Skip to main content

இலங்கை மீதான இந்திய - சீன போட்டி: ஒரு மதிப்பீடு

-

By: கே. ரீ. கணேசலிங்கம்

இலங்கை பொறுத்து சீனா இந்தியாவின் போட்டி வளர்ச்சியடைந்து வருகின்ற ஒன்றாகவே விளங்குகின்றது. பிராந்திய அரசியலில் எழுந்த போட்டி சர்வதேச மட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நியமத்திற்கு அமைவாக இந்தியாவின் நடவடிக்கைகள், சீனாவின் நகர்வுகளின் அடிப்படையில் நிகழ்ந்து வருகிறது. சீனாவும் பதிலுக்கு இப்போட்டியில் முனைப்பாக செயற்படுகின்றது. இந்தப் பின்புலத்தில், இந்துசமுத்திரப் பிராந்தியமே இரு தரப்புக்குமான போட்டிக்களமாக மாறியிருக்கிறது. இந்துசமுத்திரத்தின் ஆதிக்கத்தை கைப்பற்றுகின்ற நோக்கத்தில் இரு தரப்புக்குமான போட்டி இலங்கை விடயத்தில் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. குறிப்பாக இலங்கை மீது செல்வாக்கு செலுத்துகின்ற நாடுகள் என்ற வகையில் சீனா எதிர் இந்திய - அமெரிக்க கூட்டு வலுவான ஒன்றாக காணப்படுகின்றது.

இப்போட்டியில் இலங்கையின் அரசியல் பொருளாதார இராணுவ பரப்பிலும் உள்கட்டுமாண வடிவத்திலும் பொருளாதார உதவிகளிலும் வர்த்தக நடைமுறையிலும் மேற்குறித்த இரண்டு அணிகளுக்குமிடையிலும் வலுவான போட்டி நிலவுகிறது. அத்தகைய போட்டியும் இந்தியாவை விட சீனாவும், அமெரிக்காவை விட சீனாவும் என்ற நிலை வளர்ச்சி பெற்றுள்ளது. இத்தகைய சூழலில் இந்தியாவா அல்லது சீனாவா இலங்கையில்  நிலைத்திருக்கும் ஆற்றல் கொண்டது என்ற கேள்வி இயல்பானது. ஒப்பீட்டு அடிப்படையில் இந்தியாவை காட்டிலிலும் சீனாவின் ஒத்துழைப்பு நிலையான வளர்ச்சியை எட்டியுள்ளது என்ற வாதம் காணப்படுகின்றது. இதனால் இந்தியா எடுக்கும் எவ்வொரு முயற்சியும் சீனாவிற்கு நிகரானதாக காணப்படுகின்றதா என்ற கேள்வி தவிர்க்க முடியாயதது. அத்தகைய கேள்விக்கு விடையளிப்பதாக இக்கட்டுரை அமைகின்றது.

இலங்கை இந்து சமுத்திரத்தின் முத்து (The Pearl of the Indian Oceanஎன ஜவகர்லால் நேருவால் அழைக்கப்பட்ட தீவாகும். இந்து சமுத்திரத்தின் மத்தியிலும், இந்தியாவிற்கு தெற்கேயும் மிக அண்மையிலும் அமைந்திருக்கும் இலங்கை உலக அரசுகளால் இலகுவில் கவரக்கூடிய கேந்திர முக்கியத்துவத்தில் காணப்படுகின்றது.  இலங்கைத்தீவின் வரலாறு முழுவதும், அந்நிய சக்திகளின் தலையீடும், ஊடுருவலும் தவிர்க்கமுடியாத அரசியல், பொருளாதார, கலாசார கட்டமைப்பினைத் தந்துள்ளது. பாரிய வலுவான பிராந்திய சக்திகளையும், சர்வதேச சக்திகளையும் கையாளும் வல்லமை இலங்கைத் தீவின் அரசியல் தலைமைகளுக்கும், மக்களுக்கும் இயல்பான பரிணாமமாக உள்ளது. மிக நீண்டகாலம் ஐரோப்பியரும், இந்தியர்களும் மாறி மாறிக் கையாளும் களமாக இலங்கை விளங்கியயை இருபதாம் நூற்றாண்டு முடியும்வரை காணமுடிந்தது. இருபத்தியோராம் நூற்றாண்டில் அக்களம் இந்தியரிடமும், சீனரிடமுமாக மாறியுள்ளது.

