Skip to main content

இந்தியா தயார் நிலையில் – கொமடோர் வாசனின் பிரத்தியேக நேர்காணல்

Vasan

By: ஆ.யதீந்திரா

கொமடோர் வாசன்: இந்திய கடற்படையின் ஒய்வுபெற்ற மூத்த அதிகாரியாவார். தற்போது, சீன ஆய்வுகளுக்கான சென்னை நிலையத்தின் பணிப்பாளராகவும், இந்திய தேசிய கடற்பாதுகாப்பு ஆய்வுகளுக்கான நிலையத்தின், தமிழ் நாட்டு கிளையின் பணிப்பாளராகவும் செயற்பட்டுவருகின்றார். 

 

யதீந்திரா : அண்மைக்காலமாக சீனாவின் செல்வாக்கு இலங்கையில் குறிப்பிடத்தக்க அளவுக்கு வளர்ந்திருக்கிறது. இது மிகவும் வெளிப்படையானதும் கூட. இத்தகைய பின்புலத்தில், ஒரு பிராந்திய வல்லரசு என்ற வகையில், இந்தியா இலங்கை மண்ணில் பாரிய பின்னடைவுகளை சந்திக்கிறது என்று பரவலான கருத்து நிலவுகிறது. இதனை இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையில் ஏற்பட்ட தோல்வி என்றும் சில தமிழ் அவதானிகள் வர்ணிக்கிறார்கள். இது தொடர்பில் உங்களது அவதானிப்பு என்ன?

 

வாசன் : இந்தியாவின் அயல் நாடுகளில் செல்வாக்குச் செலுத்தும் வகையில், சீனா படிப்படியாக ஊடுருவல்களைச் செய்துவிட்டது என்பதில் சந்தேகம் இல்லை. இலங்கை விவகாரத்தைப் பொறுத்தவரை, இந்தியாவின் பாரம்பரியமான தெற்கு நேசநாட்டுடன் சீனா ஆழமான ஈடுபாட்டைக் கொண்டுள்ளது என்பதற்கு சான்றுகள்  வெளிப்படையானவை. அதற்கு இரு நாடுகளுமே பொறுப்பு. பல முனைகளில் இலங்கையின் முன்னெடுப்புகளை இந்தியா ஆதரித்து வந்திருக்கிறது. ஆனால், தன்னிடமிருக்கும் பெருமளவு பணத்தைப் பயன்படுத்தி, பல்வேறு நாடுகளில் முதலீடுகளைச் செய்யும் சீனாவின் ஆற்றல் ஈடிணையற்றது. வளர்முக நாடுகளுக்கு அது  பெரிய ஊக்கத்தை தரும் ஒன்றாகும். ஆனால், இது கடன்பொறி இராஜதந்திரத்துடன் இணைந்துகொண்டு வருவதே துரதிர்ஷ்டவசமானதாகும். இந்த விடயத்தில், ஒரு விலையைச் செலுத்தவேண்டியிருக்கிறது என்பதை இலங்கை கூட புரிந்துகொண்டிருக்கிறது. அதிகரிக்கும் கடன்சுமையை தவிர்ப்பதற்காக துறைமுகத்தையும் பெறுமதிமிக்க நிலத்தையும் ஒரு அரசு எவ்வாறு  கொடுக்கவேண்டியிருக்கிறது என்பதற்கு அம்பாந்தோட்டை ஒரு அசல் உதாரணமாகும். இதை நான் இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையின் ஒரு தோல்வியாக பார்க்கவில்லை. ஆனால், இது நாம் ஏற்றுக்கொள்ளவேண்டிய ஒரு கடுமையான அரசியலாகும்.

 

யதீந்திரா : உள்நாட்டுப்போரின் இறுதிக்கட்டத்தின்போது பெருமளவு ஆயுதங்களை சீனா கொழும்புக்கு வழங்கியது என்பதில் எந்த இரகசியமும் இல்லை. போர்க்கால இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா இதை ஒத்துக்கொள்கிறார். இந்திய அரசாங்கம் தாக்குதல் ஆயுதங்களை கொடுக்க மறுத்ததாலேயே இலங்கை சீனாவை நாடியது என்று அவர் குறிப்பிட்டிருக்கின்றார். இறுதிக்கட்ட போரில் இந்தியா நேரடியாக தலையிட்டிருந்தால், இலங்கைக்குள் சீனாவின் ஊடுருவல்களைத் தடுக்க அது உதவியிருக்கும் என்று ஒரு கருத்து இருக்கிறது. நேரடியாக தலையிடாமல் இருப்பதற்கு இந்தியா எடுத்த தீர்மானத்தை, ஒரு மூலோபாயத் தவறு என்று கூறமுடியுமா?

