Skip to main content

பூகோள அரசியல் மாற்றங்களுக்கேற்ப தமிழ் மக்களுக்கான அரசியல் நகர்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

-

By: சி.வி.விக்கினேஸ்வரன்

இந்த நிகழ்வை தலைமை தாங்கி நடாத்திக் கொண்டிருக்கின்ற மூலோபாயக் கற்கை நிலையத்தின் இயக்குனர் திரு.யதீந்திரா அவர்களே, அரசியல் ஆய்வுரைகளை மேற்கொள்வதற்காக வருகை தந்திருக்கும் முன்னை நாள் தினக்குரல் பிரதம ஆசிரியர் திரு.வீ.தனபாலசிங்கம் அவர்களே, யாழ் பல்கலைக் கழக அரசறிவியற்துறை தலைவர் கலாநிதி கே.ரி.கணேசலிங்கம் அவர்களே, மற்றும் இந்த நிகழ்வைச் சிறப்பிப்பதற்காக வருகை தந்திருக்கும் சிறப்பு விருந்தினர்களே, கௌரவ விருந்தினர்களே, அரசியல் ஆய்வாளர்களே, பத்திரிகைத்துறை சார்ந்தவர்களே, சகோதர சகோதரிகளே!

இன்றைய தினம் திருகோணமலை மாவட்டத்தின் பிரதேச செயலர் அலுவலகத்திற்கு அருகாமையில் (அங்குரார்ப்பணம் செய்யப்படும்) அமைக்கப்பட்டுள்ள இந்த மூலோபாய கற்கை நிலையத்தைத் திறந்து வைத்து உங்கள் முன் உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன். பல்வேறு அரசியல் அழுத்தங்கள் வேலைப்பழுக்கள் என்பவற்றுக்கு மத்தியில் இன்று திருகோணமலையில் நடைபெறுகின்ற இந்த நிகழ்வுக்கு வருகை தந்துள்ளேன். திரு.யதீந்திரா அவர்கள் ஒரு கல்லில் இரு மாம்பழங்களை ஆய்ந்துள்ளார். இன்று மூலோபாயக் கற்கை நிலையத் திறப்பு விழா நாளை தமிழ் மக்கள் பேரவையின் கருத்தமர்வும் கலந்துரையாடலும். இரண்டையும் ஒழுங்கமைத்தவர் தம்பி யதீந்திரா அவர்களே. அவருக்கு எமது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக!

இன்றையவாறான நிகழ்வுகளில் கலந்து கொள்வதால் துறை சார்ந்தோரின் வலிமையான கருத்துக்களையும் அரசியல் மாற்றங்கள் தொடர்பான அவர்கள் பார்வையையும் தெற்காசிய சூழலில் இலங்கையை மையப்படுத்தி மேற்கொள்ளப்படுகின்ற அரசியல் பொருளாதார விடயங்கள் பற்றிய ஆய்வு முடிவுகளையும் அறிந்து கொள்வதற்கு இது பெரிதும் உதவி அளிக்கின்றது. என்றாலும் இவ்வாறான நிகழ்வுகளில் எடுத்த மாத்திரத்தே கலந்து கொள்வதற்கு எனக்கு நேரம் கிடைப்பதில்லை. நான் இன்று வர முடிந்தமைக்கு முதலில் இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றேன்.

தமிழர்களைப் பொறுத்தவரையில் உலகளாவிய அரசியல் சிந்தனைகள் அல்லது அரசியல் ஆய்வறிவு ஆகியன மிகக் குறைவாகவே கணக்கில் எடுக்கப்படுகின்றன. ஆனால் தென்னிலங்கையைப் பொறுத்தவரையில் இவ்வாறான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு பல நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு சிறப்பாகச் செயலாற்றி வருகின்றன.