இந்தியா செல்வாக்கின் வளர்ச்சிக்கட்டங்கள்.

சுதந்திர இலங்கைக்கு முற்பட்ட காலத்தில் இந்தியர்கள் இலங்கைத்தீவில் இன, மத, மொழி அடங்கிய பண்பாட்டுத் தளத்திலும், படையெடுப்புக்கள் மூலம் நேரடியான செல்வாக்கைச் செலுத்தி வந்தனர்.

1 பொருளாதார முகவர்களாகவும், முதலீட்டாளர்களாகவும் இலங்கைத்தீவை ஆளுகை செய்த இந்தியர்களின் செல்வாக்கு ஐரோப்பியரது வருகையைத் தொடர்ந்து நெருக்கடிக்குட்படுகின்றதை அவதானிக்க முடிகின்றது.

2.ஐரோப்பியர் இலங்கைத் தீவை இந்தியாவிலிருந்து தனித்தியங்கவும், இந்தியாவுக்கான பாதுகாப்பு அரணாகவும் கையாண்டு வந்தனர்.

3 ஐரோப்பியரின் பிரித்தாளும் தந்திரம் இலங்கைத் தீவின் ஆட்சியாளரின் மாற்றீடு பற்றிய அரசியல் பரிபாலனத்தை ஆரம்பிக்க உதவியது. இந்தியர்களுக்கு மாற்றீடாக மேற்குலகுடன் பலமான உறவு வளர ஆரம்பித்தது. இதனால் இந்தியா கட்டற்ற உபாயங்களைக் கையாள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. இது அரசியலாகி, பொருளாதாரமாகி, இராணுவ வாதமாகப் பரிணாமம் எடுத்தது.

 

சுதந்திர இலங்கை பிரித்தானிய சார்புப் போக்கினைக் கடைப்பிடிக்க எடுத்த முடிவினால்  இந்தியாவின் நேரடியான அவதானிப்புக்குள் இலங்கைத்தீவு மாறியது. இலங்கைத் தீவிலிருந்த இனங்களுடன் இந்தியாவுக்கிருந்த உறவானது இலங்கை - இந்திய உறவை தீர்மானித்தது. இலங்கைத் தீவில் அடையாளப்படுத்தப்பட்ட இனங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவின் செல்வாக்குக் கலாசாரத்திலும் ஏனைய அரசியல், பொருளாதார, இராணுவ அம்சங்களிலும் வளர்ந்தது. இதனை மிகச்சுருக்கமாக நோக்குவோம்.

             இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கை இந்தியாவுடன் இணைந்திருக்க வேண்டும் என்ற கருத்தினை ஜவகர்லால் நேரு முதல் பட்டாபி சீதாராமையா வரை கொண்டிருந்தனர். கட்சி வேறுபாடின்றி தேசிய அடையாள வேறுபாடின்றி இந்தியத் தலைவர்கள் அனைவரும், அக்கொள்கையை வலியுறுத்தினர்.

             1947 – 1948இல்  டி. எஸ் சேனநாயக்கா நேரு பேச்சுவார்த்தை, 1953இல் டட்லி சேனநாயக்கா நேரு பேச்சு, 1954 ஜனவரி, அக்டோபர் காலங்களில் கொத்தலாவல நேரு உடன்படிக்கையாகப் பரிணாமம் எடுத்தது. இது இலங்கை இந்திய வம்சாவழியினர் பிரச்சினை என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். 1964இல் சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் மிக முக்கியமான பதிவாக அமைந்தது. 1971இல் ஜே. வி. பி. கிளர்ச்சியை அடக்க இந்திய இராணுவம் வருகை தந்தமை குறிப்பிடத்தக்க இராணுவப்பரிமாணமாக அமைந்தது.

             1974இல் கச்சதீவு தொடர்பாக எட்டப்பட்ட இலங்கை - இந்திய உடன்படிக்கை இந்திய செல்வாக்கை மேலும் உயர்வான நிலைக்குக் கொண்டு சென்றது.

