Skip to main content

எம்மை பற்றி

மூலோபாய கற்கை நிலையம் - திருகோணமலை (Center for Strategic Studies – Trincomalee) ஒரு இலாப நோக்கற்ற சிந்தனை குழாம் (Think Tank) ஆகும். இலங்கை, இந்து சமூத்திரத்தினிடையே கேந்திர முக்கியத்தும் வாய்ந்த ஒரு நாடு, என்னும் வகையில் இலங்கையைக் குறுக்கறுக்கும் பிராந்திய மற்றும் உலகளாவிய மூலோபாய ஆர்வங்கள் மற்றும் அவற்றை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் நகர்வுகள் தொடர்பில் ஆராய்வதும் அறிக்கையிடுவதுமே இக் குழுவின் முதன்மை  நோக்கமாகும். அந்த வகையில் தெற்காசிய நிலைப்பட்டு, அரசியல், இராணுவ, பொருளாதார விடயங்களில் நிபுணத்துவமும் அனுபவமும் வாய்ந்த ஆய்வாளர்கள், புலமையாளர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் உரையாடுவதற்கும் தர்க்கிப்பதற்குமான களமாக இத்தளம் அமைந்திருக்கும்.

இக் குழாம் திருகோணமலையின் பெயரால் அடையாளப்படுத்துவதானது ஒரு குறியீட்டுப் பெறுமதியுடையதாகும். தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் இலங்கையின் வடகிழக்கு கரையில் அமைந்திருக்கும் திருகோணமலையானது, உலகின் ஆழமான கடல்பகுதியை கொண்ட அரிதான இயற்கை துறைமுகங்களில் ஒன்றாகும். இராணுவ நிபுணர்களால் மூலோபாயம் மிக்க  அணிகலன் (Strategic jewel)  என்று வர்ணிக்கப்படும் திருகோணமலையில் உலக அதிகாரங்கள் பலவும் கடந்த காலங்களில் ஆர்வம் காட்டியிருக்கின்றன. இதற்கு திருகோணமலையின் அமைவிடமே முக்கிய  காரணமாகும். மத்தியகிழக்கிலிருந்து கிழக்காசிய நாடுகளுக்கு எண்ணையை, கொண்டு செல்லப் பயன்படும், முக்கிய கடல் பாதையில் திருகோணமலை அமைந்திருக்கிறது. இதன் காரணமாகவே அமெரிக்காவின் பென்ரகன் திருகோணமலை மீது பல தசாப்தங்களாக அக்கறை காண்பித்து வந்தது (சுயஅவயரெ ஆயவைசய 2004)

அமெரிக்கா திருகோணமலை மீது காண்பித்துவந்த ஈடுபாட்டையே இந்தியா தனது மூலோபாய நலன்கள் மீதான அச்சுறுத்தலாக நோக்கியது. இதன் விளைவாகவே இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் திருகோணமலை அல்லது இலங்கையின் வேறெந்தவொரு துறைமுகமும் இந்திய நலன்களுக்கு குந்தகத்தை ஏற்படுத்தும் வகையில், ஏனைய நாடுகள் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது என்று அழுத்திக் கூறப்பட்டிருந்தது. மேலும் திருகோணமலையிலுள்ள எண்ணைக் குதங்கள் ஒரு கூட்டு தொழில் முயற்சி என்னும் அடிப்படையில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலானதாகவும் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் திருகோணமலையின் மூலோபாய முக்கியத்துவம் கருதி இடம்பெற்ற வரலாற்று நிகழ்வுகளாகும். இவற்றை வாசிப்புச் செய்ததன் விளைவாகவே இவ் சிந்தனைக் குழாமிற்கு திருகோணமலை என இடப்பெயரிடப்பட்டிருக்கிறது.  இப்போதும் உலக அதிகாரங்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டும் துறைமுகங்களில் ஒன்றாகவே திருகோணமலை இருந்துவருகிறது. அந்த வகையில் இலங்கையை மையப்படுத்தி, இலங்கை, இந்தியா, தெற்காசியா மற்றும் ஆசியா என்னும் விரிந்த தளத்திலான அபிப்பிராயங்கள் மற்றும் பகுப்பாய்வுகளுக்கு நாம் முன்னுரிமை அளிக்கின்றோம். இந்த நோக்கில் பங்களிக்கக் கூடியவர்களை இத்தளம் வரவேற்கிறது.  


மூலோபாய கற்கை நிலையம் - திருகோணமலை, இலங்கை கம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இந்த நிலையம் அரசியல் ஆய்வாளர் ஆ.யதீந்திரா மற்றும் யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறை தலைவர் கே.ரி.கணேசலிங்கம் ஆகியோரின் கூட்டிணைவில் உருவாக்கப்பட்டது. யதீந்திரா, இதன் ஸ்தாபகராகவும் நிறைவேற்று இயக்குனராகவும் இருக்கின்றார். ஆ.யதீந்திரா, அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் (2019) பிராந்திய நிகழ்வொன்றிற்காக தெரிவு செய்யப்பட்டவர். ‘இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் கொள்கை’ என்னும் தலைப்பில் இந்நிகழ்வு இடம்பெற்றிருந்தது. இலங்கையில் செயற்படும் சிந்தனை குழாம் (ThinkTanks ) ஒன்றின் தலைவர் என்னும் அடிப்படையிலேயே யதீந்திரா இந்த நிகழ்விற்காக தெரிவு செய்யப்பட்டிருந்தார். 