 

வாசன்: விடுதலை புலிகளுக்கு எதிரான போரை இந்தியா முழுமையாக ஆதரித்தது என்பதை கைவசம் இருக்கக்கூடிய பதிவுகள் தெளிவுபடுத்துகின்றன. புலனாய்வும் ஒத்துழைப்பும் இலங்கை ஆயுதப்படைகள் புலிகளுக்கு எதிராக  தீர்க்கமான வெற்றியைப் பெறுவதை இலகுவாக்கின. பல மேற்கு நாடுகள் அந்தப் போரில் சம்பந்தப்பட்டிருந்தன என்பதை ஆய்வாளர்கள் பொருட்படுத்தாமல் விடக்கூடாது. உலகளாவிய மட்டத்தில் பல நாடுகளினால்  புலிகள் பயங்கரவாத இயக்கமாக தடைசெய்யப்பட்டிருந்தமை, அவர்களின் செயற்பாடுகளுக்கு பெரும் குந்தகமாக அமைந்தது. இந்திய கடற்படை, கரையோரக் காவல்படை மற்று மாநில பொலிஸ் ஆகியவற்றின் துடிப்பான ஒத்துழைப்புடன் கடற்பரப்பில் புலிகள் இயங்கமுடியாமல் செய்யப்பட்டமையால் அவர்களால் தேவைப்பட்ட தளபாடங்களைப் பெறமுடியாமல் போய்விட்டது. கனரக ஆயுதங்களுக்காக இலங்கையினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இந்தியாவினால் இணங்கமுடியாமல் போனதற்கு உள்நாட்டு அரசியலும்,  திராவிட முன்னேற்ற கழகத்தலைவர் மு. கருணாநிதி காட்டிய எதிர்ப்பும் காரணம் என்பது உண்மையே.

 

யதீந்திரா: பத்து வருடங்களுக்கு முன்னர் இலங்கையின் அரசியல் வாதப்பிரதிவாதங்களில் சீனா ஒரு முக்கிய விடயதானம் அல்ல. இன்று சீனாவை தவிர்த்து இலங்கை பற்றி ஒரு கலந்துரையாடலை நடத்துவதே சாத்தியமில்லை என்கிற அளவுக்கு நிலைமை பெருமளவுக்கு மாறிவிட்டது. சீனா ஏன் இலங்கை மீது அக்கறை காட்டுகிறது? இந்தியாவுக்கு எதிரான பேரம்பேசலுக்குரிய ஒரு துருப்புச்சீட்டாக இலங்கையை சீனா பயன்படுத்த நாட்டம் கொண்டிருக்கிறதா? ஒரு இராணுவ மூலோபாயவாதி என்ற வகையில் நீங்கள் இதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

 

வாசன் : நீங்கள் குறிப்பிட்ட காலகட்டத்தில் இலங்கை பற்றிய வாதப் பிரதிவாதங்களில் சீனா ஒரு விடயமாக இருக்கவில்லை என்று கூறுவது சரியானதல்ல. இறுதிக்கட்ட ஈழப்போருக்கு பின்னரான காலகட்டத்தில் அப்போதைய மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துடன் சீனா ஆழமான ஈடுபாட்டைக் கொண்டிருந்தது. இந்து சமுத்திர பிராந்தியத்தில் காலையூன்றுவதற்கு வாய்ப்புக்களை தேடுவதில் சீனா அக்கறை கொண்டிருந்தது. போருக்கு பின்னரான காலகட்டத்தில் நாட்டைக் கட்டியெழுப்பவேண்டிய நிலையில் இருந்த அரசாங்கத்துக்கு பணத்தை வழங்கியதன் மூலம் சந்தர்ப்பத்தை சீனா பயன்படுத்திக்கொண்டது. இலங்கையில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதில் இருந்த அக்கறை காரணமாக, இன்னமும்  எந்த இலாபத்தையும்  காட்டாமல் இருக்கும்  துறைமுகம் ஒன்றில் ஏற்படுகின்ற இழப்பைக்கூட சீனா பொருட்படுத்தவில்லை.