             1977களுக்குப் பின்பு ஈழத்தமிழரின் ஆயுதப் போராட்ட வளர்ச்சியும், தீர்வு முயற்சிகளிலும் இந்தியா அதீத செல்வாக்குச் செலுத்தியது. திம்புப் பேச்சுவார்த்தை, இணைப்பு சீ”, இலங்கை மீதான உணவுப் பொட்டலங்களை விமானமூலம் வீசியமை, இறுதியில் இலங்கை - இந்திய உடன்படிக்கை என பல அம்சங்களில் நேரடியாகக் கவனம் செலுத்தியது.

             இலங்கை - இந்திய உடன்படிக்கைகளில் இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையில் நிகழ்ந்த கடிதப் பரிமாற்றத்தில் திருகோணமலை இயற்கைத் துறைமுகத்தை இந்தியாவின் அனுமதியின்றி இலங்கை எந்த8 அரசுக்கும் கைமாற்ற முடியாதென்பது இந்தியாவின் செல்வாக்கின் உச்ச எல்லையைக் கோடிட்டுக் காட்டுகின்றது.

             அவ்வாறே விடுதலைப் புலிகளுடனான போரும் போருக்குரிய ஆயுத தளபாட, பயிற்சி மற்றும் புலனாய்வுத் தகவல் பரிமாற்றங்களை வழங்கியதில் இந்தியாவின் செல்வாக்கு முக்கியம் வகித்தது. இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க முழு ஒத்துழைப்பினையும் இந்தியா வழங்கியது.9 அவ்வாறே புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் நிகழ்ந்த பேச்சுவார்த்தையிலும்10 இந்தியாவின் செல்வாக்குக் காணப்பட்டது.

             போர் முடிவடைந்தநிலையிலும் வடகிழக்கு பிரதேசத்தின் மீள்கட்டுமானத்திலும், அபிவிருத்தியிலும் அரசியலிலும் இந்தியாவுக்கு அதிக பங்கு உண்டு என்பதனை அவதானிக்க முடிகிறது. குறிப்பாக மீள்குடியேற்றத்திற்கான வீடுகள் அமைக்கும் திட்டம், பெருந்தெருக்கள், ரயில்சேவைக்கான பாதை அமைப்பது, காங்கேசன்துறை பலாலி போன்ற துறைமுக அபிவிருத்தி எண்ணெய் அகழ்வுக்கான கருத்திட்டம் என பல்வேறு விடயங்களில் இந்தியாவின் பங்கு முக்கியமானதாக உள்ளது.

இந்தியா அரசியல் மாற்றங்களிலும் நடைமுறையில் ஏற்படும் நெருக்கடிகளை தீர்ப்பதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இலங்கை அரசாங்கம் மீதான போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச மட்டத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை இந்தியா இலங்கையை  பாதுகாப்பதுடன்; தமிழர் தரப்பில் எழுந்துள்ள தீர்வு பற்றிய விடயங்களில் கரிசனை காட்டுவது12 போல் செயல்பட்டு வருகின்றது.

எனவே இலங்கையின் அரசியல் பொருளதார, கலாசார, இராணுவ விவகாரங்களில் மிக நீண்ட காலமாக இந்தியா கவனமும் கரிசனையும் எடுத்து வருகிறது. புவிசார் அரசியலில் இந்தியாவின் பங்கு மேலானதாக உள்ளது. இலங்கை ஒரு தனியரசாகியபோதும் இந்தியாவின் பாதுகாப்பு வலயத்தில் மிக முக்கிய பிரதேசத்தில் காணப்படுவதனால் இந்தியாவின் முக்கியத்துவம் அதீதமானதாக காணப்படுகிறது.

சீனா செல்வாக்கின் வளர்ச்சிக்கட்டங்கள்.