 

நோக்கங்கள் :

மூலோபாய கற்கை நிலையம் - திருகோணமலை, பின்வரும் நோக்கங்களை அடைவதை இலக்காகக் கொண்டிருக்கின்றது :

  • தேசிய, பிராந்திய மற்றும் உலகளாவிய புவிசார் அரசியல் விடயங்கள் தொடர்பில் சுதந்திரமான கலந்துரையாhடல்களுக்கும் விவாதங்களுக்குமான களமாக செயற்படல். (கவனிக்க : இலங்கை விடயங்களில் செல்வாக்குச் செலுத்தும், பிராந்திய மற்றும் உலகளாவிய புவிசார் அரசியல் விடயங்கள் தொடர்பான தெளிவை பெறும் நோக்கில்) 

 

  • தாராளவாத கொள்கைகளின் அடிப்படையிலான பொது கருத்தை உருவாக்குவதற்கான மையமாக தொழிற்படல்

 

  • பரஸ்பர புரிந்துனர்வு மற்றும் நலன்களின் அடிப்படையில் சிந்தனை குழாம்களுக்கிடையிலான பாலமாக தொழிற்படல்

 

  • நவீன சவால்களான மனித உரிமைகள், உலக மயமாக்கல் மற்றும் சுற்றுச் சூழல் ஆகியவற்றை எதிர்கொள்வதற்கான ஆலோசனைகள் மற்றும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான திட்டமிடல்களை மேற்கொள்வதற்கான நிலையமாக தொழிற்படல் 

 

செயற்பாடுகள் : 

  • ஆய்வுகள் மற்றும் கருத்துருவாங்களை வெளியிடுதல் (இணையத்தள வழியாக) 

 

  • சர்வதேச உறவுகள் தொடர்பில் இளம் பத்திரிகையாளர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கு கல்வியூட்டல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் ( பயிற்சி நெறிகள், கருத்தரங்குகள்)

 

  • வெளியீடுகள் ( சீன - இந்திய விவகாரங்கள், புவிசார் அரசியல் விடயங்கள்) 

 

  • சர்வதேச உறவுகள் மற்றும் சர்வதேச அரசியல் தொடர்பில் கற்பதில் ஆர்வம் கொண்டவர்களுக்கான வழிகாட்டல்களை வழங்குதல் 

 

  • வடகிழக்கில் புலம்பெயர் சமூகத்தின் முதலீட்டு திட்டங்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான இலகுபடுத்துனராக தொழிற்படல் 

 

வலையொளி (Podcast)

இந்தோ – பசுபிக் விவகாரம் தொடர்பிலான தொடர் உரையாடல்கள் (பிராந்திய மற்றும் உலகளாவிய அளவில் அறியப்பட்ட நிபுனர்களுடன் உரையாடுதல்)  

 

தலையீடுகள் -

பார்வைகள் :

இதில் இடம்பெறும் ஆக்கங்கள் அனைத்தும் அதனை எழுதுபவரின் பார்வையாகவே அமையும் ஆனால் அதனை மறுதலித்து விவாதிக்கும் பிறிதொருவரது கருத்துக்களும் இத்தளத்தில் இடம்பெறும். இலங்கையைப் பொறுத்தவரையில் உள்ளூர் மொழிகளில் மூலோபாய அரசியல் தொடர்பில் சிந்திப்பவர்களின் ஆக்கங்களை வெளியிடுவதற்கு எந்தவொரு தளமும் இல்லை. சர்வதேச உறவுகள் தொடர்பில் அவர்களிடம் ஆழமான பார்வைகள் இருப்பினும் கூட, அவற்றை வெளியிடுவதற்;கு ஆங்கிலம் ஒரு தடையாக இருக்கின்றது. இதனை கருத்தில் கொண்டு அவ்வாறானவர்களின் ஆக்கங்களை மொழிபெயர்த்து வெளியிடுவதில் இக்குழு கூடுதல் கவனம் கொள்கின்றது.

நேர்காணல்கள் :

சர்வதேச உறவுகள், சர்வதேச பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் ஆகிய விடயங்கள் தொடர்பில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களின் நேர்காணல்கள் இதில் இடம்பெறும்.

வெளியீடுகள் :

சர்வதேச உறவுகள் மற்றும் புவிசார் அரசியல் தொடர்பான உரையாடல்களை ஊக்குவிக்கும் வகையிலும் அவை தொடர்பில் புதிய தலைமுறையினர் மத்தியில் அறிவூட்டும் வகையிலும் எமது வெளியீடுகள் அமைந்திருக்கும். குறிப்பாக ஆங்கில மொழியில் பரிட்சயம் இல்லாதவர்கள் மத்தியிலும் சர்வதேச விவகாரங்கள் தொடர்பான அறிவைக் கொண்டு சேர்ப்பிக்;கும் வகையில் மொழிபெயர்ப்பு வெளியீடுகளிலும் எமது நிலையம் கூடுதல் கவனம் எடுக்கும்.

 

பொறுப்புதுறத்தல்

கட்டுரைகள் மற்றும் ஆக்கங்களில் இடம்பெறும் கருத்துக்கள் குறித்த எழுத்தாளர்களின் கருத்துக்களாகும். எந்தவொரு கருத்தும் நிறுவனத்தின் கருத்துக்களை பிரபலிக்காது.