இலங்கை கடன்பொறி ஒன்றிற்குள் வீழ்ந்துவிட்டது. அத்துடன் சொந்த பிராந்தியம் மீது ஒரு மூன்று சந்ததிகளுக்கு எந்தவிதமான கட்டுப்பாட்டையும் கொண்டிருக்கமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. இந்த நிகழ்வுப்போக்குகள் குறித்து இலங்கையர்கள் சந்தோசப்பட எதுவும் இல்லை. இலங்கையை பேரம்பேசலுக்கான காரணியாக பயன்படுத்துதல் என்பதைப் பொறுத்தவரை, அதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை என்பது எனது கருத்தாகும். சீனா அதன் நீண்டகால நலன்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக இலங்கையின் தற்போதைய அரசியல் தலைமைத்துவத்தின் உதவியுடன் தொடர்ந்து முதலீடுகளைச் செய்யும். இலங்கை கடமைப்பட்ட ஒரு நாடு என்ற வகையில் சீனாவின் இறுக்கமான அரவணைப்பில் இருக்கிறது போன்று தோன்றுகிறது. முதலீடுகளைத் தவிர மற்றும்படி மட்டுப்படுத்தப்பட்ட — அளவிடக்கூடிய பயன்களுடனேயே சீனா இலங்கையைப் பயன்படுத்தும். அந்த முதலீடுகளும் கூட பெருமளவுக்கு சீன தொழிலதிபர்களுக்கே அனுகூலமானவையாக அமையும்.

   

யதீந்திரா : இந்தோ — பசுபிக் மூலோபயம் மற்றும்  ‘குவாட்’ இராணுவ ஒத்துழைப்பு ஆகியவை, இந்து சமுத்திர பிராந்தியத்தின் மூலோபாய வரைபடத்தை மாற்றியிருக்கின்றது. அமெரிக்காவின் பசுபிக் கட்டளைபீடம் 2018 ஆம் ஆண்டு, இந்தோ– பசுபிக் கட்டளையகம் என்று, பெயர்மாற்றம் செய்யப்பட்டது. 2019 ஏப்ரிலில் இந்திய வெளியுறவு அமைச்சில் இந்தோ– பசுபிக் பிரிவொன்று அமைக்கப்பட்டது. இந்த நகர்வுகளை சீனா கடுமையாக எதிர்த்து வருகின்றது. இந்த நகர்வுகளை ‘இந்தோ பசுபிக் நேட்டோ’ ஒன்றை அமைக்கும் முயற்சியென்று சீனா கூறுகிறது. இந்தோ பசுபிக் மூலோபாயத்தின் இராணுவ முக்கியத்துவத்தை இது தெளிவாக வெளிக்காட்டுகிறது. இந்த பின்புலத்தில் குவாட்டில் இணைந்துகொள்ளக்கூடாது என்று டாக்காவை சீனா அண்மையில் எச்சரிக்கை செய்திருந்தது. அவ்வாறு இணைந்தால் சீனாவுக்கும் பங்களாதேசுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை அது கணிசமான அளவுக்கு  பாதிக்கும் என்று பெய்ஜிங் கூறியிருக்கிறது. அதே போன்று இலங்கையையும் சீனா எச்சரிக்கை செய்யமுடியும் என்று நான் நினைக்கிறேன். ‘நூறு பேரை எச்சரிக்க ஒருவரைக் கொல்லலாம்’ என்னும் சீன மூலோபாயப் பாரம்பரியத்தை நாம் அறிவோம்.  இந்தோ பசுபிக் மற்றும் குவாட்டின் பின்னணியில் இந்தியாவின் அயல்நாடுகளின் குறிப்பாக இலங்கையின் நிலை என்ன?

 