1.             பண்டாரநாயக்கா சர்வதேச கற்கை நிலையம் (Bandaranaike Centre for International Studies (BCIS)

2.             லக்ஸ்மன் கதிர்காமர் ஞாபகார்த்தமாக உருவாக்கப்பட்ட சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாயக் கற்கைகள் நிலையம் (Lakshman Kathirgamer Institute of International Relations and Strategic Studies)

3.             திரு.பாக்கியசோதி சரவணமுத்து அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் (Centre for Policy Alternatives

ஆகிய நிலையங்கள் சிறப்பாக செயற்படுகின்ற போதும் தமிழ் மக்கள் அரசியல் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வதற்கான எந்தவொரு கற்கை நிலையமோ அல்லது அமைப்போ எம்மிடையே காணப்படாமை மிகப் பெரியதொரு பின்னடைவாக இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் திரு.யதீந்திரா அவர்களின் முயற்சியில் உருவாக்கப்படுகின்ற மூலோபாயக் கற்கை நிலையமானது (Centre for Strategic Studies)   எதிர்காலத்தில் தமிழ் இளைஞர்களும் அரசியல் ஆர்வலர்களும் அரசியல் பற்றிய ஆய்வறிவுகளைப் பெற்றுக்கொள்ள வழிவகுக்கும் என்று நம்பலாம். சர்வதேச அரசியல் விவகாரத்தில் இலங்கையின் வகிபாகம் பற்றிக் கற்றுக் கொள்வதற்கும்  சர்வதேச அரசியலினால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய சாதக பாதகங்களை குறிப்பாக தமிழ் மக்களுக்கு ஏற்படக்கூடிய நன்மைகள் அல்லது தீமைகள் பற்றி அறிந்துகொள்வதற்கும் இம் மையம் மிகவும் உதவியாக அமையும் எனக் கருதுகின்றேன்.

திரு.யதீந்திரா அவர்களைப் பற்றி நான் ஏற்கனவே அறிந்துள்ளேன். அவர் ஒரு பொறுப்புள்ள பத்திரிகையாளர். அவரின் அரசியல் ஆய்வுகளும் கட்டுரைகளும் காத்திரமான கருத்துக்களை வெளிக்கொணர்வதாக அமைந்திருப்பன. திரு.யதீந்திரா அவர்கள் முகஸ்துதிக்காகவன்றி கருத்துக்களை உள்ளதை உள்ளவாறு துணிந்து கூறுகின்ற ஒரு ஆய்வாளர் ஆவார். அவரது தலைமையின் கீழ் உருவாக்கப்படுகின்ற மூலோபாய கற்கை நிலையம் எமது மக்களின் அறிவுப் பசியை அரசியலிலும் சரி பொருளாதார ரீதியாகவும் சரி, நிறைவு செய்யக்கூடிய ஒரு நிலையமாக பரிணமிக்க வேண்டுமென நாம் யாவரும் விரும்புகின்றோம். அதற்காகச்சம்பந்தப்பட்ட துறைகளில் வல்லுனர்களின் பங்களிப்புக்களைப் பெற்று சர்வதேச விடயங்களில் எம்மவருக்கு சிறந்த அறிவினை வழங்க அவர் முயற்சிக்க வேண்டும். வெறுமனே கல்வியாளர்களுடனும் விற்பன்னர்களுடனும் மட்டும் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளாது சகல தரப்பினருக்கும் இந்த அறிவுகள் சென்றடையும் வகையில் குறுகிய இடைவெளிகளில் ஆய்வரங்குகளையும் கருத்தரங்குகளையும் கூட்டங்களையும் நடாத்தி சர்வதேச விடயங்களிலும் உள்@ரில் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களிலும் எமது மக்களின் அறிவு வளர்ச்சிக்கு அவர் பணியாற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். இந்த விதத்தில் அவரின் செயற்பாடுகள் தமிழ் மக்கள் பேரவைக்கும் ஒரு பக்க பலமாக இருப்பன என்று எதிர்பார்க்கலாம். மக்கள் இயக்கமான தமிழ் மக்கள் பேரவை எமது மக்கள் அரசியல், பொருளாதார சமூகவிருத்தியடையத்தேவையான அறிவைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தே கடமையாற்றி வருகின்றது.

