Skip to main content

சீனா, இந்தியா, அமெரிக்கா, – அதிகாரங்களின் மோதலும் இலங்கை அரசியலும்

Image credited from indiatoday.intoday.in

By: யதீந்திரா

இலங்கையின் அரசியல் என்பது இன்றைய நிலையில் இலங்கையின் அரசியல் அல்ல மாறாக, அது ஒரு சர்வதேச அரசியல் விவகாரமாக விரிவுபெற்றுவிட்டது. இனி எவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இலங்கைத் தீவின் அரசியiலை புவிசார் அரசியல் முரண்பாடுகள்தான் தீர்மானிக்கப் போகின்றன. இலங்கையை மையப்படுத்தி இடம்பெறவுள்ள புவிசார் அரசியல் முரண்பாட்டின் மையமாக சீனாவே இருக்கப் போகிறது. இன்றைய உலக ஒழுங்கில் சந்தேகத்திற்கு இடமில்லாமல் சீனாவும் ஒரு நிலையமாக (ஊநவெநச) மாறிவிட்டது. இந்த நிலையில்தான் சீனா இலங்கையில் வலுவாக காலூன்றிவருகிறது. 2015இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் சீனாவை ஒரு எல்லைக்குள் முடக்கும் உபாயம் கொண்டதுதான் ஆனால் அந்த முயற்சியும் பெரியளவில் வெற்றிபெறவில்லை. மைத்திரி- ரணில் கூட்டரசாங்கம் ஆரம்பத்தில் சீனாவை ஒரு எல்லைக்குள் முடக்குவதான தோற்றத்தை காண்பித்த போதிலும் அதனை தொடர்ந்தும் வெற்றிகரமாக முன்னெடுக்க முடியவில்லை. உண்மையில் இந்த நிலைமையை புவிசார் அரசியல் கண்கொண்டு நோக்கினால் ஆட்சி மாற்றத்தை உந்தித்தள்ளிய இந்திய – அமெரிக்க கூட்டணியினருக்கு இது ஒரு பின்னடைவே. இவ்வாறானதொரு சூழலில்தான் டொனால் ரம் தலைமையிலான குடியரசு கட்சி அடுத்த வரவுள்ள நான்கு வருடங்களுக்கு அமெரிக்காவை நிர்வகிக்கவுள்ளது. இந்த நிலையில் இலங்கையை மையப்படுத்தி சீனா – இந்தியா – அமெரிக்கா ஆகிய அதிகாரங்கள் எவ்வாறு தங்களது நலன்சார்ந்து இயங்கப் போகின்றனர் என்பதைக் கொண்டே இலங்கையின் எதிர்காலம் தீர்மானிக்கப்படப் போகிறது.

