருத்துக்களை மாத்திரமே கூறிக்கொண்டிருக்கிறேன். இலங்கைத் தமிழர்களின் நியாயபூர்வமான உரிமைகளுக்கு சாத்தியமான எந்தவொரு வழியிலும் ஆதரிப்பதற்கு நான் மகிழ்ச்சியுடன் முன்வருவேன்.

 

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் இன்னும் சில மாதங்களில் வரவிருக்கிறது. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ பலம்பொருந்திய ஒரு வேட்பாளராக களத்தில் இருப்பாரென்று எதிர்பார்க்கப்படுகின்றது. கோத்தாபயவின் எழுச்சி குறித்து 10 வருடங்களுக்கு முன்னர் நீங்கள் எதிர்வுகூறியதாக நாம் அறிகிறோம். அவ்வாறு நேரும்பட்சத்தில் இலங்கை பெரிய வல்லரசு நாடுகள் மத்தியில் மறைமுக யுத்தமொன்றின் களமாக மாறிவிடக்கூடும் என்று சில அரசியல் அவதானிகள் வாதிடுகின்றனர். இருபற்றி உங்கள் கருத்து என்ன?

மறைமுக யுத்தக்கோட்பாட்டில் எனக்கு நம்பிக்கையில்லை. தெற்காசியாவில் பெரியதொரு சக்திமிக்க நாடாக இந்தியா இருந்துவருகிறது. அண்மைக் காலமாக சீனாவின் செயற்பாடுகள் கூடுதலாகத் தெரியக்கூடியளவு அதிகரித்துள்ளன. இலங்கையில் இருக்கக்கூடிய எந்தவொரு அரசியல் கட்சிகளுமே வெளிச்சக்திகளின் மறைமுகக் கையாட்களாக இல்லை. இலங்கையர்களே தங்களது சொந்தத் தலைவிதியின் ஆசான்கள்.

 

இன்றைய தமிழ் அரசியல் தலைமைத்துவத்திற்கு நீங்கள் வழங்கும் ஆலோசகைள் என்ன? தமிழ் அரசியல் தலைவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறை எத்தகையதாக இருக்க வேண்டும்?

சலித்துப்போன பாராளுமன்ற அரசியலுக்கும், போருக்கும் இடைப்பட்ட மூன்றாவது ஒரு பாதையைக் கண்டறிய வேண்டிய தேவை தமிழ் தலைமைத்துவத்திற்கு இருக்கிறது. அத்தகைய பாதை அஹிம்சை மார்க்கத்திலான - கூடுதலான அளவிற்கு ஒருங்கிணைந்த சிவில் நடவடிக்கை சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும்.