இன்று இந்த நிகழ்விலே கலந்துகொண்டு தங்கள் பங்களிப்பினை வழங்கிய அறிவுசால் விற்பன்னர்கள் அந்தந்தத் துறைகளில் பாண்டித்தியம் பெற்றவர்களாக இருக்கின்றார்கள் என்பது அவர்களின் ஆய்வு உரைகளின் மூலம் அறியப்பட்டன. இப்படியான அறிஞர்களின் சிறப்பான கருத்துக்களை வெளிக்கொணர்வதற்கான திரு.யதீந்திரா அவர்களின் முயற்சி பாராட்டுக்குரியது.

இன்றைய பூகோள அரசியல் மாற்றத்தில் இலங்கையைக் களமாகக் கொண்டு அமெரிக்கா, சீனா, யப்பான், இந்தியா, மேற்கத்தேய நாடுகள் போன்ற பல நாடுகளுந் தத்தமது அரசியல் முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றன. மேலோட்டமாகப் பார்ப்பவர்கள் இந்த வெளிநாட்டு சக்திகளின் நடவடிக்கைகள் உள்நாட்டில் எமது மக்கள் மத்தியில் எவ்வகையான தாக்கங்களை ஏற்படுத்;தி வருகின்றன என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். சரியான தரவுகளின் அடிப்படையில் அவற்றை வெளிப்படுத்த வேண்டியது கல்விச் சமூகத்தினர், அரசியல் ஆய்வாளர்கள், ஊடகவியலாளர்கள் முதலானோரின் கடமையாகும். இன்று பூகோள சுருங்கலானது பல நன்மைகளையும் தீமைகளையும் தந்து வருகின்றது. சீனாவில் மூக்குளைந்தால் அமெரிக்கா தும்முகின்றது. அவர்களின் பூகோள அரசியல் எம்மையும் பாதிக்கின்றது.

அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட இனங்களுக்கிடையேயான கலவரம் மேலெழுந்தவாரியாகப் பார்க்கின்ற போது உள்@ரளவிலான ஒரு இனமுறுகல் சம்பவமாகத் தோன்றினாலும் இவ் விடயங்களின் பின்னணியில் எமது மக்களுக்குத் தெரியாத புரியாத பல அன்னிய சக்திகளின் நேரடியான அல்லது மறைமுகமான பங்களிப்புகள் இருந்துள்ளதை அவதானிக்கலாம். இவ் விடயங்களில் தெளிந்த ஞானமும்; அறிவுமுள்ள பலர் இதனை வெளிப்படுத்தியுள்ளனர். எனவே எந்தவொரு விடயமும் உள்@ர் விடயமெனத் தட்டிக்கழிக்கக் கூடியதாக இல்லை. அவற்றின்  உண்மைத் தன்மையை உள்ளவாறு வெளிப்படுத்தக்கூடிய திறமையும் தகுதியும் இந்தக் கூட்டத்திலே கலந்து உரையாற்றி அமர்ந்திருக்கும் அரசியல் ஆய்வாளர்கள் போன்றவர்களுக்கே உண்டு.

நாம் ஏற்கனவே கூறியது போன்று தென்னிலங்கையில் இருக்கின்ற இது போன்ற சில அமைப்புக்கள் தேசிய, சர்வதேச முக்கியத்துவம் வாய்;ந்த விடயங்களில் ஆய்வுகளைச் செய்து கருத்தரங்குகளை நடாத்தித் தமது முடிவுகளை வெளியிட்டுள்ளனர். சிங்களம் அல்லது ஆங்கிலம் தெரிந்த குழுவினர் அவற்றின் பலன்களை அனுபவித்து வருகின்றனர். இந்த இரண்டு மொழிகளிலும் பரீட்சையம் இல்லாத எமது தமிழ்  மக்கள் நன்மையடையக்கூடிய வகையில் இந்த நிலையம் தனது பணிகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