சீனாவைப் பொறுத்தவரையில் 2015இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் தங்களை இலக்கு வைத்தே மேற்கொள்ளப்பட்டது என்பதில் அவர்கள் தெளிவாக இருக்கலாம். ஏனெனில் ஆட்சி மாற்றத்தின் உடனடி விளைவு சீனாவையே பாதித்தது. உடனடியாகவே சீனாவினால் முன்னெடுக்கப்பட்ட கொழும்பு துறைமுகத் திட்டம் தற்காலிகமாக முடக்கப்பட்டது. இதன் காரணமாக சீன - இலங்கை உறவில் ஒரு சிறு விரிசலும் ஏற்பட்டது. ஆனாலும் பின்னர் கொழும்பு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. ஒரு வகையில் இலங்கை வேறு வழியின்றி சீனாவிடம் சரணடைந்தது என்றே சொல்லலாம். ஒப்பீட்டடிப்படையில் தற்போதைய அரசாங்கம் சீனாவின் விருப்புக்குரிய அரசாங்கமாக இருக்கப் போவதில்லை. ஏனெனில் மகிந்த ராஜபக்சவிற்கும் சீனாவிற்கும் இடையில் நிலவிய நெருக்கம் மற்றும் மகிந்தவின் தன்னிச்சையாக முடிவெடுக்கும் பலம் போன்றவை சீனாவிற்கு மிகவும் சாதகமான அம்சமாக இருந்தது. மகிந்தவுடன் இருந்த நெருக்கத்தை பயன்படுத்தியே சீனா இலங்கையில் வலுவாக காலூன்றுவதற்கான அடித்தளத்தை இட்டது. பொருளாதார ரீதியில் இலங்கையை தனது பொறிக்குள் விழவைப்பதில் வெற்றிபெற்றது. ஆட்சி மாறினாலும் கொழும்பால் சீனாவின் பொருளாதாரப் பொறியிலிருந்து எழ முடியவில்லை. இதன் காரணமாகவே ஆட்சி மாற்றத்தின் மூலமாக சீனாவை ஓரங்கட்டலாம் என்னும் அனுகுமுறையானது பெரியளவில் வெற்றிபெறவில்லை. ஆனால் ஒப்பீட்டடிப்படையில் ஆட்சி மாற்றம் இலங்கையில் ஒரு சமநிலையை ஏற்படுத்துவதில் வெற்றிபெற்றிருப்பது உண்மைதான் இந்த சமநிலையை ஏற்படுத்துதல் என்னும் உபாயம் கூட எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்பதும் சந்தேகமே! ஏனெனில் இலங்கை பொருளாதார ரீதியில் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கின்ற நிலையில் மீண்டும் சீனாவை நோக்கி சாய வேண்டிய சூழலே உருவாகிவருகிறது. இந்த நிலையில்தான் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து தப்பும் நோக்கில், அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீதமான பங்குகளை சீனாவிற்கு விற்பதற்கு இணக்கம் காணப்பட்டது. மேலும், அந்தப் பகுதியில் 15 ஆயிரம் ஏக்கரில் கைத்தொழில் வலயம் ஒன்றை உருவாக்குவதற்கான காணிகளையும் வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டிருந்தது. ஆனால் உள்ளுர் மக்களின் எதிர்ப்பால் அதனை முன்னெடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் மகிந்த சீனாவிற்கு 15000 ஏக்கர் காணிகளை வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றார். இவ்வாறானதொரு சூழலில்தான் குறித்த பிரச்சினைகளை அரசாங்கம் தீர்க்கும் வரையில் முதலீடுகளை இடைநிறுத்துவதாக சீனா முடிவுசெய்திருக்கிறது. இது மேலும் இலங்கையின் பொருளாதார நிலைமைகளை பாதிக்கக் கூடியது. சீனாவை மையப்படுத்திய நிகழ்வுகள் இவ்வாறென்றால், சீனாவை நோக்கி இலங்கை அதிகம் சாய்ந்துவிடாத நிலைமையை எவ்வாறு பேணிப் பாதுகாப்பது என்னும் நிலையிலேயே இந்தியாவின் கரிசனைகள் அமைந்திருக்கின்றன.

இந்தியாவை பொறுத்தவரையில் சீனாவின் அதிக உள்நுழைவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடிய விடயமல்ல. எனவே இந்தியாவும் அதனது செல்வாக்கை உறுதிப்படுத்துவதற்கான காய்களையும் அது நகர்த்தவே செய்யும். இந்தியாவுடன் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்பட்ட எட்கா உடன்பாடும் இன்னும் பேச்சுவார்த்தையிலேயே இருக்கின்றது. அதற்கும் வைத்தியர்கள் மத்தியிலும் சில சிங்கள தேசியவாத தரப்புக்களிலிருந்தும் கடும் எதிர்ப்புக்கள் கிளம்பியிருக்கின்றன. அந்த எதிர்ப்புக்களை சமாளித்து உடன்பாட்டை பூர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பும் அரசாங்கத்திற்குண்டு. அதே போன்று இந்தியாவின் ஏனைய சில முயற்சிகளும் தொடர்ந்தும் இழுபறி நிலையிலேயே இருக்கிறது. சீனாவின் திட்டங்கள் முன்னோக்கி பயணிக்கும் போது இந்தியாவின் திட்டங்கள் தொடர்ந்தும் கிடப்பிலேயே கிடக்குமானால் இந்தியா ஒரு பிராந்திய சக்தி என்னும் தகுதிநிலையை இழுந்துவருகின்றது என்றே பொருள். ஆதனை இந்தியாவால் ஒரு போதும் அனுமதிக்க முடியாது. எனவே அதனை சமநிலைப்படுத்துவதற்காக இந்தியாவும் பல்வேறு வழிகளிலும் நகர வேண்டியது கட்டாயம்.