அபிவிருத்தி அரசியலில் நாடுகளுக்கு இடையில் நிகழும் உறவு மிக முக்கியமானதாக அமைந்துள்ளது. சீனா 1949ஆம் ஆண்டு புரட்சியை வென்று சோஸலிஸ நாடாக மாவோ-சே-துங்கினால் அடையாளப்படுத்தப்பட்டது. இலங்கையின் சுதந்திரமும் சீனாவின் புரட்சியும் அடுத்தடுத்து அமைந்தமை வரலாற்றில் இரு நாடுகளுக்குமான உறவை பலப்படுத்த உதவியது. இலங்கை ஆட்சியாளர்கள் பதிலீடு என்ற அம்சத்தில் பெரிய இந்தியாவை எதிர்கொள்ள பெரியசீனாவை பயன்படுத்திக் கொண்டது மட்டுமன்றி தற்போதைய (2011) இலங்கை அரசாங்கம் இந்தியாவைப்போன்ற ஒன்றுதான்  சீனாவும் என்னும் நிலையை முன்னெடுத்துவருகிறது. சீனா பொருளாதார அடிப்படையில் கடந்த தசாப்தம் முழுவதும் ஏறக்குறைய 10.32 சதவீத வளர்ச்சியை காட்டி வருவது மட்டுமன்றி 2030 இல் உலகில் முதல்தர பொருளாதார வளர்ச்சியடைந்த நாடாக மாறிவிடும் என்ற உலக வங்கியின் கணிப்பீடு சீனாவை நோக்கிய இலங்கையின் உறவுக்கு வலுச்சேர்க்கும் காரணியாக உள்ளது. அந்த வகையில் இலங்கை மீதான சீனச் செல்வாக்கின் வளர்ச்சிக் கட்டத்தை அவதானிப்போம்.

             1948–1956 காலப்பகுதியில் இலங்கையை ஆட்சி செய்த ஐக்கிய தேசியக்கட்சி (ருNP) அரசாங்கம் 1952ஆம் ஆண்டு சீனாவுடன் மிக முக்கிய உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட்டது. அரிசி - ரப்பர் (Rubber-Rice Agreement) உடன்படிக்கை. மிகப் பிரதான உறவின் அடிப்படையானது. இவ் உடன்படிக்கை ஐந்து வருடத்திற்கொரு முறை புதுப்பிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையை கொண்டிருந்தது.

             1956-1965 காலப்பகுதி சிறிலங்கா சுதந்திர கட்சி அரசாங்கமும் (SLFP) சீனாவுடனான இராஜதந்திர உறவை (Diplomatic Relations) 1957ஆம் ஆண்டு பெப்ரவரி முதல் ஏற்படுத்திக் கொண்டது. பரஸ்பரம்  தூதரகங்களை  நிறுவித் தூதுவர்களை அமர்த்திக் கொண்டதில் நெருக்கமான உறவு பலமடைய ஆரம்பித்தது.15 இலங்கை One Chinaஎன்ற கொள்கையை ஆதரித்ததுடன் அரசியல், பொருளாதார, வர்த்தக உறவைப் பலப்படுத்தியது. இக்காலப்பகுதியில் குறிப்பாக 1958இல் சீனப் பிரதமர் இலங்கை வருகை, 1963இல் இலங்கைப் பிரதமர் சீனா விஜயம், 1964இல் மீள சீனப்பிரதமர் இலங்கை வருகை வரலாற்றின் மிக முக்கியமான திருப்பமாக அமைந்திருந்தது. இலங்கைப் பிரதமரின் சீன விஜயம் குறிப்பிட்ட விடயங்களில் இரு நாட்டுக்குமான நெருக்கம் அதிகரித்தது. கொழும்புத்திட்டம் (Colombo Plan) பற்றிய விளக்கமளித்ததுடன் அதற்கான ஆதரவைச் சீனாவிடம் பெற்றுக் கொண்டமை, திருகோணமலை துறைமுகத்தினைச் சீன வர்த்தகத்திற்காக இலங்கை உடன்பட்ட ஒப்பந்தமொன்றினைக் கடல் கொள்கைஎன்ற கருப்பொருளில் கைச்சாத்திடப்பட்டது.

 

             1970 – 1977ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த சிறிலங்கா சுதந்திரக்கட்சி சீனாவின் செல்வாக்கு இடமளிக்கும் விதத்தில் செயற்பட்டது.

இந்துசமுத்திரப் பிராந்தியத்தினை அமைதி வலயமாக்குவதற்கான இலங்கையின் பிரேரணையை சீனா உடன்படிக்கையாக ஆதரித்தமை.

1971ஆம்; ஆண்டு ஜனதா விமுக்திப் பெரமுனவின் (JVP) கிளர்ச்சியை அடக்கச் சீனா தனது கப்பலை கொழும்புத் துறைமுகத்திற்கு அனுப்பியமை.

1972ஆம் அண்டு இலங்கைப் பிரதமர் சீனாவுக்கு விஜயம் செய்தமை.