இலங்கை வரலாற்றை பின்நோக்கிப் பார்க்கின்ற போது ஒவ்வொரு கலவரமும் ஒவ்வொரு நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக இயற்றப்பட்டது என்பது வெளிப்படையாகின்றது. ஒரு சிறுபான்மை இனத்தினுடைய வளர்ச்சியை அல்லது இருப்பை சீர்குலைப்பதற்காகவே திட்டமிட்டு செய்யப்படுகின்ற கலவரங்கள் இவை என்பதுகடந்த கால அனுபவங்கள் வாயிலாக வெளிப்படுகின்றன. 1958ம், 1977ம் 1983ம் ஆண்டுக் கலவரங்கள் தென்னிலங்கையில் தமிழ் மக்களைப் பொருளாதார ரீதியில் பலவீனமாக்குவதற்கும் அவர்களின் இருப்பைக்  கேள்விக்குறியாக்குவதற்குமான செயற்பாடாகவே காணப்பட்டன. தமிழ் மக்களின் வளர்ச்சி கடந்த 30 வருட கால யுத்தத்தினால் வெகுவாகப் பின்தள்ளப்பட்டுள்ள நிலையில் நாட்டின் இன்னொரு சிறுபான்மை இனமாகிய முஸ்லீம்கள் பொருளாதார ரீதியில் வலுப்பெற்று வருவதை சகிக்க முடியாத பெரும்பான்மை இனத்தின் ஒரு வகுதியினரால் அண்மையில் கலவரங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன என்றே கொள்ள வேண்டியுள்ளது. அதன் பின்னணியில் பல்வேறு அரசியல் காரணங்களும் இருந்ததாக யூகங்கள் வெளிப்பத்தப்பட்டுள்ளன. அரசியல்வாதிகள் தங்களுடைய பதவிகளைக் காப்பாற்றுவதற்கோ அல்லது பதவிகளை அடைவதற்கோ அல்லது தமது எதிர்கால அரசியல் நோக்கங்களை முன்னெடுத்துச் செல்வதற்கோ இச் சம்பவங்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன எனவும் பலர் ஊகம் வெளிப்படுத்தியுள்ளார்கள். இது இலங்கை அரசியலில் புதியதொரு அத்தியாயம் அல்ல. பழையவை புதிய போத்தல்களில் வெளிவருகின்றன என்பதே மக்களின் அவதானம். எந்த அளவுக்கு எமது சிங்கள சகோதர சகோதரிகள் மத்தியில் சிலரிடையே ஆழமான தாழ்வு மனப்பான்மை குடிகொண்டுள்ளது என்பதும் ஆய்ந்தறிய வேண்டிய விடயம். இவற்றையெல்லாம் ஆராய்ந்து பார்த்து ஒரு தெளிவான கருத்தை இந்த மையம் எமக்குப் பெற்றுத் தரும் என்று நம்புகின்றோம்.

தமிழ் மக்களுக்கான அரசியல் மாற்றங்கள் மற்றும் பூகோள அரசியல் மாற்றங்களுக்கேற்ப தமிழ் மக்களின் வாழ்க்கையை வழிநடத்தக்கூடிய வகையில் அரசியல் முன்னெடுப்புக்கள் இனிவருங்காலங்களில் முன்னெடுத்துச் செல்லப்பட வழிவகுக்க வேண்டும். நான் அரசியலுக்கு வந்தவுடன் கொழும்பில் சிங்கள அன்பர்களால் நடாத்தப்படும் இவ்வாறான சில கற்கை நிலையங்களின் கருத்து முடிவுகள் வாராந்தம் எனக்குத் தரப்பட்டது. அவை தர்க்க பூர்வமாக அமைந்திருந்தாலும் அடிப்படையில் சில பிழையான ஊகங்களைக் கொண்டிருந்தன. ஆகவே அவற்றை வாசிப்பதைக் கைவிட்டேன். எமது சூழலுக்கும் நன்மைகளுக்கும் ஏற்றவாறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். எனவே சிறந்த வழிகாட்டல்களையும் காத்திரமான அரசியல் கொள்கைகளையும் எமது அரசியல் தலைவர்களுக்கும் பொது மக்களுக்கும் வழங்குவதற்கு இந்த நிலையம் தன்னாலான எல்லா முயற்சிகளையும்; முன்னெடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இந்த நல்ல நிகழ்வுக்கு என்னையும் அழைத்துக் கௌரவித்தமைக்கு எனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து எனது உரையை நிறைவு செய்கின்றேன்.

 

வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் கௌரவ சி.வி.விக்கினேஸ்வரன் அவர்கள், 17.03.2018 அன்று மூலோபாய கற்கை நிலையத்தை திருகோணமலையில் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்து ஆற்றிய உரை.