அமெரிக்காவை பொறுத்தவரையில் சீனாவை ஒரு எல்லைக்குள் முடக்குதல் என்னும் அதன் உலகளாவிய நிகழ்சி நிரலின் ஒரு பகுதியாகவே இலங்கை விடயங்களையும் நோக்கும். ஒபாமா தலைமையிலான ஜனநாயக கட்சியின் வெளிவிவகார அனுகுமுறையில் இலங்கை முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தது. இலங்கையின் மீதான அமெரிக்க அர்வம் என்பது ஒபாமா தலைமையிலான நிர்வாகத்தின் ஆசிய மையக் கொள்கையின் ஒரு அங்கமாகும். ஆசிய மையக் கொள்கையின் இலக்கு இந்து சமுத்திர பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை ஒரு எல்லைக்குள் முடக்கி, மீளவும் அமெரிக்காவின் செல்வாக்கை நிலைநாட்டுவதுதான். இந்த அகண்ட நிகழ்சிநிரலின் ஒரு பகுதியாகவே அமெரிக்கா இலங்கையின் ஆட்சி மாற்றத்தின் மீது பெரும் ஈடுபாடு காண்பித்தது. இந்த நிலையில்தான் குடியரசு கட்சியின் வெளிவிவகாரக் குழு அமெரிக்காவின் புதிய அனுகுமுறைகளை திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. குடியரசு கட்சியின் நிர்வாகம் முன்னை நிர்வாகம் இலங்கை விவகாரத்தை அனுகியது போன்று, அனுகாதென்றும் சிலர் கூறுகின்றனர். குறிப்பாக ஒபாமா நிர்வாகம் இலங்கையின் மனித உரிமைகள் விவகாரத்தை அனுகியது போன்று ரம் நிர்வாகம் அனுகாது என்றும் சிலர் கூறுகின்றனர். கொழும்பின் புத்திஜீவிகள் மத்தியிலும் அவ்வாறானதொரு பார்வை இருப்பதாகவே தெரிகிறது. ஆனாலும் சீனாவை ஒரு எல்லைக்குள் முடக்கும் அமெரிக்க அனுகுமுறையில் ஒரு போதும் மாற்றம் ஏற்படப் போவதில்லை. ஆட்சி மாற்றத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட சமநிலையை தொடர்ந்தும் பேணிப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கிலேயே அமெரிக்காவின் அனுகுமுறைகள் அமையும். ஆதில் சந்தேகமில்லை. இந்தப் பின்னணியில் நோக்கினால் இலங்கையின் எதிர்கால அரசியல் நிலைமைகள் என்பது, சீனா - இந்தியா – அமெரிக்கா ஆகிய மூன்று அதிகாரங்களது காய்நகர்த்தல்களும் அதில் இடம்பெறப் போகும் மாற்றங்களாகவே அமையும். சீனா, அதனது வெளிவிவகாரக் கொள்கையில், உள்ளக விவகாரங்களில் தலையிடாக் கொள்கை என்னும் ஒழுங்கை நீண்டகாலமாக கடைப்பிடித்துவருகிறது. ஆனால் தற்போது இலங்கை விடயத்தில் கற்றுக்கொண்ட பாடத்தினடிப்படையில் அதன் கொள்கையையும் மறுபர்Pசிலனை செய்யவும் முயற்சிக்கலாம். அதே வேளை தற்போது இருக்கின்ற அரசாங்கத்தின் பலவீனங்களை அகற்றி, 2020இல் ஒரு வலுவான அரசாங்கத்தை உருவாக்க வேண்டிய அவசியப்பாடு தொடர்பில் இந்தியாவும், அமெரிக்காவும் சிந்திக்கலாம். அந்த வகையில் இலங்கையின் உள்ளக அரசியல் முடிவுகள் அனைத்தும் 2020 இல் இடம்பெறவுள்ள தேர்தலை இலக்காகக் கொண்டே இடம்பெறும். 2020 இல் நிச்சயமாக இப்படியொரு கூட்டாட்சி தொடர்பில் ஜக்கிய தேசியக் கட்சியோ அல்லது சிறிலங்கா சுதந்திரக் கட்சியோ சிந்திக்க வாய்பில்லை. இதில் அமெரிக்காவின் தெரிவு எப்போதும் ஜக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஒரு வலுவான அரசாங்கமாகவே இருக்கும். அமெரிக்காவின் குடியரசு கட்சிக்கும் ஜக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் கருத்து நிலையிலும், உறவுநிலையிலும் அன்னோன்யமான தொடர்புண்டு. இந்தியாவை பொறுத்தவரையில் கட்சி என்பதை விடவும், ஒப்பீட்டிப்படையில் தங்களால் இலகுவாக கையாளக் கூடிய தலைமை ஒன்றையே அவர்கள் இலக்கு வைப்பர். ஆனால் இந்தியாவினால் கையாளக் கூடிய ஒருவர் நிச்சயமாக அமெரிக்காவினாலும் கையாளக் கூடியவராகவே இருப்பார்.