வாசன் : குவாட்டில் இணைவது குறித்து இந்தியாவின் அயல்நாடுகளை சீனா எச்சரிக்கை செயகின்றதென்றால், அந்த கூட்ணியின் ஆற்றல் குறித்து அது குழப்பமடைந்திருக்கிறது என்றுதான் அர்த்தம். இதை இராணுவ கோணத்தில் மாத்திரமல்ல, கொவிட் தொற்றுநோய்க்கான தடுப்பூசி, விநியோகச் சங்கிலியின் புத்தெழுச்சி, காலநிலை மாற்றம் போன்ற பல்வேறு விவகாரங்களின் கோணங்களிலும் பார்க்கவேண்டும். அதனால், பங்காளி நாடுகள் சீனாவின் வெற்றுக்கூச்சலை கண்டு கவலைப்படவில்லை. அவை இந்தோ பசுபிக்கில் இந்த கூட்டணிக்கு மேலும் பெறுமதியை அதிகரிக்கும் திசையில் முன்னோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றன. நேட்டோ போன்ற கூட்டணியாக குவாட் வளர்வதென்பது முன்னுணரக்கூடிய எதிர்காலத்தில் சாத்தியமும் இல்லை. அதேவேளை, மேம்பட்ட மட்டத்திலான ஒத்துழைப்பு, நாடுகளுக்கு இடையேயான செயற்பாடு மற்றும் பன்முக மட்டங்களிலான ஈடுபாடு என்பவற்றின் மூலம், குவாட்டின் நான்கு உறுப்பு நாடுகளான அமெரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பான் கூட்டிற்கு, சீனா மீது நெருக்குதலைப் பிரயோகிக்க போதுமான வலுவைக்கொடுக்கும்.

இலங்கையின் கோடிப்புறத்தில் வல்லாதிக்க நாடுகளிடையேயான போட்டாபோட்டி இடம்பெறுவதையோ அல்லது வெளிநாடுகளின் இராணுவ பிரசன்னத்தையோ ஒருபோதும் விரும்பப்போவதில்லை என்று வெளியுறவு செயலாளர் அட்மிறல் கொலம்பகே பல அரங்குகளில் கூறியிருப்பது வரவேற்கத்தக்கதாகும். ஆனால், சீனா அதன் போர்க்கப்பல்களையோ அல்லது நீர்மூழ்கிகளையோ அம்பாந்தோட்டைக்கு கொண்டுவரத் தீர்மானித்தால் இலங்கையினால் பெரிதாக ஒன்றையும் செய்ய  முடியாது. ஏனென்றால், இந்த துறைமுகத்தின் முற்றுமுழுதான கட்டுப்பாட்டை இலங்கை சீனாவுக்கு விட்டுக்கொடுத்துவிட்டது. இராணுவ ரீதியில் நோக்குகையில் இந்த சவாலை எதிர்கொள்ளக்கூடிய நிலையில் இந்தியா இருக்கிறது. இந்து சமுத்திர பிராந்தியத்தில் இந்தியா அனுபவிக்கின்ற பூகோள-அமைவிட அனுகூலங்களே இதற்கு காரணமாகும். அம்பாந்தோட்டையை சீனா எந்தவொரு  இராணுவப்பயன்பாட்டுக்கும் உட்படுத்தினால், இந்திய ஆயுதக்களஞ்சியத்தில் இருக்கக்கூடிய சகல ஏவுகணைகளும்  தாக்கக்கூடிய தொலைவிலேயே அந்த துறைமுகம் இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது. எந்தவொரு இராணுவ சாகசத்திலும் ஈடுபடுவதற்கு முன்னதாக சீனா கருத்தில் எடுக்கவேண்டிய அம்சம் இதுவாகும்.

 

யதீந்திரா : உலகளாவிய மூலோபாய சமூகத்தின் பெருமளவு கவனத்தை அம்பாந்தோட்டை துறைமுகம் பெற்றிருக்கிறது. சீனாவின் கடன்பொறி இராஜதந்திரத்துடன் அந்த துறைமுகம் சம்பந்தப்பட்டது என்பதும் சீனாவின் மண்டலமும் பாதையும் செயற்திட்டத்துக்கு முக்கியமானது என்பதும் நன்கு தெரிந்ததே. சீனாவின் ‘ புளுவாட்டர்’ கடற்படைக்கான முன்னரங்க தளமாக இந்த துறைமுகம் விரைவில் வந்துவிடக்கூடும் என்றும் சிலர் கூறுகிறார்கள். அமெரிக்காவின் முன்னாள் உப ஜனாதிபதி இது பற்றி முன்னர் ஒரு தடவை குறிப்பிட்டிருக்கிறார். உங்களுடைய பார்வை என்ன? 