1976ஆம் ஆண்டுக்குப் பின்பு சீனா இலங்கையின் மிகப் பெரும் கூட்டாளியாக மாறியமை.

மீளப்பெறப்படாத 265 மில்லியன் ரூபா விவசாயக் கடன் வழங்கியமை.

ஐந்து அதிவேக கடற்படைக்கான இயந்திரப் படகுகளை வழங்கியமை.

பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம் (BMICH) கட்டுவதற்கு 35 மில்லியன் அமெரிக்க டொலரை ஒதுக்கியமை.20 போன்ற வரலாற்று  முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்தன.

1977ஆம் ஆண்டு பதவிக்கு வந்த அரசாங்கம் திறந்த பொருளாதாரக் கொள்கையைக் கொண்டிருந்தாலும் சீனாவுடன் நெருக்கமான உறவைப் பேணியது. குறிப்பாக இந்துசமுத்திரப் பிராந்தியத்தின் அமைதியை பேணுவதும், இலங்கை இனப் பிரச்சினையைப் பொறுத்து இந்தியாவின் நிலைப்பாட்டினை நிராகரிப்பதற்காக சீனாவுடன் உறவை மேம்படுத்தலும் அதற்காக 1983இல் இலங்கையின் விசேட தூதுவர் ஹக்டர் ஜெயவர்த்தனாவை சீனாவுக்கு அனுப்பியதும் குறிப்பிடத்தக்கதாகும்.  இதனை அடுத்து 1984இல் 3000 தொன் நிறையுடைய Guided ஏவுகணைகளையும் சீனக் கடற்படைக்கப்பல் மூலம் பரிமாற்றியமையும், சிறிய ஆயுத தளபாடங்களை இலங்கை தருவித்தமையும் முக்கிய திருப்பமாக அமைந்தது.

மேலும் 1986 மார்ச்சில் சீன ஜனாதிபதி லீ இலங்கைக்கு வருகை தந்தமையும் 1987இல் ரணில் விக்கிரமசிங்கா சீனாவுக்கு அரசமுறைப் பயணம் செய்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். மேலும்  -07 ஜெற் விமானங்களும், விமான எதிர்ப்பு பீரங்கிகளும், JY 11 3D விமான ராடர்களும் சீனா வழங்கியதுடன் ஆண்டுக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலரினை இலங்கைக்கு ஆயுதத் தளபாடக் கொள்வனவுக்கு வழங்குவதாக முன்வந்தது.

சீனாவுடனான உறவுபற்றி ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் பாராளுமன்ற உரையாடலின் போதுஇலங்கைக்கும் சீனாவுக்குமான உறவு பொருளாதார, இராணுவ மட்டத்தால் பாரம்பரியம் மிக்கது. தேசிய பொருளாதாரத்துடன் தேசிய அபிவிருத்தியிலும் சீனாவின் உதவிகள் இலங்கைக்கு மிக நீண்டகாலமாக கிடைத்து வந்தது. இலங்கையில் நிகழும் சமாதான நடைமுறைகளில் தலைமைத்துவத்தையும், முக்கியத்துவத்தையும் சீன அரசாங்கத்திற்கு தெரியப்படுத்துவதுடன் சீனாவின் ஆதரவினை எமது அரசாங்கம் கோரியிருக்கின்றது.

மேலும் சீனாவின் ஆதரவு என்பது இலங்கையின் பொருளாதார அடிப்படையில் மட்டுமன்றி இராணுவம் மற்றும் ஆயுத தளபாட விடயங்களிலும் நெருக்கடியான சந்தர்ப்பங்களிலும் சர்வதேச மட்டத்தால் எழும் மனித உரிமை தொடர்பான சர்ச்சைகளிலும் இலங்கைக்கான உதவிகளையும், ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு அதீத பங்காற்றும் நாடாக சீனா விளங்குகின்றது. இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி ஆட்சிக்கு வந்த பிற்பாடு சீனாவுக்கும் இலங்கைக்குமான உறவு மேலும் பலமடைந்துள்ளது.

             இலங்கையில் ஜனாதிபதி அரசமுறை காரணமாக 3 தடவை சீனாவிற்கு விஜயம் செய்தார்.

             சீனாவின் முத்துமாலைகடல் கொள்கைக்கு இசைவாக அம்பாந்தோட்டைத் துறைமுக விருத்தியை சீனா இலங்கைக்கு 90மூமான முதலீடுகளை முன்வைத்து செயற்படுத்தி உள்ளது.