எனவே இன்றைய நிலைமைகளை வெறும் இலங்கை விவகாரமாக சுருக்கினால் இதன் உண்மையான தோற்றம் தொரியாமல் போய்விடும். இன்றைய நிலையில் இலங்கையானது மேற்படி மூன்று நாடுகளினதும் நலன்களுடனும் அந்த நலன்களை பாதிக்காமல் இருப்பதற்குமான ஒரு அரசியல் சதுரங்கமாகும். இதில் தமிழர் தரப்பு வெறும் பார்வையாளர்களா அல்லது பங்காளர்களா என்பது அவர்களது தூர நோக்கு தழுவிய தீர்மானங்களிலும் செயற்பாடுகளிலுமே தங்கியிருக்கிறது. பலம்பொருந்திய சக்திகள் ஒரு வழியில் மட்டும் சிந்திக்காது. ஒரு மகிந்த ராஜபக்ச அல்லது கோத்தபாய ராஜபக்ச போன்ற ஒருவர்தான் ஆட்சியில் அமரப் போகின்றார் என்பதை அவர் கணித்துவிட்டால் அவர்களை எவ்வாறு கையாளுவது என்னும் வழிகளையும் அவர்கள் அறிவர். தமிழர் தரப்பிடமும் அவ்வாறானதொரு திட்டம் இருப்பது அவசியம் ஆனால் ஆகக் குறைந்தது, ஒரு இடத்தில் அமர்ந்து சிந்திக்கக் கூடியளவிற்குக் கூட தமிழர் தரப்பு இன்னும் தயாராகவில்லை. வெறும் தனிநபர்களை முன்னிறுத்தி நம்பிக்கைகளை வளர்ப்பதால் இந்த சவால்களை நிச்சயமாக எதிர்கொள்ள முடியாது. இதற்கு கிரமமான உரையாடலும் முழு நேரமாக பணியாற்றக் கூடிய ஆளணியும் தேவை. தமிழில் ஒரு பழமொழியுண்டு. பேச்சு பல்லக்கு தம்பி பொடிநடை. தமிழரின் அனுமுறையும் இந்தப் பழமொழி போன்றதுதான். பேச்சுக்கள் பலமாக இருக்கின்றன ஆனால் செயலோ ஆமை வேகத்தில் இருக்கிறது.