 

வாசன்: இந்த நேர்காணலின் நான்காவது கேள்விக்கான பதிலை திரும்பிப்பாருங்கள். இந்து சமுத்திர பிராந்தியத்தில் அம்பாந்தோட்டையை ஒரு இராணுவத்தளமாக பயன்படுத்துவதற்கு முன்னர் சீனா ஒன்றுக்கு இரு தடவைகள் சிந்தித்துப் பார்க்கவேண்டியிருக்கும். தற்போதைய நிலைவரத்தைப் பொறுத்தவரை, அத்தகைய ஒரு நகர்வை இலங்கை வரவேற்கும் என்பதற்கான எந்த சமிக்ஞையையும் காணவில்லை. போர்க்கப்பல்கள் வந்துபோவதைப் பற்றி நான் பேசவில்லை. ஆபிரிக்காவின் டிஜிபோர்டியில் செய்யப்பட்டிருக்கின்ற அளவுக்கு அம்பாந்தோட்டையை இராணுவமயமாக்குவது பற்றியே நான் பேசுகிறேன். அது சாத்தியமில்லை. இந்த துறைமுகத்தை ஒரு முன்னரங்க இராணுவத்தளமாக சீனாவினால் மாற்றமுடியுமாக இருந்தால் தனது கோடிப்புறத்தில் வல்லாதிக்க நாடுகளுக்கு இடையிலான போட்டாபோட்டியை ஊக்குவிப்பதற்காக இலங்கை தன்னைத்தானே குறைகூறவேண்டியிருக்கும். அம்பாந்தோட்டையை ஒரு இராணுவத்தளமாக பயன்படுத்துவதற்கு சீனா தீர்மானிக்கும் பட்சத்தில் அதனால் தோன்றக்கூடிய சவாலை எதிர்கொள்ள இந்தியா தயாராகவே இருக்கிறது. பிரமாண்டமான முதலீடுகளைப் பெறும் வாய்ப்பைக்கொண்ட கொழும்பின் புதிய சர்வதேச துறைமுக  நகரமும் நெருக்கடியான காலகட்டங்களில் தாக்குதல்களினால் இலகுவில் பாதிக்கப்படக்கூடியதாக இருக்கிறது என்பதையும் கவனிக்கவேண்டும். அதனால் அண்மைய எதிர்காலத்தில் அம்பாந்தோட்டை எந்தவொரு இராணவமயமாக்கலுக்கும் உட்படும் சாத்தியமில்லை.

 

யதீந்திரா : ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் வெளியேற்றமும் தலிபான்களின் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றியிருப்பதும் தெற்காசியாவில் இதுவரையில் நிலவிய அரசியல் ஒழுங்கில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆப்கானிஸ்தான் மீண்டும் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறக்கூடும் என்று சிலர் கூறுகிறார்கள். ஏனென்றால், முன்னர் அந்த நாடு ஒசாமா பின் லேடனின் அல் கயெடாவின் புகழிடமாக இருந்தது. சீனா அதன் ‘மண்டலமும் பாதையும்’ செயற்திட்டத்திற்குள் ஆப்கானிஸ்தானை கூட்டிணைக்கும் என்று வேறு சிலர் கூறுகிறார்கள். இவையெல்லாம் சேர்ந்து இந்து சமுத்திரப்பிராந்தியத்தின் பாதுகாப்பில் பதற்றத்தை தோற்றுவிக்கிறது. ஏனென்றால், தலிபான்கள் முன்னர் அதிகாரத்தில் இருந்தபோது பாகிஸ்தானுக்கு ஆதரவான தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளித்தனர். இந்த பின்புலத்தில் குறிப்பாக, இந்தியாவின் பாதுகாப்பின் மீது ஏற்படக்கூடிய தாக்கங்கள் எவை ? தெற்காசியாவின் பாதுகாப்பில் ஏற்படக்கூடிய விளைவுகள் எவை?

 

வாசன் : அண்மைக் கால  நிகழ்வுப்போக்குகள்  அனைத்திலும், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்காவின் வெளியேற்றம் மற்றும் தலிபான்களின் மீண்டும் அதிகாரத்தை கையகப்படுத்தியிருப்பது தான் உபகண்டத்தின் பாதுகாப்பிலும் உறுதிப்பாட்டிலும் தாக்கத்தைக் கொண்டிருப்பவையாகும். இந்த நிகழ்வுகளினால் பாகிஸ்தான் மகிழ்ச்சியடைகிறது. தலிபான்களுடன் சேர்ந்து இந்தியா மீது தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் விரும்பக்கூடும்.