             சீனாவின் அனுசரணையுடன் புத்தளம் மாவட்டத்தில் நுரைச்சோலை அனல்மின் நிலையத்திற்கான திட்டமிடல்களை மேற்கொண்டு வருகின்றது.

             பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம் () மீளச் சீரமைப்பதற்கான நிதிஉதவிகளையும், கட்டுமானப் பணிகளையும் சீனா மேற்கொண்டு வருகின்றது.

             மன்னாரில் காணப்படும் எண்ணை வளத்தினை ஆய்வு செய்யவும், அவற்றின் உரிமத்தினை அனுபவிக்கவும், சீனாவிற்கு உரிமை அல்லது பங்குண்டு என்பதனை எட்டபட்ட உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளமை.

             பாரிய கிராம அபிவிருத்திக்கான கருத்திட்டங்களைச் சுதந்திர வலயங்களாக வகைப்படுத்தி சீனாவிற்கு வழங்கியுள்ளமை.

             வடக்குக் கிழக்குப் பகுதிகளின் மீள்கட்டுமானத்திற்கான கருத்திட்டங்களைக் கையளித்தமை.

             அம்பாந்தோட்டையில் இருந்து கிழக்கு மாகாணம் ஊடாக பலாலி வரையான தரைப்பாதை அமைப்பதற்கான கருத்திட்டங்களை வரைந்தமை.

             சீனாவிற்குச் சார்புடைய நாடுகளோடும் மிக நெருக்கமான அயல் உறவுக் கொள்கைகளை வகுத்துள்ளமையும், இலங்கை மீதான சீனாவின் செல்வாக்கினைக் கோடிட்டுக் காட்டுகின்றது.

முடிவு

எனவே இரு நாடுகளதும்  இலங்கை மீதான செல்வாக்குப் போட்டித் தன்மைக்குரியதாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இரு நாடுகளும் இணைந்து உலகில் அரைவாசிக்கு மேற்பட்ட சனத்தொகையினைக் கொண்டிருப்பதுடன் வேகமாகப் பொருளாதாரத்தில் வளர்ச்சியடையும் நாடுகள் என்ற நிலையை எட்டியுள்ளன. இந்தியாவைவிட சீனா ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமையைப் பெற்றிருப்பதுடன் சர்வதேச பொருளாதார நிலையில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இறுக்கமான அரசியல் கட்டமைப்பையும், அரசியல் உறுதிப்பாட்டையும், உலகளாவிய சந்தைப் பரம்பலையும் கொண்டிருக்கின்றது. மேலும் இலங்கையில் அம்பாந்தோட்டை துறைமுகக் கட்டுமானம் மற்றும் பாரிய உதவிகளையும், ஒத்துழைப்பினையும் நல்கும் நாடு என்றவகையில், பிரதான இடம் பிடித்துள்ளது.

இந்தியா உலகளாவியரீதியில் சீனாவுக்கு அடுத்தடுத்தநிலையில் இருப்பதுடன் அரசியல் உறுதிப்பாடின்மை, உள்நாட்டுக் கட்டுமானத்தில் பலவீனம், சமூக, இன உணர்வுகளில் போட்டித்தன்மை, பழங்குடி வாழ்க்கை முறைமையை அதிகம் பேணுவது எனப் பாரிய பாதகமான நிலையை எட்டியிருக்கிறது. இந்தியாவின் இலங்கை மீதான அழுத்தங்களும், படையெடுப்புக்களும், அழிவுகளை தந்துள்ள நாடு என்ற பதிவை இலங்கை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது. 1971, 1987 ஆண்டுகளிலும் 2009 மே நடவடிக்கையும் அரசியல் மட்டத்திலும், இராணுவ மட்டத்திலும், பொருளாதார அடிப்படையிலும் பாதகமான நிலையை எட்டியுள்ளது.

எனவே இந்தியாவின் புவிசார் அரசியல் செல்வாக்கைக் காட்டிலும் சீனாவின் செல்வாக்கு இலங்கையில் மிகத் தீவிரமாக வளர்ந்துள்ளது. 

கே. ரீ. கணேசலிங்கம். அரசறிவியல் துறைத் தலைவர், யாழ்ப்பாண பலகலைக்கழகம்