கடந்த காலத்தில் தென்னிந்தியாவில் ஊடுருவல்களைச் செய்வதற்கு பாகிஸ்தான் தூதரகத்தினால் இலங்கை கூட பயன்படுத்தப்பட்டது. ஆனால் அந்த செயற்பாடுகள் முளையிலேயே கிள்ளியெறியப்பட்டுவிட்டன. கொழும்பில் அப்போதிருந்த பாகிஸ்தான் தூதுவர் மாற்றப்பட்டார். பயங்கரவாதம் தலைகாட்டாதிருப்பதை உறுதிசெய்வதற்கு இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே நெருக்கமான ஒத்துழைப்பு அவசியம்.

இஸ்லாமிய பயங்கரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் தாக்கங்களில் இருந்து இலங்கை இன்னமும் விடுபடவில்லை. எல்லை கடந்த பயங்கரவாதத்தை கையாளுவதில் பெற்ற கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் இந்தியாவின் கோணத்தில் நோக்கும்போது, ஐ.எஸ்.ஐ. தலிபான்கள், லக்சர் ஈ தைபா ஆகியவைகளால் தீவிரப்படுத்தக்கூடிய தாக்குதல்களுக்கு முகங்கொடுக்கும் நிலையில், இந்தியாவின் பலனாய்வு அமைப்புகளும், பாதுகாப்பு படைகளும் நன்கு தயாரான நிலையிலேயே இருக்கின்றன. 2008 ஆம்ஆண்டில் மும்பையில் மேற்கொள்ளப்பட்ட 26/11 தாக்குதல் பல பாடங்களை புகட்டியிருக்கிறது. இதனால் கடல்சார் பாதுகாப்பு கட்டமைப்பு முழுவதுமாக மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது.

தற்கொலைத் தாக்குதல்களை நடத்துவதற்கு கடற்பரப்பை பயன்படுத்துவதற்கு எதிராக கூடுதல் விழிப்பைக்கொண்டிருக்கவேண்டும்.  போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் கடும் விழிப்பு அவசியம்.

தலிபான்களின் பொருளாதாரத்தின் கணிசமான பகுதி போதைப்பொருள் விற்பனையில் தங்கியிருப்பதால், அரசுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக கடற்பரப்புகள் பயன்படுத்தப்படாதிருப்பதை உறுதிசெய்ய இந்தியாவும் இலங்கையும் கூட்டாக செயற்படவேண்டும். ஆப்கானிஸ்தானில் சீனா ஒரு ‘ புதிய ஆட்டக்காரர் ‘என்பதால் அந்த நாட்டில் உறுதிப்பாட்டை பேணுவதில் எத்தகைய பங்கை ஆற்றும் என்பதை பொறுத்திருந்தே அவதானிக்கவேண்டியிருக்கிறது. ஆப்கானிஸ்தானின் இயற்கை வளங்களை எடுப்பதற்காக சீனா பெருமளவு முதலீடுகளை அங்கு செய்யும் என்பதிலும், மத்திய ஆசிய குடியரசு நாடுகளுடனும் அதற்கு அப்பாலும் இணைப்புக்களை ஏற்படுத்திக்கொள்ள சீனா ஆப்கானிஸ்தானைப் பயன்படுத்தும் என்பதிலும் சந்தேகமில்லை.

உய்குர் இனத்தவர்கள் கிளர்ச்சி செய்கின்ற சின்ஜியாங் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்களுக்கு தலிபான்கள் எந்த ஆதரவையும் கொடுக்காதிருப்பதை  உறுதிசெய்வதே சீனாவுக்கு இருக்கக்கூடிய ஒரேயொரு சவாலாகும். உய்குர் இனத்தவர்களை கொடுமைப்படுத்தும் சீனா, இஸ்லாமிய நடைமுறைகளை அவர்கள் பின்பற்றுவதற்கான சுதந்திரத்தையும் மறுக்கிறது. எந்த வழியில் என்றாலும் தங்களது பெட்டகங்களுக்கு பணம் தொடர்ந்து குவியும்வரை தலிபான்கள் அமைதியாக இருப்பதில் சந்தோசமடைவர். அந்த கோணத்தில் நோக்குகையில் முஸ்லிம் நாடுகள் கூட சின்ஜியாங்கில் முஸ்லிம் சிறுபான்மையினர் மீதான கொடுமைகள் பற்றி அக்கறை காட்டி குரல் கொடுக்கவில்லை. பெருமளவு முதலீடுகளின் மூலமாக அந்த நாடுகளின் மௌனத்தை தொடர்ந்து உறுதிப்படுத்த சீனாவினால் இயலும்.

 

 

குறிப்பு: இந்த நேர்காணல் ஆங்கிலத்திலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டது